1924ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 20ஆம் நாளன்று சிந்துவெளிப் பண்பாட்டை உலகிற்கு அறிவித்தார் பிரிட்டிஷ் இந்தியாவின் தொல்லியல் துறை தலைமை இயக்குநராகப் பணியாற்றிய சர் ஜான் மார்ஷல். இந்தியத் துணைக்கண்டத்தின் வடமேற்குப் பகுதியில் பண்டைய காலத்தில் செழித்தோங்கிய சிந்துவெளிப் பண்பாட்டின் எச்சங்கள் இன்றும் இந்தியத் துணைக்கண்டம் முழுவதும் பரவிக் காணப்படுகின்றன.
சிந்துவெளிப் பண்பாட்டு அறிவிப்பிற்கு முன்பு, இந்திய வரலாறு வேதங்கள், புராணங்கள், காவியங்கள் முதலியவற்றை அடிப்படையாகக் கொண்டது என நம்பப்பட்டது. ஆனால், இந்த அறிவிப்பு, இந்தியத் துணைக்கண்ட வரலாற்றைப் புதிய பாதையில் கொண்டு சென்றது. இந்த அறிவிப்பு வெளிவந்த நாள்முதலே சிந்துவெளிப் பண்பாட்டின் தோற்றத்தோடு தொடர்புடையது -திராவிட இனமென்றும், அது திராவிடப் பண்பாட்டை அடித்தளமாகக் கொண்டது என்றும் ஆராய்ச்சிமுறையில் எடுத்துரைக்கப்பட்டு வரப்படுகிறது. அதனை நினைவுகூரும் விதமாக சிந்துவெளிப் பண்பாட்டுக் கண்டுபிடிப்பு நூற்றாண்டு விழா இந்தாண்டு (2024) தொடக்கத்திலிருந்து பல்வேறு வழிகளில் கொண்டாடப்பட்டு வரப்படுகிறது.
தற்போதைய தமிழ்நாடு அரசு தொல்லியல் சார்ந்த செயல்பாடுகளில் அதிக கவனம் செலுத்தி பல முன்னெடுப்புகளைச் செய்துவருவது மகிழ்ச்சி அளிக்கிறது. கீழடியில் அகழாய்வு மேற்கொண்ட ஒன்றிய அரசு, அங்கு எதுவும் இல்லை என்று கூறி தோண்டிய அகழாய்வுக் குழிகளை மூடிவிட்டுச் சென்றது ஆனால் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை, கீழடியைக் கையில் எடுத்து, அகழாய்வுகளை மேற்கொண்டு பல வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தொல்பொருட்களை வெளிகொணர்ந்து, பண்டைய தமிழ்ப் பண்பாட்டை உலகிற்கு அறிவித்தது. இவ்விடத்தில் தொல்லியலாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் உருவாக்கிய அறிக்கையை வெளியிடாமல் ஒன்றிய அரசு நிறுத்தி வைத்ததையும் இணைத்துப் பார்க்கலாம். ஒன்றிய அரசு, குறிப்பாக தொல்லியல் சார்ந்த செயல்பாடுகளில் நியாயமற்ற முறைகளில் நடந்து வருவது அனைவரும் அறிந்ததே. தரவுகள் சார்ந்த உண்மை எதுவானாலும் அதனை ஏற்றுக் கொள்வதுதான் பகுத்தறிவு. ஆனால் அதற்கு ஒன்றிய அரசு தயாராக இல்லை என்பதை ஒன்றிய அரசின் பல்வேறு செயல்பாடுகள் தொடர்ந்து காண்பித்து வருகின்றன.
கீழடி மட்டுமல்லாது, பொருநை, சிவகளை, வெம்பக்கோட்டை, பொற்பனைக்கோட்டை உள்ளிட்ட பல இடங்களில் அகழாய்வுகளை தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை மேற்கொண்டு வருகிறது. இவற்றின்மூலம் வெளிகொணரப்படும் ஆய்வுகள் இந்திய வரலாற்றில் பெரும் தாக்கங்களைச் செலுத்தும் வகையில் அமைந்துள்ளன.
இத்தகைய செயல்பாடுகளின் ஊடாகவே சிந்து வெளிப் பண்பாட்டுக் கண்டுபிடிப்பு நூற்றாண்டு விழாவைக் கொண்டாடும் விதமாக தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை ஒரு பன்னாட்டு கருத்தரங்கு நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. இத்துடன் இவ்வாண்டு ஜுன் மாதம் நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்ற மானியக் கோரிக்கை பட்டியலில் சர் ஜான் மார்ஷல் அவர்களுக்கு ரூ 50 இலட்சம் மதிப்பீட்டில் சென்னையில் உருவச் சிலை அமைக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.
இதற்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு நன்றி. சிந்துவெளிப் பண்பாட்டை உலகிற்கு அறிவித்தோடு மட்டுமல்லாமல் சிந்துவெளிப் பண்பாட்டில் திராவிடக் கருதுகோளுக்கு அடிக்கல் நாட்டியவர் ஜான் மார்ஷல் அவரைப் போற்றும் வகையில் சிலை அமைக்கப்படும் என்று இந்த அறிவிப்பை தமிழ்நாடு அரசு வெளியிடப்பட்டது.
சிந்துவெளிக்கும் திராவிடத்திற்கு இடையிலான பல்வேறு தொடர்புகளை அறிஞர்கள் சுனிதி குமார் சட்டார்ஜி, அருட்தந்தை ஹென்றி ஹிராஸ், அஸ்கோ பர்போலா, ஐராவதம் மகாதேவன், ஆர். பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் எடுத்துக்காட்டி வருகின்றனர். ஆர் பாலகிருஷ்ணன், பண்டைய தமிழ் இலக்கியம் தமிழ்ப் பண்பாட்டின் பின்னணியில், சிந்துவெளி விட்ட இடமும். சங்க இலக்கியம் தொட்ட இடமும் ஒன்றெனத் தரவுகளுடன் கூறுகிறார்.
சிந்துவெளிப் பண்பாடு திராவிடப் பண்பாடு என்பதற்கான பல்வேறு சான்றுகள் தொடர்ந்து வெளிவந்த வண்ணம் உள்ளன. இத்தகைய சூழலில், சிந்துவெளிப் பண்பாட்டுக் கண்டுபிடிப்பு நூற்றாண்டு விழாவைக் கொண்டாடுதல் முக்கியமாகிறது. அதன்வழி தமிழர்கள் அனைவரும் சர் ஜான் மார்ஷலின் பங்களிப்புகளை அறிந்து கொள்வதும். அகழாய்வுகளின்வழி உண்மையான வரலாற்றைக் கற்பதும் நமது காலத்தின் தேவையாகிறது.
இந்திய வரலாற்றை மீள்கட்டமைப்பு செய்வதில் சர் ஜான் மார்ஷல் ஆற்றிய பங்களிப்பை மறக்கமுடியாது.
சிந்துவெளிப் பண்பாட்டுக் கண்டுபிடிப்பு நூற் றாண்டைக் கொண்டாட வேண்டியது நமது கூட்டுக் கடமையாகும்.