நம்மிடையே இருக்கும் உணவுகளில் பல சிறப்புகள் வாய்ந்த உணவாக முட்டை திகழ்கிறது. இது ஒரு சிறந்த புரத உணவாகவும் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், பல ஆண்டுகளாக, முட்டை – குறிப்பாக அதன் மஞ்சள் கரு நீரிழிவு அல்லது இதய நோய் உள்ளவர்களால் தவிர்க்கப்பட்டு வருகிறது. இந்த குழப்பத்தின் பின்னணியில் உள்ள உண்மையை தெரிந்துகொள்வது அவசியமாகும். நீரிழிவு நோயாளிகளுக்கு ஆரோக்கியமான உணவின் ஒரு பகுதியாக முட்டை இருக்க முடியுமா என்பதையும் இந்தக் கட்டுரையில் ஆராய்வோம்.
முட்டையில் உள்ள சத்துகள் என்ன?
நடுத்தர அளவிலான ஒரு முட்டையில் (~58 கிராம்) 66 கலோரிகள், ஆறு கிராம் புரதம் மற்றும் 4.6 கிராம் கொழுப்பு உள்ளது. மேலும் இதன் கொழுப்பில் 20 சதவீதத்திற்கும் மேல் நிறைவுற்ற வகையைச் சேர்ந்தது. முட்டையில் கார்போஹைட்ரேட் மிகக் குறைவு மற்றும் இயற்கையாகவே வைட்டமின் பி2 (ரைபோஃப்ளேவின்), வைட்டமின் பி12 மற்றும் ஃபோலேட், பயோட்டின், மற்றும் கோலின் போன்ற பல பி வைட்டமின்கள் நிறைந்துள்ளன. பாஸ்பரஸ், அயோடின் மற்றும் செலினியம் உள்ளிட்ட பிற அத்தியாவசிய தாதுக்கள் மற்றும் வைட்டமின் ஏ மற்றும் சிறிய அளவு வைட்டமின் டி ஆகியவையும் முட்டையில் உள்ளன.
முட்டையின் வெள்ளை மற்றும் மஞ்சள் கருவிற்கு இடையே ஊட்டச்சத்து கலவையில் குறிப்பிடத்தக்க வேறுபாடுகள் உள்ளன. மஞ்சள் கருவை விட முட்டையின் வெள்ளைக்கரு அதிக புரதத்தை அளிக்கிறது (மஞ்சள் கரு அதிக செறிவு இருந்தாலும், முட்டையில் மஞ்சள் கருவை விட வெள்ளை கரு தான் அதிகமாக உள்ளது). கிட்டத்தட்ட மஞ்சள் கருவில் கொழுப்பு தான் அதிகம் உள்ளது. இதனால் வெள்ளைப் பகுதியை விட குறைந்தது மூன்று மடங்கு கலோரிகள் அதிகமாக உள்ளது. மேலும் மஞ்சள் கருவில் வெள்ளைப் பகுதியை விட அதிக வைட்டமின்கள் மற்றும் ஊட்டச்சத்துக்கள் உள்ளன.
கொலஸ்ட்ரால் பங்கு?
முட்டையின் மஞ்சள் கருவில் உள்ள கொலஸ்ட்ரால் பற்றிதான் பெரும்பாலும் சர்ச்சை நிலவுகிறது. ஒரு முட்டையில் 200 மில்லிகிராம் கொலஸ்ட்ராலுக்கும் அதிகமாக இருப்பதால், இது ரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவை அதிகரிக்கக்கூடும் என்றும் இதனால் இதய நோய் ஏற்படும் அபாயம் இருப்பதாகவும் கருதப்படுகிறது. இருப்பினும், உணவு உட்கொள்ளல் மூலம் பெறும் கொலஸ்ட்ரால் ரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவை அதிகரிக்காது என்று சமீபத்திய ஆராய்ச்சி காட்டுகிறது. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், முட்டைகளை உட்கொள்வது கொலஸ்ட்ராலை கணிசமாக அதிகரிக்காது.
எனவே, நீரிழிவு நோயாளிகளின் டயட்டில் முட்டை ஒரு மதிப்புமிக்க உணவாகும். புரதம் மற்றும் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களின் வளமான ஆதாரத்தை இது வழங்குகிறது. அதோடு மட்டுமின்றி ரத்த சர்க்கரை அல்லது இருதய ஆரோக்கியத்தை எதிர்மறையாக பாதிக்காமல் தசை அடர்த்தியை மேம்படுத்துகிறது.