பெரம்பலூர், செப். 23- பெரம் பலூரில் தந்தை 146ஆவது பிறந்தநாளை முன்னிட்டு “பெரியார் பேசுகிறார்” துவக்க விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது.
தந்தை பெரியாரின் 146 ஆம் ஆண்டு பிறந்தநாள் நாளை முன்னிட்டு மாவட்ட கழக தலைவர் சி.தங்கராசு தலைமையில் பெரம்பலூர் பழைய பேருந்து நிலையம் காந்தி சிலை அருகே நடைபெற்ற “பெரியார் பேசுகிறார்” தொடக்க விழா பொதுக் கூட்டத்தில் மதிமுக கொள்கை விளக்க அணி செயலாளர் ஆ.வந்தியத்தேவன் பங்கேற்று சிறப்புரையாற்றினார்.
அப்போது அவர் பேசுகையில் இந்த பெரம்பலூரில் பெரியார் சிலை அமைக்கப்பட்ட அந்த நேரத்தில் அருகாமையில் உள்ள அரியலூரில் கல்லூரியில் பயின்று கொண்டிருந்தேன், அப்பொழுது முதல் இந்த பெரம்பலூர் என்பது எனக்கு பிரிக்க முடியாத ஒரு ஊராக இருந்து வருகிறது, ஏன் என்று சொன்னால் திராவிடர் கழகத்தின் கூட்டத்திலும், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் கூட்டத்திலும், திமுக கூட்டத்திலும், பகுத்தறிவாளர்கள் கூட்டத்திலும், பங்கேற்றுள்ளேன்.
இன்னும் சொல்லப்போனால் நம் நினைவிலே வாழக்கூடிய அண்ணன் ஜே.எஸ்.ராஜி அவர்கள் திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருந்த ஒரு பகுத்தறிவாளராக வாழ்ந்து மறைந்தாரே அதுபோல இன்றைக்கு திமுகவில் மேலிடத்திலே ஒரு பிரச்சார பீரங்கியாக பெரியார் கொள்கையை ஓங்கி ஒலிக்கக்கூடிய ஒரு அற்புதமான செயல் வீரராக திமுக துணைப் பொதுச் செயலாளர் ஆ.ராசா வாழ்ந்து வருகிறார்.
அப்படிப்பட்ட இந்த பெரம்ப லூர் மண்ணில் தந்தை பெரியாரின் பிறந்தநாள் விழாவில் என்னை பங்கேற்க வைத்தற்காக நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன் என்றும் பேசினார்.
மேலும் இக்கூட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மேற்கு மாவட்ட செயலாளர் ம.க.ச. ரத்தினவேல், மாநில செயலாளர் வீர.செங்கோலன், மதிமுக மாவட்ட செயலாளர் ஜெயசீலன், மதிமுக அரசியல் ஆலோசனைக் குழு உறுப்பினர் துரைராஜ், இந்திய தேசிய காங்கிரஸ் மாவட்ட தலைவர் சுரேஷ், கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் (சிபிஅய்) ஜெயராமன், சிபிஅய்(எம்) மாவட்ட செயற்குழு உறுப்பினர் செல்லதுரை, பகுஜன் சமாஜ் கட்சி மாநில செயலாளர் காமராசு, மாவட்ட கழக மகளிர் அணி சூரியகலா , மாவட்ட இளைஞரணி தமிழரசன் உள்ளிட பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.