வானிலை ஆய்வில் அபாய அறிவிப்பு வடகிழக்கு பருவமழை காலத்தில் இரண்டு புயல்கள் உருவாகும்

viduthalai
3 Min Read

சென்னை, செப்.22 தனியார் வானிலை ஆய்வாளர் (டெல்டா வெதர்மேன்) அளித்துள்ள பருவமழை தகவல்களில் இயல்பை விட அதிகமான மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவக்காற்றால் ஆங்காங்கே சில பகுதிகளில் மழை பெய்து வந்த நிலையில் விரைவில் வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ளது. வடகிழக்கு பருவமழை குறித்த முன்கூட்டிய ஆய்வு மற்றும் கணிப்புகளை தனியார் வானிலை ஆய்வாளர் ஹேமச்சந்தர் அரசுக்கு சமர்ப்பித்துள்ளார்.

அதன்படி, நடப்பாண்டில் வடகிழக்கு பருவமழை அக்டோபர் 20ஆம் தேதி முதல் 27ஆம் தேதிக்குள் தொடங்குவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக கூறப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு போல கிழக்கு காற்று காரணமாக ஏற்படும் மழையை விட காற்றழுத்த தாழ்வு மண்டலங்கள், புயல்கள் காரணமாக அதிக மழை பெய்ய வாய்ப்புள்ளது.

மேலும், வட கடலோர மாவட்டங்கள், தெற்கு ஆந்திராவில் குறுகிய காலத்தில் அதிக மழைப்பொழிவு இருக்கும் என்றும், இந்த பகுதிகளில் காற்றினால் பாதிப்பு இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நவம்பர் 15 முதல் டிசம்பர் 15 கால இடைவெளியில் வங்க கடலில் 2 புயல்கள் உருவாகும் வாய்ப்புகள் உள்ளது.

வடகிழக்கு பருவமழை மேற்கு மற்றும் தெற்கு மாவட்டங்களில் இயல்பை விட குறைவாகவும், வட கடலோர மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களில் இயல்பை விட அதிகமான மழைப் பொழிவு இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.

இந்திய வானிலை ஆய்வு மய்யம் தனது கணிக் கப்பட்ட வடகிழக்கு பருவமழை தகவல்களை இந்த மாத இறுதியில் வெளியிடும் என எதிர்பார்க்கப் படுகிறது.

கொடைக்கானலில்  5 லிட்டருக்கு குறைவான பிளாஸ்டிக் பாட்டில்களை பயன்படுத்தினால் ரூ.20 அபராதம்

திண்டுக்கல், செப்.22 திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் பூங்கொடி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
மலைகளின் இளவரசியான கொடைக்கானலுக்கு பருவ காலம் மட்டுமின்றி ஆண்டு முழுவதும் சுற்றுலாப் பயணிகள் வருகை தருகின்றனர். தமிழ்நாடு மட்டுமின்றி கேரளா, ஆந்திரா உள்ளிட்ட வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் கொடைக்கானலுக்கு படையெடுத்து வருகின்றனர். இயற்கை எழில் நிறைந்த மலைகள், நட்சத்திர ஏரி, குணா குகை உள்ளிட்ட பல்வேறு சுற்றுலா இடங்களை அவர்கள் பார்வையிட்டு ரசிக்கின்றனர்.

இந்தநிலையில் கொடைக்கானலின் பசுமை மற்றும் சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டும் என்றால் பிளாஸ்டிக் இல்லாத கொடைக்கானலை உருவாக்க வேண்டும். அதற்கு 5 லிட்டருக்கு குறைவான பிளாஸ்டிக் பாட்டில்கள் பயன்பாட்டை கொடைக்கானலில் தடை செய்ய வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து கொடைக்கானலில் பிளாஸ்டிக் பாட்டில்கள் பயன்பாடு மற்றும் விற்பனையை தடுக்க மாவட்டம், வட்டார அளவில் கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டது.

இந்த கண்காணிப்பு குழுவினர் கொடைக்கானலில் உள்ள கடைகள், வியாபார நிறுவனங்களில் அவ்வப்போது திடீர் ஆய்வு மேற்கொண்டு சம்பந்தப்பட்ட கடைகள், நிறுவனங்களின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிப்பது, கடைகளை பூட்டி முத்திரை வைப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். அதோடு பொதுமக்களுக்கும், சுற்றுலா பயணிகளுக்கும் பிளாஸ்டிக் பயன்பாட்டால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் கொடைக்கானலில் 5 லிட்டருக்கு குறைவான பிளாஸ்டிக் பாட்டில்களை பயன்படுத்தும் பொதுமக்கள், சுற்றுலாப் பயணிகள், அவற்றை விற்பனை செய்யும் வியாபாரிகளுக்கு ஒரு பாட்டிலுக்கு ரூ.20 அபராதம் விதிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி கொடைக்கானல் நகராட்சி, பண்ணைக்காடு பேரூராட்சி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் பிளாஸ்டிக் பாட்டில்களை பயன்படுத்துபவர்கள், விற்பவர்களுக்கு இன்று (22.9.2024) முதல் பசுமைவரி என்ற பெயரில் ஒரு பாட்டிலுக்கு ரூ.20 அபராதமாக விதிக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *