சென்னை, செப். 21- தமிழ்நாடு பசுமை எரிசக்தி கழகம் சென்னையில் உள்ளஅடையாறு, கூவம் ஆறுகளில் சிறிய வகையிலான நீர்மின் நிலையங்களை அமைப்பதற்கான சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்யும் பணியை தொடங்கி உள்ளது.
இதுகுறித்து, அதிகாரிகள் கூறுகையில், “அரசு அண்மையில் அறிவித்த சிறிய நீர்மின் நிலைய கொள்கையில், தமிழ்நாட்டின் தெற்கு மற்றும் மேற்கு மாவட்டங்களில் உள்ள காவிரி, வைகைஆற்றுப்படுகையில் சிறு புனல் மின்னுற்பத்தி நிலையங்கள் அமைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அதன்படி, சென்னையில் உள்ள கூவம், அடையாறு ஆகிய சிறிய ஆறுகளில் சிறு புனல் மின்னுற்பத்தி நிலையங்களை அமைப்பது குறித்த சாத்தியக் கூறுகள் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன. மழைக் காலங்களில் இந்த ஆறுகளில் ஓடும் தண்ணீரின் மூலம் 100 கிலோவோல்ட் முதல்10 மெகாவாட் வரை மின்சாரம் தயாரிக்கும் வகையில் இந்த மின்நிலையங்கள் அமைக்கப்படும். தமிழ்நாடு அரசு வரும் 2030ஆம் ஆண்டுக்குள் 20 ஆயிரம் மெகாவாட் பசுமை எரிசக்தி மின்சாரத்தை உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயித்துள்ளது.
இந்த இலக்கைஅடைய இந்த சிறு புனல் மின்னுற்பத்தி நிலையங்கள் உதவிகரமாக இருக்கும். தற்போது, தமிழ்நாடு முழுவதும் 47 நீர்மின் நிலையங்கள் உள்ளன. இவற்றில் 2,321 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது” என்று தெரிவித்தனர்.