பெரியார் மறைந்து 50 ஆண்டுகள் ஓடிவிட்டன!
எனினும் அவர் சிந்தனைகள் நமக்கு மிகத் தேவையே!
இளைஞர்கள் உள்வாங்கிக் கொள்ளவேண்டும்!
சென்னை, செப்.20 தந்தை பெரியார் மறைவுற்று 50 ஆண்டுகள் ஆன நிலையிலும், அவர் சிந்தனைகள் நமக்கு மிகவும் தேவைப்படுகின்றன. இளைஞர்கள் பெரியார் கருத்துகளை உள்வாங்கிக் கொள்ள வேண்டும் என்றார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.
அவரது உரை வருமாறு:
இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறையின் சார்பில், சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெறுகின்ற (18.9.2024) தந்தை பெரியார் நினைவுச் சொற்பொழிவில் வரவேற்புரை ஆற்றுவதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். பெருமை அடைகிறேன்.
விளையாட்டு மேம்பாட்டுத்துறை சார்பாக, எதற்காக தந்தை பெரியார் நினைவுக் கருத்தரங்கத்தை நடத்த வேண்டும். பெரியாருக்கும், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறைக்கும் என்ன சம்பந்தம் என்று, உங்களில் பல பேருக்குச் சந்தேகம் இருக்கும். கேள்விகள் எழலாம்.
ஆராய்ச்சி மனப்பான்மை
வாழ்வில் வெற்றிப்பெற நினைக்கும் ஒவ்வொரு இளைஞனுக்கும், விளையாட்டுப் போட்டிகளில் சாதிக்கத் துடித்துக் கொண்டிருக்கின்ற ஒவ்வொரு விளையாட்டு வீரனுக்கும் சுறுசுறுப்பு, விடாமுயற்சி, ஒழுக்கம், துவண்டு போகாத மன உறுதி, பகுத்தறிய வேண்டிய ஆராய்ச்சி மனப்பான்மை மிக மிக அவசியம். தந்தை பெரியாரிடம் இவை அனைத்துமே அடிப்படைக் குணங்களாக அமைந்தன. அதற்காகத்தான் இந்த நிகழ்ச்சி. நேற்று, தந்தை பெரியாரின் 146 ஆவது பிறந்தநாள். நேற்று (17.9.2024) அவரின் பிறந்தநாளைக் கொண்டாடிவிட்டு, இன்று (18.9.2024) இந்த நிகழ்ச்சியை நடத்துவதில், விளையாட்டுத் துறையின் சார்பாக நாங்கள் மிகுந்த பெருமை அடைகிறோம். உங்களையெல்லாம் சந்திப்பதில், மிகுந்த மகிழ்ச்சி அடைகிறோம்.
சுற்றுப்பயணத்தைத் தொடர்வோம்
பெரியார் மறைவின்போது நம் முத்தமிழறி ஞர் கலைஞர் அவர்கள், “பெரியார் தன் சுற்றுப்பய ணத்தைத்தான் முடித்துக் கொண்டிருக்கிறார். அந்தச் சுற்றுப்பயணத்தை நாம் தொடர்வோம்’’ என்று எழுதி இருந்தார்.
பெரியார் அவர்கள் உடலால் மறைந்திருந்தாலும், அவரின் கருத்துகள் என்றைக்கும் அழியாது என்ப தைத்தான் கலைஞர் அப்படிக் குறிப்பிட்டுச் சொல்லியிருந்தார். தன் 95 ஆவது வயது வரைக்கும் வாழ்ந்த பெரியார் அவர்கள், தமிழ்நாட்டின் பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட, விளிம்புநிலை மக்களின் உரிமைகளுக்காக உழைத்தவர்.
பெரியாரின் கொள்கைகள் எந்தக் காலத்திற்கும் பொருந்தக்கூடியவை. குறிப்பாக, இளைஞர்கள் உங்களுக்கு மிகமிக அவசியமானவை. அதனால்தான், இந்தச் சிறப்பான கருத்தரங்கத்தை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறையின் சார்பாக, இன்றைக்கு நாங்கள் நடத்திக் கொண்டி ருக்கிறோம்.
படித்தாலே தீட்டு
இங்கு இவ்வளவு மாணவச் செல்வங்கள் அமர்ந்திருக்கிறீர்கள். இன்னும் சொல்லப்போனால், நிறைய பெண்கள், அமர்ந்திருக்கிறீர்கள். ஒரு 100 ஆண்டுக்கு முன்பு இப்படிப்பட்ட நிலைமை கிடையாது. இப்படிப்பட்ட நிலைமையை யாரும் அனுமதிக்கவும் இல்லை. குறிப்பிட்ட சிலர்தான் படிக்க வேண்டும், குறிப்பிட்ட சிலர்தான் வீட்டைவிட்டு வெளியே வர வேண்டும், மற்றவர்கள் எல்லாம் குலத்தொழிலை செய்யவேண்டும். அதாவது அவர்கள் அப்பா, அம்மா என்ன வேலை செய்தார்களோ, அவர்கள் தாத்தா, பாட்டி என்ன வேலை பார்த்தார்களோ அதைத்தான் செய்ய வேண்டும் என்ற நிலைமை இருந்தது.
`படித்தாலே தீட்டு’ என்று சொன்னார்கள். மகளிர் வீட்டைவிட்டு வெளியே வரக்கூடாது என்று சொன்னார்கள். இன்றைக்கு அந்த நிலைமை யெல்லாம் மாறிவிட்டது. எல்லோரும் படிப்பதற்கான நிலைமை உருவாகி இருக்கிறது. எல்லோரும் வேலைக்குச் செல்வதற்கான நிலைமை உருவாகி இருக்கிறது.
இதற்கு என்ன காரணம். யார் இந்த மாற்றத்தை தமிழ்நாட்டிற்கு கொண்டு வந்தது. இவை எல்லா வற்றிற்குமான பதில் என்னவென்று பார்த்தீர்கள் என்றால், அதுதான் தந்தை பெரியார் அவர்கள். தந்தை பெரியார் அவர்களுக்கு `பெரியார்’ என்ற பட்டத்தைக் கொடுத்ததே பெண்கள்தான். அந்த அளவிற்கு பெண்களின் விடுதலைக்காக போராடியவர், குரல் கொடுத்தவர்தான் நம் தந்தை பெரியார் அவர்கள்.
மகளிருக்கு சொத்தில் சமஉரிமை
பெரியார் பேசிய அத்தனை வடிவங்களுக்கும் செயல்வடிவம் கொடுத்தவர் யார் என்று பார்த்தீர்கள் என்றால், அறிஞர் அண்ணா அவர்களும், நம் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களும், நம் திராவிட முன்னேற்றக் கழக அரசும்தான். இன்றைக்கு அந்தப் பணியை நம் முதலமைச்சர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்கள் செய்து கொண்டிருக்கிறார்.
`சுயமரியாதைத் திருமணம் செல்லும்’ என்று, அண்ணா சட்டம் கொண்டு வந்தார். `மகளிருக்குக் குடும்பச் சொத்தில் சமஉரிமை’ என்று நம் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் சட்டம் போட்டார். காவல்துறையில், இராணுவத்தில் பெண்கள் வரவேண்டும் என்று, பெரியார் ஆசைப்பட்டார். குரல் கொடுத்தார். இந்தியாவிலேயே முதன்முறையாக அய்ம்பது ஆண்டுகளுக்கு முன்பே, தமிழ்நாடு காவல் துறையில் பெண்கள் பணியாற்றலாம் என்ற நிலைமையை ஏற்படுத்தியவர்தான், முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள்.
இன்றைக்குப் பெண்கள் உயர்கல்வி படிக்க வேண்டும் என்று புதுமைப்பெண் திட்டம். அரசுப் பள்ளியில் படித்து உயர்கல்வி எந்தக் கல்லூரியில் சென்று படித்தாலும், மாதம் ஆயிரம் ரூபாய் அவர்களுக்கு கல்வி ஊக்கத்தொகை கொடுப்பவர் நம் முதலமைச்சர் அவர்கள். உங்களில் பலருக்கு மாதம் ஆயிரம் ரூபாய் கல்வி ஊக்கத்தொகை வந்து கொண்டிருக்கிறது.
வாழ்நாள் முழுக்க போராடியவர்!
மாணவர்கள் வறுமை காரணமாக உயர்கல்வியை விட்டுவிடக்கூடாது என்று, `தமிழ்ப் புதல்வன்’ என்ற திட்டத்தைக் கொண்டு வந்து மாதம் ஆயிரம் ரூபாய் அவர்களுக்கும் கல்வி ஊக்கத்தொகை கொடுக்கிறார்.
மகளிரின் பொருளாதாரச் சுதந்திரத்தை உறுதிப் படுத்திட, நம் முதலமைச்சர் அவர்கள் கலைஞர் மகளிர் உரிமைத்தொகைத் திட்டத்தை தொடங்கி வைத்தார்கள். ஒரு கோடியே 16 லட்சம் மகளிருக்கு மாதந்தோறும் உரிமைத்தொகையாக ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது.
எல்லோரும் நல்ல வேலைக்குப் போக வேண்டும் என்று பெரியாரின் கனவை நனவாக்க, `நான் முதல்வன்’ என்ற திட்டத்தை நம் முதலமைச்சர் அவர்கள் தொடங்கி வைத்தார்கள்.
அய்.ஏ.எஸ்., அய்.பி.எஸ்., நீதிபதிகள் மாதிரியான உயர் பதவிகளுக்கு ஏழை, எளிய, கிராமப்புற, பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மாணவர்கள் வர வேண்டும் என்று தன்னுடைய வாழ்நாள் முழுக்க போராடியவர்தான் தந்தை பெரியார் அவர்கள்.
அதைச் செயல்படுத்துகின்ற விதமாக நம் முதல மைச்சர் அவர்கள் UPSC தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்கள், இளைஞர்களுக்கு மாதம் 7,500 ரூபாய் நிதியுதவி வழங்கிக் கொண்டிருக்கிறார்.
அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகலாம்
அது மட்டுமல்லாமல், முதல்நிலைத் தேர்வில் வென்றால், இருபத்தி அய்ந்தாயிரம் ரூபாய் ஊக்கத்தொகையும் வழங்கிக் கொண்டிருக்கிறார்கள். அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகின்ற நிலையை ஏற்படுத்த, பெரியார் இறுதி வரை போராடினார். அது முடியாமல் போனபோது, `பெரியாரின் நெஞ்சில் தைத்த முள்ளோடு புதைக்கிறோம்’ என்று கலைஞர் சொன்னார்.
பெரியார் அவர்களின் நெஞ்சில் தைத்த அந்த முள்ளை எடுக்கின்ற விதமாக, அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர், ஏன் பெண்களும் அர்ச்சகராகப் பணியாற்றலாம் என்ற நிலையை ஏற்படுத்தியவர்தான், நம் ‘திராவிட மாடல்’ முதலமைச்சர் அவர்கள்.
பெரியார் இல்லை என்றால், நாம் யாரும் இல்லை என்று அறிஞர் அண்ணா அடிக்கடிச் சொல்வார். கலைஞர் என்ன சொன்னார் என்றால், “என்னை எத்தனையோ பெயர்களைச் சொல்லி புகழ்ந்தாலும், பெரியார் வழியைப் பின்பற்றுகின்ற நான் ஒரு `மானமிகு சுயமரியாதைக்காரன்’ என்று சொல்லும்போதுதான் எனக்குப் பெருமை, எனக்கு மகிழ்ச்சி ஏற்படுகிறது’’ என்று கலைஞர் அடிக்கடி சொல்வார்.
பெரியார் நம்மைவிட்டுப் பிரிந்து, அய்ம்பது ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. ஆனால், இன்றைக்கும் அவரின் கருத்துகளும், சிந்தனைகளும் நமக்குத் தொடர்புடையதாக இருக்கிறது. என்றைக்கும் இருக்கும். ஆகவேதான், இந்தக் கருத்தரங்கத்தை நாங்கள் இப்பொழுது ஏற்பாடு செய்திருக்கிறோம்.
உள்வாங்க வேண்டும்
பெரியார் பற்றிய கருத்துகளை நம் பேச்சாளர்கள், இந்தக் கருத்தரங்கத்தில் இன்னும் விரிவாகப் பேச இருக்கிறார்கள். அவற்றையெல்லாம் நீங்கள், கூர்ந்து கவனித்து, உள்வாங்கிக் கொள்ள வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கிறேன்.
இந்தச் சிறப்புக்குரிய கருத்தரங்கத்திற்கான ஏற்பாடுகளைச் செய்துள்ள இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் அதுல்யா மிஸ்ரா அய்.ஏ.எஸ் அவர்களையும், எஸ்.டி.ஏ.டி உறுப்பினர் செயலர் மேகநாத் ரெட்டி அய்.ஏ.எஸ் அவர்களையும், வருக, வருக என வரவேற்று அவர்களுக்கு என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
திராவிட இயக்கக் கொள்கைகள்
இங்கு கருத்துரை வழங்க இயக்குநர், சகோதரர், நண்பர் கரு.பழனியப்பன் அவர்கள் வருகை தந்திருக்கிறார். கரு.பழனியப்பன் அவர்கள் பல திரைப்படங்களைக் இயக்கிக் கொண்டிருப்பவர். இப்போது திராவிட இயக்கக் கொள்கைகளை, பெரியாரின் கருத்துக்களைத் தன் பேச்சாலும், எழுத்தாலும், மக்கள் மத்தியில் இன்றும் இயக்கிக் கொண்டிருக்கிறார்.
பெரியாரின் கொள்கைகளை இளைஞர்களுக்குப் புரிகின்ற மாதிரி, மிக எளிமையாக எடுத்துச் சொல்கின்ற நண்பர் கரு.பழனியப்பன் அவர்கள் இந்த மேடைக்கு மிக, மிகப் பொருத்தமானவர். அவரையும் வருக, வருக என வரவேற்கிறேன்.
திராவிடர் கழகம், நம் தி.மு.க. மேடைகளிலும் தொலைக்காட்சி விவாத மேடைகளிலும் பெரியாரின் கொள்கை களை, திராவிட இயக்கச் சாதனைகளை யாரும் மறுக்கமுடியாத வகையில், புள்ளிவிவ ரத்தோடு எடுத்து வைக்கின்ற தங்கை மதிவதனி உங்களோடு பேச இருக்கின்றார். அவரையும் வருக, வருக என வரவேற்கிறேன்.
எளிய குடும்பத்தில் பிறந்தவர்
பெரியாரின் கருத்து கள் ஒருவரின் வாழ்வில், அவரை எந்த உயரத்திற்கு கொண்டு செல்லும் என்பதற்கு ஒரு சிறந்த உதாரணம்தான் தம்பி கெனித்ராஜ் அன்பு. மிக மிக எளிய குடும்பத்தில் பிறந்து, கல்வி ஒன்றை மட்டுமே துணையாகக் கொண்டு, இன்றைக்கு டிரான்சென் டைனமிக்ஸ் எனும் ரோபோட்டிக்ஸ் மற்றும் ஏ.அய். நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியாக உயர்ந்திருக்கின்றார். தம்பி கெனித்ராஜ் அன்புவும் உங்களுடன் பேச இருக்கிறார். அவரையும் வருக, வருக என வரவேற்கிறேன்.
தன் கலையின் மூலமாக அம்பேத்கரிய, பெரியாரிய கருத்துகளைக் கோடான கோடி மக்களிடம் கொண்டு சேர்க்கின்ற தம்பி திருக்குறள் அறிவு. அவரின் அறிவு அண்ட் தி அம்பசா இசைக் குழுவின் கலைநிகழ்ச்சி இங்கு நடைபெற இருக்கிறது. அவர்களையும் இந்த நிகழ்ச்சிக்கு வருக, வருக என வரவேற்கிறேன். வினாடி வினா நிகழ்ச்சியை நடத்த உள்ள சகோதரர் ஆருர் த.லக்கியன் அவர்களையும் அன்போடு வரவேற்கிறேன்.
அமைச்சர்கள் பங்கேற்பு
நிகழ்ச்சியில் கலந்துகொண்டுள்ள மாண்புமிகு அமைச்சர்கள் அண்ணன் மா.சுப்பிரமணியன் அவர்களையும், சேகர்பாபு அவர்களையும், நாடாளு மன்ற உறுப்பினர்கள் தமிழச்சி தங்கபாண்டியன் அவர்களையும், கலாநிதி வீராசாமி அவர்களையும், சென்னை மாநராட்சி மேயர் பிரியா ராஜன் அவர்களையும், அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களையும், சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் எழிலன் அவர்களையும், பிரபாகர் ராஜா அவர்களையும், துணை மேயர் மகேஷ்குமார் அவர்களையும் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகளையும், விளையாட்டுப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் அவர்களையும், சகோதரர் சூர்யா கிருஷ்ணமூர்த்தி அவர்களையும், சட்டமன்ற உறுப்பினர் அண்ணன் தாயகம் கவி அவர்களையும் வருக, வருக என வரவேற்கிறேன்.
இங்கு சிறப்பாக தமிழ்த்தாய் வாழ்த்தினை இசைத்த இசைக் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு என் பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொண்டு, இந்தக் கருத்தரங்கத்திற்கு வருகை தந்துள்ள விடுதி மாணவர்கள் உட்பட அனைத்து மாணவ, மாணவிகள், இளைஞர்கள், இளம்பெண்கள் அனைவரையும் வருக, வருக என்று வரவேற்கிறேன். வந்திருக்கின்ற பத்திரிகை நண்பர்களையும் வருக, வருக என வரவேற்கிறேன்.
பெரியார் நினைவுக் கருத்தரங்கம் வெல்லட்டும். மானுடம் தழைக்கட்டும்.
நன்றி வணக்கம்.
இவ்வாறு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வரவேற்றுப் பேசினார்.