திருச்சி, செப். 23- சமூகத்துக்கு திருப்பித் தரும் பழக்கம்தான் நம்மை சிறந்த மனிதர்களாக்கும் என தந்தை பெரியார் கல்லூரியில் நடைபெற்ற அய்ம்பெரும் விழாவில் நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கப்பாண்டியன் தெரிவித்தார்.
திருச்சி தந்தை பெரியார் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மேனாள் மாணவர்கள் சங்கம் சார்பில், அய்ம்பெரும் விழா கல்லூரிக் கலையரங்கில் நடைபெற்றது. கல்லூரி முதலமைச்சர் கா.வாசுதேவன் தலைமை வகித்தார். மேனாள் மாணவர்கள் சங்க பொதுச்செயலாளர் க.ராஜலிங்கம் வரவேற்றார். பேராசிரியர்கள் எல்.செல்லப்பா, மு.அ.முஸ்தபா கமால் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் மேனாள் மாணவர்கள் பலரும் பங்கேற்று தங்களது நினைவுகளை பகிர்ந்து கொண்டனர்.
ஓய்வு பெற்ற காவல் கண்காணிப்பாளர் பன்னீர்செல்வம் பேசுகையில், “கடந்த 1972-1973ஆம் ஆண்டு காலத்தில் மணவர் சமுதாயம் பல போராட்டங்களை கண்டது. பல கல்லூரிகள் அப்போது என்னை சேர்க்க மறுத்தன. நீ வா உன்னை தேத்தி விடுகிறேன் என்று எனக்கு படிக்க வாய்ப்பளித்து இந்தளவுக்கு உயர்வான இடத்துக்கு கொண்டு வந்து அழகு பார்த்தது தந்தை பெரியார் கல்லூரி” என்றார்.
நெல்லை, தென்காசி மாவட்டங்களில் லேசான நில அதிர்வு – மக்கள் அச்சம்!
தென்காசி, செப். 23- திருநெல்வேலி, தென் காசி மாவட்டங்களில் மேற்குத் தொடர்ச்சி மலையை யொட்டிய பகுதிகளில் நேற்று (22.9.2024) மதியம் லேசான நில அதிர்வு உணரப்பட்டது.
நெல்லை மாவட்டத்தில் அம்பாசமுத்திரம், விக்கிரமசிங்கபுரம், பாபநாசம், கல்லிடைக்குறிச்சி, வீரவநல்லூர், மணிமுத்தாறு, மாஞ்சோலை உள் ளிட்ட பகுதிகளில் நேற்று மதியம் 12 மணியளவில் நில அதிர்வு உணரப்பட்டது.
இதேபோல, தென்காசி மாவட்டத்தில் கடையம், பொட்டல்புதூர், முதலியார்பட்டி, ஆழ்வார்குறிச்சி, வாகைகுளம், கல்யாணிபுரம், ஆம்பூர், ஆவுடை யானூர், திப்பணம்பட்டி, பாவூர்சத்திரம், ஆலங் குளத்தில் அதிர்வு உணரப்பட்டது.
நில அதிர்வு உணரப்பட்ட இடங்கள் மேற்குத் தொடர்ச்சி மலைமற்றும் அதையொட்டிய பகுதிகளாகும். லேசான நில அதிர்வை உணர்ந்த பொதுமக்கள் அச்சம் அடைந்தனர். சில பகுதிகளில் வீடுகளை விட்டு வெளியே ஓடி வந்தனர். சுமார் 3 விநாடிகள் வரை நீடித்த நில அதிர்வால் சில வீடுகளில் அடுக்கி வைத்திருந்த பாத்திரங்கள் கீழே உருண்டு விழுந்ததாக கூறப்படுகிறது.
மாவட்ட நிர்வாகம் விளக்கம்: நெல்லை மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
அம்பாசமுத்திரம் பகுதியில் மக்களால் உணரப் பட்ட நில அதிர்வு குறித்து தேசிய நில நடுக்கவியல் மய்யம் மற்றும் கடலியல் தகவல்சேவைகளுக்கான இந்திய தேசிய மய்யத்துக்குத் தெரிவிக்கப்பட்டது. அப்போது, அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் நில அதிர்வு ஏதும் பதிவாகவில்லை என்று தெரிவித்தனர்.
நெல்லை மாவட்டத்தில் தற்போது புதிதாக அமைக்கப்பட்டுள்ள தேசிய பேரிடர் மீட்புப் படை மூலம் கூட்டுப் பயிற்சிகள் மற்றும் விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தென்காசி மாவட்ட ஆட்சியர் ஏ.கே.கமல் கிஷோர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘‘தென்காசி வட்டம் ஆழ்வார்குறிச்சி மற்றும் கடையம் பகுதிகளில் காலை 11.55 மணியளவில் லேசான நில அதிர்வு உணரப்பட்டதாக தகவல் வந்துள்ளது.
தற்போது வரை அரசின் இணையதளத்தில் நிலஅதிர்வு தொடர்பாக பதிவுகள் ஏதும் இல்லை. நில அதிர்வால் யாருக்கும் காயமோ, பிற சேதங்களோ ஏற்பட்டதாகவும் தகவல் இல்லை. கள அலுவலர்கள் அப்பகுதிகளை பார்வையிட்டு, விசாரணை நடத்தி வருகின்றனர்’’ எனத் தெரிவித்துள்ளார்.
ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தின்
திறந்த நிலை முதலீட்டு திட்டம் அறிமுகம்!
சென்னை, செப். 23- இந்தியாவின் மிக மூத்த நிதி நிறுவனங்களில் ஒன்றாகிய எல்.அய்.சி. மியூச்சுவல் ஃபண்ட், உற்பத்தித் துறைக்கான புதிய மியூச்சுவல் ஃபண்டை திறந்த நிலை முதலீட்டு திட்டமாக அறிமுகம் செய்துள்ளது.
இந்தத் திட்டத்தில் செப். 20 முதல் அக்டோபர் 4, 2024 வரை முதலீடு செய்யலாம். இத்திட்டத்தின் கீழ் யூனிட்டுகள் அக்டோபர் 11, 2024 அன்று ஒதுக்கப்படும். இதனை யோகேஷ் பாட்டீல் மற்றும் மகேஷ் பெந்த்ரே ஆகியோர் நிர்வகிப்பர். இந்தத் திட்டம் நிஃப்டி இந்தியா உற்பத்தி குறியீட்டுடன் ஒப்பிடப்படும்.
இந்தத் திட்டம் உற்பத்தித் துறையின்கீழ் வரும் நிறுவனங்களின் பன்முகப்படுத்தப்பட்ட போர்ட்ஃபோலியோவை வழங்க முயல்கிறது. இதில் ஆட்டோமொபைல், மருந்துகள், ரசாயனம், கனரக பொறியியல் தயாரிப்புகள், உலோகங்கள், கப்பல் கட்டுமானம் மற்றும் பெட்ரோலிய தயாரிப்புகள் போன்ற பல துறைகள் அடங்கும்.
இதுகுறித்து எல்.அய்.சி. மியூச்சுவல் ஃபண்டின் மேலாண் இயக்குநர் ஆர்.கே. ஜா கூறுகையில், “இந்தியாவின் வலுவான ஜி.டி.பி. வளர்ச்சி, வேகமான நகரமயமாக்கல், வளர்ந்து வரும் நடுத்தர வர்க்க மக்கள் தொகை, அரசாங்கத்தின் ஏற்றுமதி ஊக்கத் தொகைகள் மற்றும் உற்பத்தியுடன் இணைந்த ஊக்கத் தொகைத் திட்டம் போன்ற கொள்கை முயற்சிகள் உற்பத்தி பொருட்களுக்கான தேவையை அதிகரிக்கின்றன என்று தெரிவித்தார்.