இயற்பியல் விதிப்படி பொருட்கள் இறுக்கமாக இருக்க அதை இறுக்கி வைத்திருக்க ஒரு புறப்பொருள் தேவை. அந்தப் புறப்பொருள் வலிமையாக இருக்கவேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. அதாவது லட்டு என்ற உணவுப் பொருளுக்கு எண்ணெயில் சிறிய சிறிய துளிகளாக மாவு(பூந்தி) போடப்பட்டு பொரித்த பிறகு அதை சர்க்கரைப் பாகில் ஊறவைத்து சர்க்கரைப்பாகில் நன்றாக ஊறிய பிறகு அதனோடு நெய் உள்ளிட்ட பிற பொருட்களைக் கலந்து உருண்டையாக பிடிப்பார்கள்; இதுதான் லட்டுவாக உருவாகும் கதை.
நெய் அதிகம் கலந்தால் பூந்திகள் ஒன்றோடு ஒன்று ஒட்டாது லட்டு உருவம் வராது, நெய் குறைவாக இருந்தால் லட்டு உருண்டையாக இருக்காது. திருப்பதி லட்டுகள் மிகப் பெரியவையாக இருக்கும். அந்தப் பெரிய அளவு லட்டுகளை அதன் வடிவிலேயே வைக்க ஏதோ ஒரு பொருள் தேவைப்படுகிறது. அதுதான் வனஸ்பதி என்ற கொழுப்பு. அது எந்த உருவில் என்பதுதான் இங்கே கேள்வி.
பொதுவாக தாவரக் கொழுப்புகள் அதிகம் பிடிப்புத்தன்மை இல்லாதவை. குளிர்காலத்தில் தேங்காய் எண்ணெய் பாட்டிலில் உறை நிலைக்குச் சென்றுவிடும். அதே போல்தான் தாவர எண்ணெய்களும் – இருப்பினும் அதன் திடத்தன்மை உறுதியற்றது.
மிருகக் கொழுப்பு உறுதியானது. அதை உருக்கி ஒரு பொருளோடு கலந்துவிட்டால் அந்தப் பொருட்களைப் இறுகப் பிடித்துக்கொள்ளும். எடுத்துக்காட்டாக நாம் அன்றாடம் பயன்படுத்தும் மருந்து கேப்ஸூல்கள் மிருக கொழுப்பால் ஆனவை. அவை உடலுக்குள் சென்ற பிறகு நமது உடலில் உள்ள சூடும் இரைப்பையில் உள்ள அமிலமும் கேப்ஸுல்களைக் கரைத்து மருந்தை வெளியில் எடுத்து நோயால் பாதிக்கப்பட்டப் பகுதிகளுக்கு கொண்டு செல்லும் வகையில் மாற்றிவிடும்.
https://www.treehugger.com/ என்ற அறிவியல் ஆய்வு மய்யத்தின் இணையதளத்தில் என்ன என்ன உணவுப் பொருட்களில் மிருகக் கொழுப்பை பயன்படுத்துவார்கள் என்று சான்றுகளோடு பட்டியலிட்டுள்ளனர். அதில் இனிப்புப் பொருட்கள் அனைத்திலுமே பசு மாட்டுக் கொழுப்பைக் கலந்து பயன்படுத்துவதாகக் குறிப்பிட்டுள்ளனர்.
கேண்டி எனப்படும் மிட்டாய், ஜெல்லி வகை மிட்டாய், மர்ஸ்மெல்லோ எனப்படும் பஞ்சு மிட்டாய், சிலவகை கடலைமிட்டாய்(பீநட் ஸ்வீட் பார்) உருளைக்கிழங்கு சிப்ஸ், கிரீமிற்கு பயன்படும் பவுடர் சர்க்கரை, சாக்லேட் கரைசல் (கேக் மற்றும் டோனெட் போன்ற இனிப்பு பொருட்களின் மீது அலங்கரிக்கப் பயன்படுவது). சிலவகை சுவிங்கம் மற்றும் வெண்ணிலா சுவையுடன் கூடிய அனைத்து இனிப்பு பானங்கள் அய்ஸ்கிரீம்கள் எல்லாவற்றிலும் மிருகக் கொழுப்பு பயன்படுத்தப்படுகிறது.
இது ஒன்றும் பெரிய குற்றம் இல்லை. ஏன் பயன்படுத்து கிறார்கள் என்றால் அந்த உணவுப் பொருட்களை உறுதியாக வைக்கவும், சுவையைக் கூட்டவும், கரையும் தன்மையை நீண்ட நேரம் ஆக்குவதற்கும் தான் பயன்படுத்தப்படுகிறது. இது ஒன்றும் உடலுக்கு கெடுதியானது கிடையாது, எலும்பு மூட்டுகளின் உராய்வுத் தன்மையை வலுப்படுத்தும், முதுகெலும்புகளின் சங்கிலி இணைப்புகளின் சவ்வுகளை உறுதிப்படுத்தும். குறிப்பாக மூளைகள் கடத்தும் தகவல்களை கொண்டு செல்லும் நரம்பு இணைப்புகளின் நெகிழ்வுத் தன்மையை மிருகக் கொழுப்புகள் எளிதாக்கும் என்று அறிவியல் ஆய்வுகளே கூறுகின்றன.
திருப்பதி லட்டு மட்டும் வெறும் பசு நெய்யைக் கொண்டு உருட்டி உறுதியாக உள்ளது எப்படி என்பதை அறிவியல் பூர்வமாக திருப்பதி தேவஸ்தானம் உணவுப் பொருள் வல்லுநர்களை வரவழைத்து அதனை ஆய்வு செய்து வெளியிட்டால் நல்லது. இனிப்பில் மிருகக் கொழுப்பு கலப்பது ஒன்றும் பெரிய குற்றம் அல்ல.
கிருஷ்ண தேவராயர் காலத்தில் திருப்பதி கோயிலில் பிரசாதமாக லட்டு கொடுக்கப் படவில்லை. அப்போது துளசியையும் கோயில் குளத்தின் நீரையுமே தீர்த்தமாக கொடுக்கும் நடைமுறை இருந்தது, பிறகு கிருஷ்ண தேவராயர் கோயிலுக்கு வருபவர்களுக்கு உணவு கொடுக்க உத்தரவிட்டு அதற்காக ஒரு தொகையையும் நன்கொடையாக கொடுக்கிறார்.
இது 1500களில் தொடங்கி கடைசி ஹிந்து அரசரான சிக்க தேவராயா (1690) காலம் வரை இருந்தது. அதன் பிறகு திருப்பதி உள்ளிட்ட பகுதிகள் சுல்தான்கள் மற்றும் நவாபுகளின் கைகளில் வந்துவிட்டது. இருப்பினும் கோயில் நடைமுறைகளில் எந்தப் பாதிப்பும் இல்லை. இந்த நிலையில் சிலைக்கு படையல் என்ற பெயரில் 1715ஆம் ஆண்டிலிருந்துதான் லட்டு கொடுக்கும் முறை உருவானது. அதற்கு ஒரு கதை விடுவார்கள்.
அதாவது கும்பகோணத்தைச் சேர்ந்த ஒரு பார்ப்பனரின் வீட்டிற்கு வந்த ஒருவர் அவர் வீட்டில் செய்த லட்டை தின்றுவிட்டு சென்றாரம்.
பிறகுதான் வீட்டிற்கு வந்தவர் சாத் சாத் பெருமாள்தான் என்று கனவில் வந்து கூறினாராம். உடனே தனது குடும்பத்தோடு பிட்ஷை எடுத்து அதில் பொருட்கள் வாங்கி நூற்றுக்கணக்கான லட்டுகளைச் செய்து ஒரு வண்டியில் ஏற்றி திருப்பதி கொண்டு சென்றாரம். அதனைக் கண்ட பெருமாள் மகிழ்ந்து அவர்களுக்கு சிறப்பு தரிசனம் கொடுத்தார் என்று ஒரு கதையைக் கூறுவார்கள்.
இதுபோன்று நூற்றுக்கணக்கான கதைகள் உண்டு, மகாராட்டிராவில் இருந்து வருபவர்கள் கோலாப்பூரில் உள்ள ஒரு பார்ப்பனரின் கனவில் பெருமாள் வந்தார். அவர் லட்டை கொண்டுவந்தார் என்று, ஒவ்வொரு ஊருக்கும் ஒரு கதை சொல்வார்கள்.
சரி, இவர்கள் கொண்டு வந்த லட்டை 100 ஆண்டுகளுக்குப் பிறகுதான் பக்தர்களுக்கு கொடுக்கும் முறையை கொண்டுவந்தது கோவில் நிர்வாகம். அதுவும் அனைவருக்கும் கிடையாது. மன்னர் வகையறாக்களுக்கும் பெரும் பணக்காரர்களுக்கும் மட்டுமே உண்டு.
ஆனால், கோரிக்கை அதிகம் வர – அனைவருக்கும் கொடுத்தால் நன்கொடை தரும் மன்னர் வாரிசுகளும் பெரும் பணக்காரர்களும் கோபித்துக் கொள்வார்கள் என்பதால் – கடந்த நூற்றாண்டில் துவக்கத்தில் லட்டை தரம் பிரிக்கத் துவங்கினார்கள்.
ஆஸ்தான லட்டு
இது வி.வி.அய்பிக்களுக்கு மட்டுமே கொடுக்கப்படும். இதுகுறித்து அமிதாப் பச்சன் கூட பெருமையாக கோன் பனேகா குரோர்பதி (நீங்களும் கோடீஸ்வரர் ஆகலாம்) என்ற நிகழ்ச்சியில் கூறியுள்ளார்.
அதாவது ஒரு லட்டு ஒரு கிலோ எடையுடன் இருக்கும். மிகுதியான அளவில் முந்திரி, பாதாம், குங்குமப்பூ போன்றவற்றோடு வளைகுடா நாடுகளில் இருந்து கொண்டுவந்த உயர்தர மருத்துவ குணம் கொண்ட பேரீச்சை கலந்து தயாரிக்கப்படுகிறது. இதற்கான கற்கண்டு சீனாவில் இருந்து பாரம்பரிய முறைப்படி தயாரிக்கப்பட்டு வாங்கப்படுகிறது.
கல்யாண லட்டு
இந்த லட்டுக்கள் பெருமாள் கோயில் கல்யாண விழாக்களில் கலந்து கொள்பவர்களுக்கு வழங்கப்படுகிறது. இது 750 கிராம் எடையுடன் இருக்கும். இந்த லட்டுக்கான தேவை மிகுதியாக உள்ளது.
நைவேத்ய லட்டு
நைவேத்ய லட்டு என்ற பெயரிலும் கொடுக்கிறார்கள். இது பார்ப்பனர்கள் – அதாவது அவாள்களுக்கு மட்டுமே, இந்த நைவேத்ய லட்டு தொடர்பான தகவல்கள் பரம ரகசியமாக உள்ளது. அப்படி என்னதான் அதில் கலப்பார்களோ.
புரோகித லட்டு
இதுதான் அங்கு செல்லும் பக்தர்களுக்கு கொடுக்கப்படும் லட்டு. இந்த லட்டுதான் அளவில் சிறியது. இது 175 கிராம் எடையுடையதாக இருக்கும்.
சரி, திருப்பதி லட்டில் மாட்டுக் கொழுப்பு கலந்திருப்பதாக ஏன் திடீரென பெரும் பரபரப்பு ஏற்படுத்தப்பட்டது என்றால், இதிலும் அரசியல் லாபம் உள்ளது. ஒன்று ஒரே நாடு ஒரே தேர்தல் தொடர்பான எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பை மட்டுப்படுத்த – இந்த விலங்குகளின் கொழுப்பு விவகாரத்தை கையில் எடுத்துள்ளார்கள். திருநெல்வேலிக்கே அல்வா கொடுப்பதைப் போன்று திருப்பதி லட்டிலும் கூட அரசியல் செய்யத் துவங்கிவிட்டார்கள்.