ஜனநாயகத்தைக் காப்பாற்ற, பாசிசத்தை அழிக்க, மதவெறியை ஒழித்து மனிதநேயத்தைக் காப்பாற்ற, அனைவரும் அவருடைய பயணத்தைத் தொடருவோம்!
மறைந்த தோழர் சீதாராம் யெச்சூரி நினைவேந்தலில் தமிழர் தலைவர் ஆசிரியர் உரை
சென்னை, செப்.24 தலைவர்கள் மறைந்தாலும், தத்துவங்கள் மறையாது. தத்துவங்கள் மூலமாக தலை வர்கள் வாழ்ந்து கொண்டிருப்பார்கள். ஜனநாயகத்தைக் காப்பாற்ற, பாசிசத்தை அழிக்க, மதவெறியை ஒழித்து, மனிதநேயத்தைக் காப்பாற்ற, அனைவரும் அவருடைய பயணத்தைத் தொடருவோம்! என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.
சீதாராம் யெச்சூரியின் படத்திறப்பு – நினைவேந்தல்!
நேற்று (23.9.2024) மாலை சென்னை காமராஜர் அரங்கில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளர் மறைந்த சீதாராம் யெச்சூரியின் படத்திறப்பு – நினைவேந்தல் நிகழ்வில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார். அவரது நினைவேந்தல் உரை வருமாறு:
எதிரிகளாலும்கூட ஏற்றுக்கொள்ளப்பட
முடியாத ஈடற்ற ஓர் இழப்பாகும்!
வேதனைக்கும், துன்பத்திற்கும் ஆளான ஒரு சூழ்நிலை. அருமைத் தோழராக, தலைசிறந்த போராளி யாக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மகத்தான பொறுப்பாளராக – பல ஆண்டுகள் தொண்டு செய்து – ஓர் அரை நூற்றாண்டு – தான் ஒரு கம்யூனிஸ்ட்டாக மட்டுமல்ல, ஒரு தலைசிறந்த மாமனிதனாகவே திகழ்ந்து, உரிமைக்காகப் போராடி, குரல் கொடுத்து, அதேநேரத்தில், உறவுக்காக அன் பையும், பண்பையும் காட்டிய மகத்தான தோழர் சீதாராம் யெச்சூரி அவர் களுடைய மறைவு என்பது எளிதில் எவராலும், எதிரி களாலும்கூட ஏற்றுக்கொள்ளப்பட முடியாத ஈடற்ற ஓர் இழப்பாகும்!
கம்யூனிசம் ஒருபோதும் மறையாது
– கொள்கைகள் ஒருபோதும் இறவாது
அப்படிப்பட்ட அவருக்கு நாம் நினைவேந்தல் என்று சொல்வதைவிட, அவருடைய தொண்டுக்கு வீர வணக்கம் செலுத்துகின்ற நிகழ்வுதான் இது. அந்த வீர வணக்கம் இருக்கிறதே, ஒரு பக்கத்தில் துயரை ஆற்றிக்கொள்வதற்கு, இன்னொரு பக்கத்தில் அந்தத் துயரிலிருந்து வெளியே வந்து, தொடர் பயணத்தை நாம் நடத்தி, ‘‘சீதாராம் யெச்சூரி மறையவில்லை – கம்யூனிசம் ஒருபோதும் மறையாது – கொள்கைகள் ஒருபோதும் இறவாது – மாறாக அது தன்னுடைய பயணத்தைத் தங்கு தடையின்றி நடத்திக் கொண்டிருக்கும்” என்பதற்கான அடையாளமே அதுவாகும்.
இயற்கையினுடைய கோணல் புத்தி என்று தந்தை பெரியார் அவர்கள் ஓர் அருமையான சொற்றொடரைச் சொல்வார்கள் – இடையில் இப்படியெல்லாம் இழப்பை நாம் சந்திக்கின்றபொழுது, அந்த சொற்றொடர் நினைவுக்கு வருகின்றது. சாதாரணமாக மனிதர்கள் பிறப்பார்கள், இறப்பார்கள் இதுவரையில் உறுதி. ஆனால், அறிவியலில் வாழ்நாள் நீண்டிருக்கிறது. ஆனால், தோழர் சீதாராம் யெச்சூரி அவர்களுடைய மறைவு என்பது இருக்கிறதே, அது நம் எல்லோரையும் உலுக்குகின்ற, எளிதில் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாக இருக்கிறது. அதற்குக் காரணங்கள் எவை என்பதையெல்லாம் இந்நிகழ்விற்குத் தலைமையேற்று இருக்கக்கூடிய அருமைத் தோழர் பாலகிருஷ்ணன் அவர்கள், விரிவாக அவருடைய வாழ்க்கை வரலாற் றைச் சுருக்கமாகச் சொன்னாலும், மனதில் பதியக் கூடிய அளவிற்குச் சொன்னார்கள்.
இந்தியா கூட்டணி உருவாவதற்கு
அடிப்படையில் காரணமாக இருந்தவர்!
அதேபோல, தமிழ்நாட்டிற்கும், திராவிட இயக்கத் திற்கும் அரசியலில் அமைந்த மதச்சார்பற்ற ஒரு கூட்டணி – இந்தியா கூட்டணி இங்கே உருவாவதற்கும் அடிப்படையில் காரணமாக இருந்தவர் சீதாராம் யெச்சூரி என்று மாண்புமிகு ‘திராவிட மாடல்’ ஆட்சி யினுடைய முதலமைச்சர் அவர்கள் சற்று நேரத்திற்கு முன்பாக அவருடைய மரியாதையைச் செலுத் தினார்கள். சிறப்பாகச் சொன்னார்கள்; அவருடைய பெருமைகளைச் சொன்னார்கள்.
தனித்தன்மையோடு பேசக்கூடியவர்!
எப்பொழுதுமே நாங்கள் சந்திக்கின்றபொழுது தமிழிலே அவர் பல நேரங்களில் பேசுவார். மறைந்த நம்முடைய அருமை வீரர் தியாக வீரர் சங்கரய்யா அவர்களுக்கு வீர வணக்கம் செலுத்துகின்ற நேரத்தில், ஏறத்தாழ 45 நிமிடங்களுக்கு மேலாக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை நிலையத்தில் அமர்ந்து உரையாடிக் கொண்டிருந்தோம். அதுமட்டுமல்ல, எந்தப் பொது நிகழ்ச்சியில் சந்தித்தாலும், அவர் தனித்தன்மையோடு பேசக்கூடியவர். அவரைப்பற்றி நிறைய செய்திகளை எடுத்துச் சொல்லலாம்.
இந்த நினைவேந்தல் நிகழ்ச்சியை தோழர்கள் ஏற்பாடு செய்திருக்கிறார்கள் – இது தேவையானதுமாகும். இது வெறும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினுடைய நிகழ்வு மட்டுமல்ல. முதலமைச்சர் அவர்கள் மிக அழகாகச் சொன்னார்,
‘‘சீதாராம் யெச்சூரி அவர்கள் அனைவருக்கும் உரியார்” என்று.
அனைத்துக் கொள்கை உள்ளவர்களுக்கும் அவர் உரியவர். ஏனென்றால், மனிதன் கொள்கையோடு வாழவேண்டும். பல நேரங்களில், அந்தக் கொள்கையைவிட்டுத் தாவினால், மாறினால், அவர்களுக்குப் பொதுவாழ்க்கையில் மட்டுமல்ல, தனி வாழ்க்கையிலும் மரியாதை கிடையாது என்பதை உறுதியாகச் சொல்லக்கூடிய மண் இந்த மண்ணாகும்.
அந்த வகையில், அவர் ஒரு பாடமாகத் திகழ்ந்து கொண்டிருக்கின்றார். மாணவப் பருவத்திலிருந்து அவர் அதே கொள்கையை வலியுறுத்தி, விரிவாக்கி, மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்து, அதற்காகக் கடும் விலையைக் கொடுக்கவேண்டிய நேரத்தில், அடக்குமுறைகளையெல்லாம் சந்தித்து, அதேநேரத்தில் உறுதியாக எவ்வப்பொழுதெல்லாம் நல்ல கருத்துகளை உருவாக்க முடியுமோ – அந்தக் கருத்துகளையெல்லாம் உருவாக்கினார்கள்.
எளிதில் எவராலும் மறைக்கப்பட முடியாது; மறுக்கப்பட முடியாது!
இந்த நாட்டிலே உருவான இப்படிப்பட்ட தலைவர்கள் சமூக விஞ்ஞானிகள் – சாதாரணமானவர்கள் அல்ல அவர்கள். அந்த சமூக விஞ்ஞானம் என்பது இருக்கிறதே, அது எளிதில் எவராலும் மறைக்கப்பட முடியாது; மறுக்கப்பட முடியாது.
அந்த வகையிலே, தோழர் யெச்சூரி அவர்களுடைய தொண்டறம் என்பதும், அவருடைய பங்களிப்பு என்பதும், அன்றைய காலகட்டத்தைவிட, அவர் மறைந்த நேரமிருக்கிறதே, அது நமக்கு மிகப்பெரிய அளவிற்குத் தேவைப்படுகிறது.
ஏனென்றால், மதச்சார்பற்ற ஒரு கூட்டணியை அவர்கள் உருவாக்கினார்கள். ஜனநாயகத்தைக் காப்பாற்றக் கூடிய ஒரு கூட்டணிக்கு அவர் மூலாதாரமாக இருந்தார்கள்.
அரசமைப்புச் சட்டத்தை வளைத்துவிடுகிறார்கள்; அதை அழித்துக் கொண்டிருக்கிறார்கள் என்று சொல்லுகின்ற நேரத்தில், அதனைப் பாதுகாப்பதற்காக ஒரு பெரிய அணி, இந்தியா கூட்டணியாக உருவாகியிருக்கிறது என்று சொன்னால், அதற்கு அவருடைய அடிப்படை பங்கு என்பது எப்படிப்பட்டது என்பதை இங்கு தோழர்கள் எல்லாம் எடுத்துச் சொன்னார்கள்.
உடற்கொடைமூலம் மறைந்தும் வாழ்ந்துகொண்டிருக்கின்றார் பலர் மூலமாக!
இந்நிகழ்வின் தலைவர் தோழர் பாலகிருஷ்ணன் அவர்கள் சொன்னார், சீதாராம் யெச்சூரி அவர்கள் மறைந்த பிற்பாடு, அவருடைய உடல் மருத்துவமனைக்குக் கொடுக்கப்பட்டது என்று.
இங்கே ஆத்மாவிற்கு வேலையில்லை. அதுதான் கொள்கை ரீதியான தத்துவம். அதன்மூலமாக, பலர் வாழ்ந்து கொண்டிருக்கின்றார் என்ற ஓர் அரிய பாடத்தைச் சொன்னார்கள். அதன்மூலமாக அவர் மறையவில்லை என்பதை நாம் புரிந்துகொண்டிருக்கின்றோம். இது மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டு.
உயிருடன் இருக்கும்பொழுது எப்படி வாழுகிறார் என்பதைவிட, அவர் மறைந்த பிறகும் எப்படி வாழ்கிறார் என்பதுதான் மிக முக்கியம்!
மனிதர்களே, நீங்கள் இறந்த பிறகும் வாழவேண்டுமா? அப்படியானால், இறந்த பிறகு, உங்களுடைய உடலை மருத்துவமனைக்குக் கொடுங்கள்; உடல் உறுப்புகளைக் கொடுங்கள் என்று அந்தத் தத்துவத்தை பலர் பேசலாம். தலைவர்கள் மேடையில் அதுபோன்று பேசி முடித்தாலும், சடங்குகளும், சம்பிரதாயங்களும் அந்த மறைந்தவர் வீட்டின் முன்னால் வரும். அதனைப் பின்னுக்குத் தள்ளி, கொள்கையை நிலைநாட்டி, இறந்தவருடைய உடல் மருத்துவமனைக்குத்தான் என்று சொல்லும்பொழுது, உயிருடன் இருக்கும்பொழுது எப்படி வாழுகிறார் என்பதைவிட, அவர் மறைந்த பிறகும் எப்படி வாழ்கிறார். அதன்மூலமாக எப்படிப்பட்ட பாடத்தைச் சொல்லிக் கொடுக்கின்றார் என்பது மிகவும் முக்கியம்.
இந்தியா கூட்டணியை ஒருபோதும் யாரும் அசைத்துவிட முடியாது!
அடுத்ததாக, இந்தக் கூட்டணி; இன்றைக்குப் பல பேர், ‘‘அவர் அதில் மாறுபடுகிறார்; இவர் இந்தக் கருத்தைச் சொல்கிறார்; இந்தியா கூட்டணி உடைந்துவிடும்” என்று எதிரணியினர் ஆசையோடு எதிர்பார்க்கிறார்கள். அவர்கள் அத்துணை பேருக்கும் ஏமாற்றம் தருவதுதான் இந்த நிகழ்ச்சி என்பதை முதலில் தெளிவாகத் தெரிந்துகொள்ளவேண்டும். இந்தக் கூட்டணியை ஒருபோதும் யாரும் அசைத்துவிட முடியாது.
தமிழ்நாட்டிலும் சரி, இந்திய அளவிலும் சரி இந்தக் கூட்டணி உறுதியாக இருப்பது மட்டுமல்ல, தெளிவாக இருக்கிறது. காரணம், இது பதவிக்காக வந்த கூட்டணியல்ல; மக்களுடைய மறுமலர்ச்சிக்காக, உரிமைக்காக, போர்க் களத்தில் நிற்கக்கூடிய கொள்கைக் கூட்டணியாக இந்தக் கூட்டணி இருக்கின்ற காரணத்தினால்தான், இந்த நிலை இருக்கிறது.
உடலால் மாறுபட்டு இருந்தாலும், உணர்வால், கொள்கைகளால் ஒன்றுபட்டு இருக்கின்றோம்!
எனவேதான், சீதாராம் யெச்சூரி அவர்களுக்கு வீர வணக்கம் செலுத்துகின்ற இந்த நேரத்தில்கூட, யாரும் தனியாக வீர வணக்கம் செலுத்துவதைவிட, நாங்கள் எல்லோரும் ஒன்றுபட்டு இருக்கிறோம்; உடலால் மாறுபட்டு இருந்தாலும், உணர்வால், கொள்கைகளால் நாங்கள் எல்லாம் ஒன்றுபட்டு இருக்கின்றோம்.
இதோ மேடையில் இருக்கின்ற சீதாராம் யெச்சூரி அவர்களுடைய படம் இருக்கிறதே, அது வெறும் படம் அல்ல. பொதுவாழ்க்கையில் ஈடுபடுபவர்களுக்கு, கொள்கைப் பயணத்தைப்பற்றி உறுதியாக நினைக்கின்றவர்களுக்கு, மதச்சார்பற்ற ஒரு சூழல் உருவாகவேண்டும் என்று நினைக்கின்றவர்களுக்கு, இன்னமும் இந்தப் பணி முடியவில்லை என்று சொல்லுகின்ற கட்டத்திற்கு, எடுத்துக்காட்டான ஓர் அற்புதமான ஒரு பாடம் தரக்கூடிய படம் என்பதை நீங்கள் எல்லாம் புரிந்துகொள்ளவேண்டும்.
எதைத் தவிர்க்க முடியாதோ, அதனை ஏற்றுக்கொள்ளவேண்டும்!
எனவேதான், இந்த நேரத்தில், அருமைத் தோழர்களே, மார்க்சிஸ்ட் கட்சியின் அருமைத் தோழர்களே, காம்ரேடுகளே, உங்களுக்குச் சொல்கிறோம். எல்லோருக்கும் வேதனையும், துன்பமும், துயரமும் இருக்கிறது. ஆனால், எதைத் தவிர்க்க முடியாதோ, அதனை ஏற்றுக்கொள்வதுதான் இயற்கையின் அறிவு, பண்பாடு.
அந்த வகையில், இப்பொழுது என்ன கடமை?
தோழர் பாலகிருஷ்ணன் அவர்கள் இங்கே அருமையாகச் சொன்னார்கள். சீதாராம் யெச்சூரி அவர்கள் தன்னுடைய வாழ்நாள் முழுவதையும் எதற்காக அர்ப்பணித்தாரோ, எது அவருக்கு இலக்காக இருந்ததோ, எது அவருக்கு இலட்சியப் பயணத்தினுடைய கரையாக இருந்ததோ, அந்தப் பயணத்தை நாம் தொடரவேண்டும்.
அதுவும் இந்தக் காலகட்டத்தில், மனிதநேய மக்கள் கட்சியின் ஜவாஹிருல்லா அவர்கள், ‘கேப்டன்’ என்று, ராகுல் காந்தி அவர்கள் சொன்னதை இங்கே எடுத்துக்காட்டினார்.
தலைவர்கள் மறைந்தாலும், தத்துவங்கள் மறையாது!
ஆம்! அந்தக் கேப்டன் இல்லையே என்று நினைக்கவேண்டாம். இந்தக் கப்பல் என்றும் திசை மாறாது. இந்தக் கப்பலின் பயணம் இலக்கை அடையும். தலைவர்களுடைய தத்துவங்கள்தான் மிக முக்கியம். தலைவர்கள் மறைந்தாலும், தத்துவங்கள் மறையாது. தத்துவங்கள் மூலமாக தலைவர்கள் வாழ்ந்து கொண்டிருப்பார்கள் என்று சொல்லக்கூடிய இந்தக் காலகட்டத்தில், ஜனநாயகத்தைக் காப்பாற்ற, பாசிசத்தை அழிக்க, மதவெறியை ஒழித்து, மனிதநேயத்தைக் காப்பாற்ற, அனைவரும் அவருடைய பயணத்தைத் தொடருவோம்!
யெச்சூரி எதற்காக வாழ்ந்தார்கள்?
எதற்காக அவர்கள் போராடினார்கள்?
எதற்காக நாடாளுமன்றத்தில் குரல் கொடுத்தார்கள்?
எதற்காக அவர்கள் எல்லாத் துறைகளிலும் தன்னுடைய வாழ்க்கையை அர்ப்பணித்தாரோ, அந்தப் பயணத்தை நாம் தொடருவோம், முடிப்போம்.
நாம் வெல்வோம்!
நாம் தோற்கமாட்டோம்!
ஒருபோதும் நாம் சோர்வடைய மாட்டோம்!
அந்தப் பயணங்கள் தொடரும். அது தொடருவது மட்டுமல்ல, எத்தனை தலைமுறைகளானாலும், எங்களுடைய வாழ்வில், யெச்சூரிகள் வருவார்கள், செல்வார்கள். அவர்கள் மறையாமலேயே, அந்தக் கொள்கை உணர்வுகளை நமக்கு ஏற்றிவிட்டார்கள் என்று சொல்லக்கூடிய அந்த வாய்ப்பை நாம் இன்றைக்குப் பெற்றிருக்கின்றோம்.
வீர வணக்கம்! வீர வணக்கம்!! வீர வணக்கம்!!!
எனவேதான் நண்பர்களே, துயரத்தோடு நாம் இன்றைக்கு வெறும் இரங்கல் கூட்டத்தை நடத்தவில்லை – அடுத்தகட்டத்திற்கு நம்முடைய நாட்டைப் பாதுகாப்பதில் நம்முடைய கடமை என்ன என்ற உணவிற்கு வரவேண்டும்.
எனவேதான், வீர வணக்கம்! வீர வணக்கம்!! வீர வணக்கம்!!!
இலட்சிய வீரருக்கு வீர வணக்கம்!
பயணங்கள் முடிவதில்லை – லட்சியங்கள் தோற்பதில்லை!
வெற்றி பெறுவோம்!
நன்றி, வணக்கம்!
– இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் நினைவேந்தல் உரையாற்றினார்.