சுதந்திரம் அடைந்த 75 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய ரயில்வேயில் லோகோ பைலட் (தொடர்வண்டி ஓட்டுநர்) பதவிக்கு வந்த முதல் பழங்குடியினப் பெண்.
ஜார்கண்டைச் சேர்ந்த ரிதிகா திருக்கி ஜார்கண்ட் தலைநகர் ராஞ்சியில் உள்ள பழங்குடியின மாணவிகள் உண்டு – உறைவிடப் பள்ளியில் தனது பள்ளிப்படிப்பை முடித்த பிறகு அய்.டி.அய் மோட்டார் மெக்கானிக் பட்டயப் படிப்பை முடித்தார்.
அவரது திறமையைக் கண்டு அவரை பட்டப் படிப்பு கற்க அய்.டி. நிர்வாகம் வாய்ப்பளிக்க அவர் மோட்டார் மெக்கானிகல் துறையில் பொறியாளர் பட்டப்படிப்பை முடித்தார்.
பின்னர் பலமுறை ரயில்வே தேர்வுகள் எழுதி இறுதியாக 2019ஆம் ஆண்டு ரயில்வே பணிமனையில் எஞ்சின் பராமரிப்புப் பணியில் உதவியாளராக சேர்ந்தார்.
பின்னர் இணைப்பு ரயில்களை பணிமணைக்கு இழுத்துச் செல்லும் ரயில் எஞ்சின்களை இயக்கி வந்த இவர் 2021ஆம் ஆண்டு பயணிகள் ரயிலில் துணை ஓட்டுநராகப் பணியில் சேர்ந்தார்.
சமீபத்தில் டாடா நகர் பாட்னா வந்தே பாரத் ரயிலின் உதவி ஓட்டுநராக நியமிக்கப்பட்ட பிறகு இவர் ஜார்கண்ட் நாளிதழில் இடம் பிடித்தார்.
இதற்கு முன்பு குறைந்த தூரம் செல்லும் பயணிகள் ரயிலை இயக்கும்போது இயற்கை உபாதைக்கு ரயில் நிற்கும். இறங்கி, பின்னர் ஏறிவிடுவார்.
ஆனால், ‘வந்தேபாரத்’ 10 மணி நேர இடைநில்லா பயணம் வந்தேபாரத் ரயில் எஞ்சினில் கழிப்பறை வசதிகள் இல்லை.
“குறிப்பாக நீண்ட காலமாகவே ரயில் எஞ்சின்களில் குளிர் சாதன வசதிகொண்ட ஓய்வறை மற்றும் கழிப்பிட வசதி தேவை” என்ற கோரிக்கை இருந்துவரும் நிலையில் பல வசதிகளைக் கொண்டதாக மோடி பறைசாற்றும் ‘வந்தே பாரத்’ ரயிலிலும் ஓட்டுநர்களுக்கான கழிப்பறை வசதிகள் இல்லை என்பது இந்திய ரயில்வேயின் அவலமான முகம் ஆகும்.
இது தொடர்பாக ஜூன் மாதம் ராகுல்காந்தி புதுடில்லி ரயில் நிலையத்தில் அங்குள்ள ரயில் ஓட்டுநர்களைச் சந்தித்த போது ரயில் ஓட்டுநர்களுக்கு ஏற்படும் சிக்கல்கள் பற்றி பேசியது நாடாளுமன்ற வரை எதிரொலித்தது குறிப்பிடத்தக்கது.