சென்னை, செப். 22- கடந்த 13.9.2024 அன்று காலை பச்சையப்பன் கல்லூரியில் நடைபெற்ற அறக்கட்டளை சொற்பொழிவில் ஒரு சிறப்பான அனுபவம்.
சில வாரங்களுக்கு முன்பு சிறப்பு பேருரையாளர், கழகப் பிரச்சாரச் செயலாளர் தோழர் அருள்மொழி அவர்களிடம் தலைப்பு குறித்துக் கேட்டபோது, ‘தலைப்பு கொடுப்பது சிரமம். காரணம் பெரியார் அவர்கள் குறித்து எதை எடுப்பது எதை விடுப்பது எனத் தீர்மானிப்பது சிரமம்’ என்றார்.
‘இருந்தாலும் அழைப்பிதழில் போட ஒன்று வேண்டுமே என்றதற்கு’, ‘அதனால் என்ன? போடாவிட்டால் என்ன ஆகிவிடும்? So what ?’ என்றார்.
‘சரி, அதற்கு மேல் கேட்க வேண்டாம்’ என்று விட்டுவிட்டோம்.
அன்று அவர் பேசுவதற்கு முன்பாக ‘அதனால் என்ன – So what?’ என்ற தலைப்பிலேயே பேசுங்கள் என்று கேட்டுக்கொள்ளப்பட்டார்..
அதற்கெல்லாம் எளிதில் அசருபவரா என்ன?
‘அதனால் என்ன?’ என்பதைத் தலைப் பாகக் கொண்டு சுமார் 45 நிமிடங்கள் அருமையான கருத்துரை வழங்கினார்.
இன்றைய இளைஞர்களிடம், ஆணோ பெண்ணோ அவர்களிடம், முதியவர்கள் எதையாவது சொல்லி இப்படித்தான் செய்ய வேண்டும் என்று சொன்னால் ‘அதனால் என்ன? செய்யாவிட்டால் என்ன ஆகிவிடப் போகிறது?’ என்று கேட்கும் மனப்பான்மையினைப் பார்க்கிறோம். பல பெற்றோருக்கு இதுவே மன உளைச்சலையும் அளிக்கிறது.
‘அதனால் என்ன’ என்பதை ஒரு எதிர்மறை கேள்வியாகவே பல பேர் கவலையோடு பார்த்து வந்திருக்கி றோம். தோழர் அருள்மொழி அவர் கள் இக்கேள்விக்கு அன்று புதிய பரி ணாமத்தை அளித்தார்.
“இன்றைக்கு நூறாண்டுகளுக்கு முன்பு தமிழ்நாட்டில் அப்படி ஒரு இளைஞர் இதேபோன்று ‘அதனால் என்ன’ என்று இச்சமுகத்தில் கேட்டதின் விளைவாக எதெல்லாம் மிகப் பெரியதாகக் கட்டமைக்கப்பட்டனவோ, எவையெல்லாம் புனிதமாகக் கொண் டாடப்பட்டனவோ அவை எல்லாம் சுக்கு நூறாக உடைந்தன. அந்த ஒற்றைக் கேள்வியால் ஒட்டுமொத்த சமூகமே விழித்தெழும் ஆற்றல் பெற்றது.
ஜாதி அமைப்புகளாகட்டும், மதங் களாகட்டும், கடவுளாகட்டும் எல்லாமே அக்கேள்விக்கு உட்படுத்தப்பட்டன. ஏன், அரசும் அரசாங்கமும் அவற்றின் சட்டங்களும் வழக்காடு மன்றங்களும் கூட ‘அதனால் என்ன’ என்ற கேள்வியிலிருந்து தப்பவில்லை.
இந்தக் கேள்வியைத் தொடர்ந்து எழுப்பிப் பல புரியாத விஷயங்களுக்கு விடை கண்டவர் சென்ற நூற்றாண்டின் மாபெரும் தலைவர் அறிவு ஆசான் பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார்” என்ற போது அரங்கம் முழுவதும் நிறைந்திருந்த மாணவர்களும் ஆசிரியப் பெருமக்களும் மற்ற விருந்தினர்களும் கையொலி எழுப்பி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
பச்சையப்பன் கல்லூரி முதல்வர் முனைவர் பேபி குல்நாஸ் நிகழ்ச்சிக்கு முன்னிலை வகித்தார். தமிழ்த்துறைத் தலைவர் பேராசிரியர் முனைவர் உமா வரவேற்புரை வழங்க எம்.டி. கோபாலகிருஷ்ணன் அவர்களது மகன் கோ. ஒளிவண்ணன் அறக்கட்டளையின் நோக்க உரை வழங்கினார்
எமரால்டு எம்.டி. கோபாலகிருஷ்ணன் அவர்களுடைய பெயரில் தந்தை பெரியார் அவர்களைக் குறித்து ஆண்டுதோறும் சிறப்புப் பேருரை வழங்கும் வகையில் சென்ற ஆண்டு செப்டம்பர் 14ஆம் தேதி தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களால் பச்சையப்பன் கல்லூரியில் இந்த அறக்கட்டளை தொடங்கப்பட்டது.
விழாவினுடைய இன்னொரு சிறப்பு நிகழ்ச்சி தொடங்கியதிலிருந்து முடிகின்ற வரை மாணவர்கள் பொறுமையாக அமர்ந்து தந்தை பெரியார் அவர்களைக் குறித்த பல்வேறு செய்திகளைக் கேட்டு அறிந்ததும், பல இடங்களில் உணர்ச்சி வயப்பட்டு கையொலி எழுப்பி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியமாகும்.
மாநில பகுத்தறிவாளர் கழகத் தலைவர் இரா.தமிழ்ச்செல்வன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்பித்தார்.