சென்னை, செப்.22 மக்களுக்கு தரமான மருத்துவ வசதிகள் கிடைக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகளால் தமிழக சுகாதாரத் துறை கடந்த 3 ஆண்டுகளில் 545 விருதுகள் பெற்று சாதனை படைத்துள்ளதாக தமிழ்நாடு அரசு பெருமிதம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக நேற்று (21.9.2024) தமிழ்நாடு அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது தமிழ்நாடு மக்களுக்கு தரமான மருத்துவ வசதிகள் கிடைக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சுகாதாரத் துறையில் புதிய பல திட்டங்களை நிறைவேற்றி வருகிறார். கடந்த 2021-ஆம் ஆண்டு ஆக.5-ஆம் தேதி மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தை முதலமைச்சர் தொடங்கி வைத்தார்.
இன்னுயிர் காப்போம்
இத்திட்டத்தின் மூலம் கடந்த மூன்றாண்டுகளில் ரூ.632 கோடியே 80 லட்சம் செலவில் 1 கோடியே 85 லட்சம் பேர் பயனடைந்துள்ளனர். இன்னுயிர் காப்போம் – நம்மைக் காக்கும் 48 திட்டம் கடந்த 2021 டிச.18-ஆம் தேதி தொடங்கி வைக்கப்பட்டது. இதுவரை 2.25 லட்சம் பேருக்கு உடனடி சிகிச்சைகள் அளிக்கப்பட்டு உயிர் காப்பாற்றப்பட்டுள்ளது. சாலை விபத்தில்சிக்கியவர்களை மருத்துவ மனையில் சேர்ப்போரை ஊக்குவித்து, அவர்களுக்கு ரூ.5 ஆயிரம் ஊக்கப் பரிசும் “நற்கருணை வீரன்” எனும் பட்டமும் வழங்கப்படுகிறது.
தொழிலாளர்களைத் தேடி
அதேபோல தொழிலாளர்களைத் தேடி மருத்துவம் என்கிற புதிய திட்டம் மூலம் இதுவரை 711 தொழிற்சாலைகளில் 5 லட்சத்து27,000 தொழிலாளர்கள் பரிசோதிக்கப்பட்டு, 26,861 பேர் தொடர் சிகிச்சை பெற்று வருகின்றனர். வருமுன் காப்போம் திட்டத்தை கலைஞரின் வருமுன் காப்போம் என பெயர் மாற்றப்பட்டு, கடந்த 3 ஆண்டுகளில் 4,042 முகாம்கள் நடத்தப்பட்டு 36 லட்சத்து 69,326 பேர் பயன்பெற்றுள்ளனர்.
சிறுநீரகப் பாதுகாப்புத் திட்டம்
மேலும் 25 ஆரம்ப மற்றும்25 நகர்ப்புற ஆரம்ப சுகாதாரநிலையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. மேலும் 100 ஆரம்ப சுகாதாரநிலையங்களை அமைக்க நடவடிக்கைககள் எடுக்கப்பட்டுள்ளது. சிறுநீரகப் பாதுகாப்புத் திட்டத்தால் 56 லட்சத்து 7,385 பேர்பயனடைந்துள்ளனர். 2,286 ஆரம்ப சுகாதார நிலையங்களில் பாம்பு மற்றும் நாய் கடிக்கான மருந்துகள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன.
முதலமைச்சரின் காப்பீட்டு திட்டம்
முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்டம் 1,834 மருத்துவமனைகளில் செயல்படுத்தப் படுகிறது. இது 1 கோடியே 47 லட்சம் குடும்பங்களை வாழ்வித்து வருகிறது. உடல் உறுப்பு கொடை திட்டத்தின் மூலம், இதுவரை 467 பேரிடமிருந்து 223 இதயம், 292 நுரையீரல், 409 கல்லீரல், 810 சிறுநீரகம் என மொத்தம் 2,789 உறுப்புகள் பெற்று பலருக்கு மறுவாழ்வு அளிக்கப்பட்டுள்ளது. மூளைச்சாவு அடைந்த உறுப்புக் கொடையாளிகள் 250 பேரின் உடலுக்கு அரசு மரியாதை செய்யப்பட்டுள்ளது.
பணி நியமனம்
மருத்துவப் பணியாளர்கள் தேர்வு வாரியம் மூலம் 3 ஆண்டுகளில் 1,947 மருத்துவர்கள் உட்பட3,238 பேர் பணி நியமனம் செய்யப்பட்டுள்ளனர். 1,911 ஒப்பந்த செவிலியர்கள் காலமுறை ஊதியத்தில் பணிஅமர்த்தப்பட்டுள்ளனர். கரோனா காலத்தில் தற்காலிக பணியாற்றிய 1,412 செவிலியர்கள் ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட்டுள்ளனர்.
நடப்போம் – நலம் பெறுவோம்
சென்னை கிண்டியில் ரூ.387 கோடியில் கட்டப்பட்ட கலைஞர் நூற்றாண்டு நினைவு உயர் சிறப்பு மருத்துவமனையில் ஓராண்டில் மட்டும் 3 லட்சத்து 13,864 பேர்சிகிச்சை பெற்றுள்ளனர். ரூ.1,018.85 கோடியில் 19 அரசு மருத்துவமனைகள் தலைமை மருத்துவமனைகளாகவும், 6 அரசு மருத்துவமனைகளை தரம் உயர்த்தும் பணிகளும் நடைபெறுகின்றன.நடப்போம் நலம் பெறுவோம் திட்டத்தில் 38 மாவட்டங்களில் நடைபயிற்சி பாதைகள் அமைக்கப்பட்டுள்ளன. தமிழ்நாடு கண் கொடையில் சிறந்துவிளங்குகிறது. 3 ஆண்டுகளில் ரூ.3,888.52 கோடியில் மருந்துகளும், ரூ.1,875.26 கோடியில் மருத்துவ உபகரணங்களும் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன.
தமிழ்நாடு சுகாதாரத் துறையின் செயல்பாடுகளை பார்வையிட்ட ஆஸ்திரேலிய அமைச்சர், குஜராத், மேகாலயா மாநில மருத்துவக் குழுக்கள் பாராட்டு தெரவித்துள்ளனர். 3 ஆண்டு களில் தமிழ்நாடு சுகாதாரத் துறை 545 விருதுகளை பெற்றுள்ளது. அமைச்சர் மா.சுப்பிரமணியன் அமைச்சராகப் பொறுப்பேற்றது முதல் தமிழ்நாடு பல விருதுகளையும், பாராட்டுகளையும் பெற்று வருகிறது.