(திருப்பதி லட்டில் மாட்டுக் கொழுப்பு பன்றிக் கொழுப்பு…என வந்த செய்தி கேட்டு ஆசாரஅனுஷ்டானங்களை அனுசரிக்கும் குடும்பத்தில்நடந்த சம்பாஷனை ஒரு கற்பனை)
மாமா: அபச்சாரம்… அபச்சாரம்…
பார்த்தியாடி அநியாயத்தை… லோகத்துல எதையுமே நம்ப முடியலியே…
மாமி: என்னன்னா சொல்றேள்…
மாமா: நீ ஒரு அபிஷ்டு… டி.வி.யைப் போட்டா… அதே நியூஸ்… பேப்பரைப் பார்த்தாலும் அதே நியூஸ்…
மாமி: எதைச் சொல்றேள். நம்ப பிரதமர் அடிக்கடி திரும்பவும் வெளிநாடு போறதையா… இல்லே… ஒரே நாடு… ஒரே தேர்தல் சமாச்சாரத்தையா…
மாமா: நோக்கு எதுவுமே மண்டையிலே ஏறாது… சேதி கேட்டதிலேயிருந்து எனக்குக் கொமட்டிண்டே வருது… எதையும் வாயிலே போடவே பயமாயிருக்கு… ‘‘ஓவ்… ஓவ்…’’ (வாந்தி எடுப்பது போன்ற சப்தம்)
மாமி: என்னாச்சுங்க… எதையாவது காலையிலே ஏடாகூடமா சாப்பிட்டுத் தொலைத்தேளா?
மாமா: காலையிலே சாப்பிடலேடி… போனதடவ பகவான் பெருமாளை தரிசிக்க திருப்பதி போனோமே…
மாமி: அதுவா… ஆஹா… என்ன திவ்யமான தரிசனம்… பெருமாள் என் கண்முன்னே இன்னமும் அப்படியே காட்சி தர்றாரு…
மாமா: ஏண்டி… நோக்கு என்ன புத்தி பேதலச்சு போயிடுச்சா… நான் சொல்ல வந்தத காதுலே போட்டுக்காமா… தத்துபித்தின்னு உளறிட்டிருக்கே…
மாமி: ஆமன்னா… திருப்பதின்னு சொன்னதும்… அப்ப தரிசித்த பெருமாள் அப்படியே காட்சிதர தொடங்கிட்டார்…
மாமா: பெருமாள் தரிசனத்துக்குஅப்புறம் ஆசையா ஏழுமலையான் சந்நிதியிலே லட்டு வடைன்னு வாங்கினோமே…
மாமி: அய்யோ… அதை ஏன் இப்ப நினைவு படுத்துறேள்… தேவாமிர்தமா இருந்துச்சு லட்டு… அதை நம்ப உறவுக்காரவுக்கெல்லாம் கொடுத்தேன்… அவா எத்தனை சந்தோஷப்பட்டா தெரியுமோ!…
மாமா: சந்தோஷப்பட்டிருப்பா… இப்ப வர்ற நியூசை எல்லாம் படிச்சுட்டு அவா அவா விரலை தொண்டைல நுழைய விட்டு வாந்தி எடுத்துண்டு இருப்பா…
மாமி: என்ன சொல்றேள்… எதுக்கு இப்படி விதாண்டா வாதம் பேசிண்டிருக்கேள்…
மாமா: விதண்டாவாதம் இல்லேடி! சுத்த விபரம் கெட்டவளாயிருக்கியே… வந்திருக்கிற சேதியெல்லாம் நோக்கு எதுவும் தெரியாதா?
மாமி: என்ன அப்படிப்பட்ட சேதி!
மாமா: திருப்பதி ஏழுமலையான் கோவிலில் விநியோகம் செஞ்ச பெருமாள் பிரசாதமான லட்டுலே மாட்டுக் கொழுப்பு, பன்றிக் கொழுப்பு எல்லாம் கலந்திருந்ததாம்…
மாமி: என்னங்க… இப்படி திடீர்னு தலையிலே இடியை போடுறேள்… நீங்க சொல்றேளே அது நிஜமா?
மாமா: சத்யவாக்கு… இப்ப ஹாட் நியூசே அதான்!
மாமி: என்ன சர்வ சாதாரணமா இதைச் சொல்றேள்…
மாமா: வேற என்ன செய்யச் சொல்றே… பகவான் சந்நிதியிலேயே இப்படிப்பட்ட அநியாயம் நடந்திருச்சு… அவாள அவரு சும்மாவிட்டுடுவாறா? அவா குடும்பம் விளங்குமா?
மாமி: அவாள பகவான் தண்டிக்கிறது அப்புறம் இருக்கட்டும்… அந்த லட்டை வாங்கி லட்சக்கணக்கான நம்மவா சாப்பிட்டுத் தொலைச்சிருக்காளே…
மாமா: அயோத்தியிலே கோயில் கட்டி பாலராமரை நம்ம பிரதமர் மோடிஜி பிரதிஷ்டை செஞ்சாரே. அதுக்கு பல லட்சம் லட்டு அதே திருப்பதியிலேயிருந்து போயிருந்திருச்சாம்…
மாமி: இப்படி எல்லாரையும் பாவ காரியம் செய்ய வச்சுட்டாளே! இதுவரை அனுஷ்டித்த ஆச்சாரங்க ளெல்லாம் பாழாயிடுச்சே… என்ன நேரத்திலே இதைச் சொல்லித் தொலைச்சேளோ… வயிறு கடகடங்குது… (வாவ்… வாவ்… – என வாந்தி எடுக்க முயற்சிக்கிறார்) அப்போது அந்த வழியாக வந்த அம்பி, மாமி வாந்தி எடுக்க முயற்சிப்பதைக் கண்டு…
அம்பி: (கிண்டலாக) என்ன மாமி… இந்த வயசுல வாந்தி எடுக்கிறேள்…
மாமி: (கோபமாக) கட்டையில போறவனே… நாங்க இங்க வெந்து சுண்ணாம்பா கொதிச்சுண்டிருக்கோம்… நோக்கு கிண்டலா இருக்கா…
மாமி: அய்யய்யோ… தப்பா நெனைச்சிக்கிடா திங்கோ மாமி… நிலைமை தெரியாம சும்மா தமாஷா பேசினேன்… என்ன ஆயிடுச்சு மாமி.
மாமா: மண்டூகமே; நோக்கு எதுவும் தெரியாதா… கேள்விப்படவே இல்லையா? திருப்பதி லட்டு விஷயம் ஊரெல்லாம் சந்தி சிரிச் சிண்டிருக்கே…
அம்பி: ஓகோ… அந்த டென்ஷனில் இருக்கேளா? நீங்க அந்த லட்டை சாப்பிட்டேளா?
மாமி: நாங்க மட்டும் சாப்பிடலேடா… பகவான் ஷேத்திரத்திலிருந்து ஆசையா வாங்கிட்டு வந்து இஷ்ட மித்ரா எல்லாருக்கும் கொடுத்து தொலைச்சுட்டோம்டா…
மாமா: (அம்பியிடம்) ஏண்டா அம்பி… ஊர்ல இதபத்தி என்ன பேசுறாள்…
அம்பி: பலரும் பல விதமா பேசுறா… வடக்கே இந்துத்துவா வாதிங்க… மாட்டுக்கறி சாப்பிட்ட வாளை எல்லாம் இந்து விரோதின்னு கூறி அடிச்சு உதைக்கிறாளோ– இல்லையோ… இப்ப நாடு முழுவதும் மாட்டுக்கொழுப்பை – பன்னி கொழுப்பை எல்லாம் திண்ணு ருக்காளே அவாளை எல்லாம் இந்துத்துவா பேர்வழிகள் எங்கே கட்டி வைச்சு அடிப்பான்னு கேலி பேசுறா…சோசியல் மீடியாவில நம்மவா எல்லாரையும் வறுத்தெடுக்கிறா…
மாமா: செய்யமாட்டாளா என்ன; பி.ஜே.பி.ஆட்சிக்கு வந்ததும் நம்மவா ஆடுற ஆட்டத்தைக் கண்டு அந்த ஏழுமலையானுக்கே பொறுக்கல…
அம்பி: அதான் திருப்பதி வெங்கடாஜலபதி இந்தக் கூட்டத்தை வச்சு செஞ்சிட்டாருன்னு பேசிண்டிருக்கா…
மாமா: யாராவது ‘சுனா மனா’ கட்சிக்காரா பேசியிருப்பா…
அம்பி: ‘சுனா மனா’ வா…? என்ன மாமா சொல்றேள்…
மாமா: அந்த காலத்துல ஈரோடு ராமசாமி நாயக்கர் கட்சியைத்தான் அப்படி சொல்லுவா…
அம்பி: பெரியாரைச் சொல்றேளா? அவர் கட்சி திராவிடர் கழகமாச்சே மாமா…
மாமா: நோக்கு அதெல்லாம் தெரியாதுடா… திராவிடக் கழகத்தின் கோஷங்களில் ஒன்று சுயமரி யாதை… சுயமரியாதைக் கட்சியை கிண்டலடிக்க நம்மவா அப்ப ‘காயின்’ பண்ணுன வார்த்தைடா அது…
அம்பி: மனிதனுக்கு சுயமரியாதை வேணுன்னு சொன்னதுல என்ன மாமா தப்பு… எதுக்காக அதை கிண்டல டிக்கணும்…
மாமா: நோக்கு அதை எல்லாம் விலாவரியாக சொல்ல முடியாது… இப்ப திருப்பதி லட்டுல மாட்டுக் கொழுப்பு இருந்துச்சுன்னு அந்த முதலமைச்சரே சொல்றாரு… இன்னும் சில பேரு அதை மறுக்கிறா?
மாமி: ஆமா.. நீங்க என்ன நெனைக்கிறேள்… அது நெஜமா இருக்குமா? நம்புறேளா?
மாமா: எப்படி நம்பாம இருக்க முடியும்…முதல் மந்திரியே சொல்றாரே!
அம்பி: பழைய முதலமைச்சர் அது பொய்; அதுல அரசியல் இருக்குன்னு சொல்றாரே…
மாமா: நம்ப நட்டா ஜீயே ஆந்திர அரசிடம் அறிக்கை கேட்டுள்ளாரே! அதுவே என்னவோ இருக்குன்னுதானே காட்டுது…
மாமி: ‘நெருப்பு இல்லாம புகையுமா’ ஏதோ நடந்தி ருக்கு.. நீங்க ஆச்சார அனுஷ்டானங்களைக் கறைச்சிக் குடிச்சவராயிற்றே இதுக்கு எதுவும் பரிகாரமே இல்லையா
மாமா: இதுபோல இக்கட்டான சூழல் வந்தா என்ன பன்றதுங்கறதுக்கு நம்ம பெரியவா பல பரிகாரங்களைச் சொல்லியிருக்கா…
மாமி: அப்ப என்ன; பரிகாரத்தை செஞ்சிடுவோம்… சொல்லுங்க…
மாமா: (சொல்லத் தயங்குகிறார்)
அம்பி: நேக்கு ஒரு பரிகாரம் தெரியும் மாமா; அதனை நான் எங்கேயோ படிச்சிருக்கேன்…
மாமி: அவர் சொல்ல பயப்படறா நீயே சொல்லித் தொலையேண்டா…
அம்பி: இது தொடர்பா சமஸ்கிருத ஸ்லோகம் ஒன்றேஇருக்கு…
மாமா: என்னன்னு விளக்கமா அந்த ஸ்லோகத்தை சொல்லேண்டா?…
அம்பி: இதை விளக்கமா சொல்றேன் கேட்டுக்குங்க…
மாமி: பீடிகை போடுவதை விட்டுட்டுஅதை சீக்கிரம் சொல்லுடா… அம்பி.
அம்பி: அசைவ உணவு ஒருவரை பாவத்திற்கு ஆளாக்குகிறது. சில காரணங்களால் அசைவ உணவை தவிர்க்க இயலாது சாப்பிட்டு விட்டால் பாவ பரிகாரமாக ‘பஞ்ச கவ்யாவை’ அருந்திட்டால் அந்தப் பாவம் நீங்கிடும் என்பது அந்த ஸ்லோகம்.
மாமி: பஞ்ச கவ்யாவா அப்படின்னா.. என்ன; நான் கேள்விப்படலேயே…
அம்பி: அதுபற்றி நான் படிச்ச ஸ்லோகத்தை சொல்றேன்…
“கோமூத்ரம் கோமயம்
சைவ ஷீரம் ததா!
பஞ்சராத்ரம் ததாஹார்;
பஞ்ச கவ்யேன் ஸ்ரீத்யதி!
மாமி: (மாமாவைப் பார்த்து) என்னன்னா உளறுறான் இவன்…
மாமா: அவன் ஊளறளேடி… அந்த ஸ்லோகத்தின் அர்த்தத்தைக் கேட்டுக்கோ; சொல்றேன்…
பசுவின் பால், பசுவின் சிறுநீர்
பசுவின் சானம்,தயிர் மற்றும் நெய் ஆகியவற்றின் கலவைக்குப் பெயர் தான்பஞ்ச கவ்யா!
அம்பி: ஆமாம் மாமி; மாமா சரியா சொல்லிட்டார். மாமா சொன்ன இந்த கலவையை, அதாவது பசுவின் சிறுநீர், பசுவின் சாணம் உள்ளிட்ட அந்தக் கலவையை அய்ந்து இரவுகளில் சாப்பிடுவதால் அசைவ உணவை உட்கொள்வதால் ஏற்படும் பாவம் நீங்கும்.
மாமி: ஏன்டா அம்பி நிஜத்தை சொல்றீயா?
அம்பி: நான் சொல்லலே மாமி இந்து சமய நூல்கள் சொல்லுது மாமி, செய்யும் பாவங்களிலிருந்து மனிதனைக் காப்பாற்றி அவனை ஆன்மீகப் பாதையிலே இட்டுச் செல்ல இந்து சமயநூலில் சொல்லப்பட்டதுதான் இது!
மாமி: பஞ்சகவ்யாவுக்கு ‘அந்த’ லட்டே மேல்… பஞ்ச கவ்யாவை நெனைச்சாலே கொமட்டிண்டு வருது ஆளை விடுங்கடாசாமி…
நன்றி: ‘முரசொலி’, 21.9.2024