சிந்துசமவெளி நாகரிகம் திராவிடர் நாகரிகமே என்று தொல்லியல் ஆய்வு அறிஞர்களால் திட்டவட்டமாக ஆதாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்பட்ட நிலையில், அதனை ஆரியர் (வேத) நாகரிகம் என்று திரித்துக் கூற, ஒன்றிய
பி.ஜே.பி. அரசு திட்டமிட்டுள்ளது. அதற்கான வரலாற்றுக் குழுவில் 17 பேரில், 14 பேர் பார்ப்பனர்கள் என்பதிலிருந்தே – இதன் சூழ்ச்சிப் பின்னணி புரிகிறது. இதனை எதிர்த்து தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன் எச்சரித்ததும், தக்க சான்றோர்களை அழைத்து ஒரு பன்னாட்டுக் கருத்தரங்கம் நடத்தப்படும் என்று நமது ‘திராவிட மாடல்’ அரசின் முதலமைச்சர் அறிவித்திருப்பதும் வரவேற்கத்தக்கது என்றும், வரலாற்றைத் திரித்தால் தமிழ்நாடு எரிமலையாகப் பொங்கி எழும் என்றும் எச்சரித்து திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை விடுத்துள்ளார்.
அவரது அறிக்கை வருமாறு:
திராவிட நாகரிகம் காலத்தால் மூத்தது; கருத்தால் விளைந்தது, பண்பாட்டால் உயர்ந்தது.
நமது சங்க இலக்கியங்களில் குறிப்பிடப்படும் நகரப் பண்பாடும், வளர்ச்சியும் சிந்துவெளியின் தொல்லியல் ஆகும்.
ஆய்வின்மூலம், தொல்லியல் சர்வ துணையுடன் சர்.ஜான் மார்ஷல் தலைமையிலான ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்து, மறுக்க முடியாத சான்றுடன்கூட கருதுகோளை முன்வைத்து உலகை வியக்க வைத்தனர்.
சிந்து சமவவெளி நாகரிகத்தைத் திரிப்பதா?
இந்திய வரலாற்றைத் திரித்து, வேதங்கள், இதி காசங்கள், புராணங்களோடு மட்டுமே வரலாற்றைத் தொடர்புபடுத்தி, ஏதோ வேத கால நாகரிகம்தான் அது – திசை திருப்பல்கள், திரிபுவாதமும் நிலைத்துவிட வேண்டும் என்று திட்டமிட்டு ஆரியம் முயன்றது. ஓர் ஆய்வாளர் என்கிற தன்மையில், விருப்பு – வெறுப்பு – தற்சார்பு நிலை என்பதற்கெல்லாம் அப்பாற்பட்ட வரலாற்று ஆய்வுக்காகவே தனித்து நின்று அந்த சிந்துவெளி நாகரிகம் திராவிடர் நாகரிகம் என்பதை 1924 – செப்டம்பர் 20 ஆம் தேதி ‘தி இல்லஸ்ட்ரேட் லண்டன் நியூஸ் (‘The Illustrated London News‘) என்ற இதழில் சர் ஜான் மார்ஷல் கண்டறிந்ததை உலகுக்கு அறிவித்து ஒரு புது வெளிச்சத்தைப் பாய்ச்சினார்!
இப்போது தமிழ்நாட்டில் கீழடி ஆய்வு – சங்க இலக்கியப் பதிவுகள், தொடர்புகள் குறித்து நமது வரலாற்று ஆய்வாளர்கள் அந்த வெளிச்சத்தின் பரவுதல் – தாக்கம்பற்றி ஆய்வு செய்து வருகி்ன்றனர் என்பது மகிழத்தக்கச் செய்தி! (20.9.2024).
திராவிடர் கழகப் பொதுக்குழு தீர்மானம்!
சில மாதங்களுக்கு முன்பே திராவிடர் கழகப் பொதுக்குழு – குடந்தையி்ல் இதை நூற்றாண்டாகக் கொண்டாடிடத் தீர்மானித்தது!
சர். ஜான் மார்ஷல் ஆய்வினால் மொகஞ்சதாரோ, ஹரப்பா முதலிய இடங்களில் தொல்லியல் துறைமூலம் கண்டறிந்தவற்றை வைத்து திராவிட நாகரிகம் என்று உறுதி செய்தார்!
அதற்கான ஆய்வு நாயகரான சர். ஜான் மார்ஷல் அவர்களுக்குத் தமிழ்நாட்டில் சிலை அமைப்பதோடு, வரலாற்று ஆய்வின் பொன்னேடு பதித்துள்ள தக்க சான்றோர்களை அழைத்து ஒரு பன்னாட்டுக் கருத்த ரங்கையும் தமிழ்நாடு ‘திராவிட மாடல்’ அரசு ஏற்பாடு செய்யும் என்று நமது முதலமைச்சர் அவர்கள் நேற்று (20.9.2024) உறுதி செய்துள்ளது மிகவும் பாராட்டி வரவேற்கப்படவேண்டிய ஒன்று!
இதற்கிடையில், சுமார் 1500 ஆண்டுகளுக்குப் பின்னால் உருவான ‘வேதகால நாகரிகமாகக்’ காட்ட திட்டமிட்டே கால வரிசையில் முன்னுக்குத்தள்ளி, வழமையான தங்களது திரிபுவாதத்தை ஆரியமும், அதன் மத, அரசியல் வெளிப்பாடான ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க. அரசும் அதனை வேத கால நாகரிகம் என்று அதிகாரப்பூர்வமாக அப்புரட்டினுக்கு முத்திரை குத்தி நிலை நிறுத்தி, பார்ப்பனர்களையே கொண்ட ஒரு குழு அமைத்து, அரசு இயந்திரத்தின் அச்சையே மாற்றத் தொடங்கி, முழு மூச்சாக இறங்கிவிட்டனர்!
இதைச் சுட்டிக்காட்டி, பல மாதங்களுக்கு முன்பே கண்டித்து எழுதினோம்.
தி.மு.க முப்பெரும் விழாவில்,
தி.மு.க.வின் பொதுச்செயலாளர் துரைமுருகனின் சரியான கருத்து!
இதைத்தான் சென்னையில், தி.மு.க. முப்பெரும் விழாவில் தி.மு.க.வின் பொதுச்செயலாளர் அமைச்சர் துரைமுருகன் கண்டித்து சரியான கருத்தினைச் சொன்னார்– பொருத்தமாகக் கேட்டார்!
அதனை அடுத்து ஆசிரியர் கடிதமாக, அவர்மீது பாய்ந்துள்ளது
‘‘தற்போதுள்ள சரித்திரத்தால் என்ன கேடு? ஹரப்பா, மொஹஞ்சதாரோ, திராவிட நாகரிகம் என்றோம். அது ஆரியர்கள் நாகரிகம் என, சமீபத்தில் டில்லி அரசு, இந்தியாவின் சரித்திரத்தை மாற்றி எழுதுவதற்காக அமைத்துள்ள கமிட்டி கூறுகிறது. அதாவது, அந்த ஆரிய நாகரிகம், சரஸ்வதி நாகரிகம் என்கிறது!
அந்தக் கமிட்டியில் 17 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். மூன்று பேர் அரசு அதிகாரிகள் – மீதி 14 பேரும் ‘பிராமணர்கள்’. எனவே, ‘பழைய பல்லவி’யைப் பாட வேண்டிய நிலை; இந்த நிலை தொடர்ந்தால், தி.மு.க. தன் வீரியத்தைக் காட்டும் நிலை வரும்’’
என்று சரியான எச்சரிக்கையைத் தந்துள்ளார்!
பார்ப்பனர்கள் திருந்தி விட்டார்களா?
தி.மு.க. நிகழ்ச்சி அது என்பதால், தி.மு.க. நிலைப்பாடு (வருங்காலத்தில்) இது என்று அறிவித்தது – பெரியார் மண்ணான தமிழ்நாடு கட்சி, மதம், ஜாதி பேதமின்றி கொதித்து எரிமலையாய் வெடித்துக் கிளம்புவது உறுதி! உறுதி!!
இப்போது ‘பார்ப்பனர்கள் திருந்தி விட்டார்கள்’ என்று சில ‘‘தமிழ்ப் புண்ணாக்குகள்’’ உளறுகின்றன. அவர்களுக்கு இத்தகவலை கவனப்படுத்தி, இன்னும் ஆரியத்தின் அடிவருடிகளாகாதீர் என்று எச்சரிக்கின்றோம்!
‘சுட்டால்தான் நெருப்பு‘ என்பதுபோல, சுடாமலேயே நெருப்பின் பொறுப்பு அது என்பதை உணர்ந்துகொள்வீர்!
கி.வீரமணி
தலைவர்
திராவிடர் கழகம்
சென்னை
21.9.2024