நாட்டில் உள்ள கல்வியாளர்கள், அறிவியலாளர்கள், சிந்தனையாளர்கள், படைப்பாளர்கள் அனைவரும் சோதிடம் விஞ்ஞானம் அல்ல என்றும், அதனைப் பல்கலைக் கழகப் பாடத்திட்டத்தில் கொண்டு வந்திருப்பது பேதமை என்றும் கூறி வருகிறார்கள். இவர்களின் குரல்கள் தனித்தனியாக ஒலிக்கிறதேயின்றி இயக்கமாக உருப்பெற வில்லை. இதுவே பழைமை வாதிகளுக்கு வலிமையை வழங்குகிறது. அவர்கள் தடையின்றி தங்கள் இலக்குகளை நோக்கிச் செல்கிறார்கள்.
சோதிடம் மனிதனின் நம்பிக்கையைச் சிதறடிக்கிறது எதிர்காலப்புனைவுகளை உருவாக்குகிறது. அறிவு சார்ந்த செயல்பாடுகளைத் தடுக்கிறது. மூடநம்பிக்கைகளில் மூழ்கடிக்கிறது. மெய், பொய் இரண்டையும் குழப்புகிறது. நிலை குலைய வைக்கிறது.
சோதிடத்தினால், நேபாள நாட்டின் அரச குடும்பமே அழிந்து போனது செய்தி. இளவரசர் திருபேந்திரா இருபத்தி எட்டு வயது தேவயானி என்ற பெண்ணைக் காதலித்தார். திருமணம் செய்யவேண்டும் என குடும்பத்தாரிடம் கூறினார்.
ஆனால் நேபாள நாட்டின் அரசவைச் சோதிடன் வேறுவிதமாகச் சொல்லிவிட்டான். இளவரசர் திருபேந்திராவுக்கு முப்பத்தைந்து வயது ஆன பிறகு தான் திருமணம் செய்யவேண்டும். அதற்குள் திருமணம் செய்தால் மன்னர் மாண்டு போவார் என்றுசொல்லி வைத்தான்.
அரசரும். அரசியும் இந்தச் செய்தியை தெரிவித்தனர். திருபேந்திரா ஏற்கவில்லை. உறுதியாக இருந்தார்.மன்னர் குடும்பமோ சோதிடத்தில் உறுதியாக இருந்தது.
சோதிடர் சொன்னபடி முப்பந்தி அய்ந்து வயதிற்கு முன் திருபேந்திரா திருமணம் செய்து கொள்வார் எனில், அவர் பட்டத்து இளவரசர் பதவியைத் துறக்க வேண்டும் எனவும் அவர் தம்பி இளவரசர் ஆவார் எனவும், அரசரும் அரசியும் தெரிவித்தனர். சினம் கொண்ட திருபேந்திரா இயந்திர துப்பாக்கியால் அரச குடும்பத்தினர் அனைவரையும் சுட்டுக் கொன்றார். தன்னையும் மாய்த்துக் கொண்டார்.
இளவரசர் திருபேந்திராவிற்கு திருமணமே நடக்கவில்லை. திருமணப் பேச்சுத்தான் நடந்தது. ஆனால் அரச குடும்பமே அழிந்து போனது. இப்படி அழியும் என்று அரசு சோதிடன் ஒருபோதும் சொல்லவில்லை. ஆனால், அத்வானியின் உடன்பிறப்புக்கள் இந்தியாவில் சோதிடத்தை விஞ்ஞானம் என்கிறார்கள். வாழ்வியல் முறை என்கிறார்கள்.
(வீ.ந.சோமசுந்தரம் அவர்களின் “அச்சுறுத்துகிறது ஆதிக்க மொழி” என்ற நூலிலிருந்து. பக்கம் 28)