தஞ்சை, செப். 21- வல்லம், பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரியில் பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரின் 146ஆவது பிறந்த நாள் மிகச்சிறப்பாக கொண்டாடப்பட்டது.
உறுதிமொழியேற்பு
16.09.2024 அன்று காலை 9.30 மணியளவில் தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள ஆணையின்பபடி அரசு அலுவலகங்களிலும், கல்வி நிலையங்களிலும் எடுக்கப்பட வேண்டிய சமூகநீதி நாள் உறுதிமொழி எடுக்கப்பட்டது. உறுதிமொழி எடுக்கும் நிகழ்வில் இப்பாலிடெக்னிக் கல்லூரியின் முதல்வர் முனைவர் அ.ஹேமலதா, துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள் மற்றும் அனைத்து மாணவர்களும் கலந்து கொண்டனர்.
பல்வேறு போட்டிகள்
பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரின் பிறந்த நாளை முன்னிட்டு பேச்சுப்போட்டி, கட்டுரைப்போட்டி, கவிதைப்போட்டி, ஓவியப்போட்டி மற்றும் கழிவுப்பொருட்களிலிருந்து கலைப்பொருட்கள் தயாரித்தல் ஆகிய போட்டிகள் நடத்தப்பட்டது. இப்பாலிடெக்னிக் கல்லூரி மாணவ மாணவிகள் போட்டி போட்டுக் கொண்டு ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.
பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு முதல், இரண்டு மற்றும் மூன்றாமிடம் வென்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.
கருத்தரங்கம்
17.09.2024 அன்று பெரியார் பாலிடெக்னிக் கல்லூரியின் வளாகத்தில் தந்தை பெரியாரின் 146ஆவது பிறந்தநாள் விழா கருத்தரங்கம் காலை 10 மணியளவில் நடைபெற்றது. விழாவில் பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் முனைவர் அ.ஹேமலதா தலைமையேற்று உரையாற்றினார்;. அவர் தனது உரையில் தந்தை பெரியாரின் அறிவியல் தொலை நோக்கு சிந்தனையில் தோன்றிய அறிவியல் எண்ணங்கள் தான் தற்போது பயன்படுத்தும் அறிவியல் தொழில்நுட்ப சாதனங்கள் என்று கூறிய அவர் மாணவர்கள் அனைவரும் தந்தை பெரியாரின் கருத்துக்களை உள்வாங்கி பகுத்தறிவு சிந்தனையோடு திகழ வேண்டும் என்று குறிப்பிட்டார்.
“தந்தை பெரியாரின் மூடநம்பிக்கை எதிர்ப்பு” என்ற தலைப்பில் இப்பாலிடெக்னிக் கல்லூரியின் கட்டட எழிற்கலைத் துறைத்தவைவர் கே.பி. வெள்ளியங்கிரி வாழ்த்துரை வழங்கினார். மேலும் மின்னியல் மற்றும் மின்னணுவியல் துறைத்தலைவர் ஆர்.இராஜாராமன், முதலாமாண்டு துறைத் தவைவர் பி.சாந்தி மற்றும் முதலாமாண்டு விரிவுரையாளர் எஸ்.மைக்கேல்ராஜ் ஆகியோர் பல்வேறு தலைப்புகளில் வாழ்த்துரை வழங்கினார்கள்.
ஆங்கில பேராசிரியர் ஆர்.அய்ய நாதன் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்து வரவேற்புரை யாற்றினார். விழாவில் வேதியியல் பேராசிரியை ஜி.செங்கொடி இணைப்புரை வழங்கினார்.
மின்னணுவியல் மற்றும் தொலைத் தொடர்பியல் துறைத்தவைவர் க.ரோஜா நன்றியுரையாற்றினார்.
மரக்கன்றுகள் நடுதல்
16.09.2024 அன்று பிற்பகல் 3.00 மணியளவில் தந்தை பெரியார் பிறந்த நாளை முன்னிட்டு பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் சுமார் 20 மரக்கன்றுகள் நடப்பட்டன. இந்நிகழ்வில் பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரியின் முதல்வர், துறைத் தலைவர்கள், நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர்கள் பேராசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.