கிருஷ்ணகிரி, செப்.20 தந்தை பெரியாரின் பிறந்த நாளையொட்டி கிருஷ்ணகிரி கார்னேசன் மைதானத்தில் அமைந்துள்ள அவரது சிலைக்கு அண்ணா திமுக ஒருங்கிணைப்புக் குழுவைச் சார்ந்த புகழேந்தி மற்றும் அண்ணா திமுக நிர்வாகிகளும் மாலை அணிவித்து, இனிப்பு வழங்கி கொண்டாடினார்கள். அப்போது, டாக்டர் ஜான் டிமோதி, திராவிடர் கழக மாவட்ட தலைவர் திராவிட மணி, அண்ணா தொழிற்சங்க மாநில இணை செயலாளர் ராஜேந்திரன், கருநாடக மாநிலச் செயலாளர் குமார், ரவி சுரேஷ் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த புகழேந்தி, “ சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திற்குத் தந்தை பெரியாரின் பெயரை சூட்ட வேண்டும். திராவிட இயக்கங்கள் 55 ஆண்டுகளுக்கு மேலாக ஆட்சி புரிவதற்கு அடித்தளம் அமைத்தவர் தந்தை பெரியார். அவர் திராவிட இயக்கத்தினுடைய உயிர் நாடி. தந்தை பெரியார் சுயமரியாதை கருத்துகளை வித்திட்ட ஈரோட்டு பகலவன். தந்தை பெரியாரை விட்டுப் பிரிந்து வெளியேறிய பின்னரும், அவர்தான் இயக்கத்தினுடைய நிரந்தர தலைவர் என்று கூறிய அண்ணா அதை நடைமுறைப்படுத்தினார்.
வைக்கம் போராட்டம் உள்ளிட்ட பல போராட்டங்களைக் கண்டவர் தந்தை பெரியார். தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களுக்காகவும், அவர்கள் உரிமைகளுக்காகவும் வாழ்ந்து நமது நெஞ்சங்களில் நீங்காத இடம் பெற்றவர் தந்தை பெரியார். ஆகவே, அந்த புரட்சிகரமான தலைவரின் பெயரை சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திற்குச் சூட்டி ஒன்றிய, மாநில அரசுகள் அழகு பார்க்க வேண்டும்.
எழும்பூர் ரயில் நிலையத்தில் ‘தந்தை பெரியார் ரயில் நிலையம்’ என இடம் பெற வேண்டும் என்கின்ற கோரிக்கை வலியுறுத்தி பிரதமர் மோடிக்கும், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும் கடிதம் எழுதியுள்ளேன்” என்றார். பின்னர் அந்த கடிதத்தையும் செய்தியாளர்களிடம் காட்டினார்.