தமிழ்நாட்டு மீனவர் பிரச்சினைக்கு தீர்வு காணப்படாவிட்டால் ஆளுநர் மாளிகை முற்றுகை

viduthalai
2 Min Read

சிபிஎம் மாநில செயலாளர்
கே.பாலகிருஷ்ணன் எச்சரிக்கை!

ராமேசுவரம், செப்.21- “தமிழ்நாடு மீனவர்கள் தாக்கப் படும் விஷயத்தில் ஒன்றிய அரசு உரிய நடவடிக்கை எடுக்கா விட்டால் தமிழ்நாடு மீனவர்களை திரட்டி ஆளுநர் மாளிகையை முற்றுகையிடுவோம்” என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.

தமிழ்நாடு மீனவர் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காண வலியுறுத்தி ராமேசுவரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக நேற்று (20.9.2024) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ராமேசுவரம் பேருந்து நிலையம் எதிரே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தலைமை வகித்தார். சிபிஎம் மாநிலக் குழு உறுப்பினர் பாஸ்கரன், மாவட்டச் செயலாளர் காசிநாத துரை, மாவட்ட செயற்குழு உறுப்பினர் கருணாகரன், தாலுகா செயலாளர் சிவா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஆர்ப்பாட்டத்தின் கே.பாலகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறியது: “இலங்கை அரசு தமிழ்நாடு மீனவர்களை தண்டனை கைதிகளாக மாற்றி, பெரும் தொகைகளை அபராதமாக விதித்து கண்மூடித்தனமான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது.

சமீபத்தில் மீனவர்களுக்கு மொட்டை அடித்து தன்மானத்தை பறிக்கும் செயலை செய்துள்ளது. இலங்கை அரசின் இத்தகைய அத்துமீறிய செயல்களை கண்டிக்காத பிரதமர் நரேந்திர மோடி, தாங்கள் தான் உலகத்துக்கே சமாதானத்தை கொண்டு வருவதாக பேசி வருகிறார்.

ரஷ்யா – உக்ரைன் போரை நிறுத்துவதற்கு சமாதானம் செய்ய தொடர்ந்து இருநாட்டுக்கும் பயணம் செய்யும் மோடி இலங்கை அரசை கட்டுப்படுத்தி மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க முடியாதா? பாதிக்கப்பட்ட மீனவர் களுக்கு தமிழ்நாடு அரசு தொடர்ந்து நிவாரண தொகை வழங்கி வருகிறது. ஆனால் ஒன்றிய அரசு இதுவரை சல்லிக்காசு கூட கொடுக்கவில்லை.

தமிழ்நாடு முதலமைச்சர் மீனவர்கள் பிரச்சினை குறித்து தொடர்ந்து ஒன்றிய அரசுக்கு கடிதம் எழுதி அழுத்தம் கொடுத்துக் கொண்டு இருக்கிறார். ஆனால், எதையும் கண்டுகொள்ளாமல் காதுகேளாத அரசாக பிரதமர் நரேந்திர மோடியின் ஆட்சி இருக்கிறது.

ஒன்றிய அரசு மீனவர்களை பிரச்சினைகளை தீர்த்து, கோரிக்கைகளை நிறைவேற்றி நிரந்தர தீர்வை எடுக்க வேண்டும். தவறும் பட்சத்தில கடலோர மாவட்ட மீனவர்களை ஒன்று திரட்டி ஆளுநர் மாளிகையை முற்றுகையிடுவோம்” என்று அவர் கூறினார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் மீனவ சங்க பிரதிநிதிகள், மதிமுக நிர்வாகி கராத்தே பழனிச்சாமி, காங்கிரஸ் தலைவர் ராஜீவ்காந்தி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகி செந்தில்வேல் உள்ளிட்ட நூற்றுக் கணக்கானோர் கலந்து கொண்டனர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *