–மனிதநேயப் பெருவிழாவாக சமூக நீதி நாளாக கொண்டாடப்பட்டது
திருச்சி, செப். 20- திருச்சி பெரியார் மருந்தியல் கல்லூரியில் அறிவு ஆசான் தந்தை பெரியார் அவர்களின் 146ஆவது பிறந்தநாள் விழா மனிதநேயப் பெருவிழாவாக சமூக நீதி நாளாக 16.09.2024 அன்று கொண்டாடப்பட்டது.
இவ்விழாவின் துவக்கமாக நாட்டு நலப்பணித்திட்டத்தின் சார்பில் தஞ்சை மாநகராட்சியின் துணை மேயர் மருத்துவர் அஞ்சுகம் பூபதி மரக்கன்றுகளை நட்டு விழாவினை துவக்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து நடைபெற்ற பெரியார் பிறந்தநாள் சமூக நீதி விழாவில் பெரியார் மருந்தியல் கல்லூரியின் முதல்வர் முனைவர் இரா. செந்தாமரை வரவேற்புரையாற்றினார்.
அவர் தமது உரையில் மானுடப்பற்று ஒன்றை மட்டுமே வாழ்வின் குறிக்கோளாகக் கொண்டு தம்முடைய இறுதி மூச்சுவரை வாழ்ந்த தந்தை பெரியார் அவர்களின் பிறந்தநாள் தமிழ்நாடு மட்டுமல்லாது உலக நாடுகள் முழுவதிலும் கொண்டாடப்படுவது பெரியார் உலகமயமாகிறார் என்ப தைக் கடந்து உலகம் பெரியார் மயமாகிக் கொண்டிருக்கின்றது என்பதனை தெளிவாக எடுத்துரைத்தார்.
திருச்சி மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் ஞா.ஆரோக்கியராஜ் தலைமையேற்று தந்தை பெரியார் அவர்களின் மனிதநேயப் பணிகளை மாணவர்கள் மத்தியில் எடுத்துரைத்தார். நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினரான தஞ்சை மாநகராட்சியின் துணை மேயர் மருத்துவர் அஞ்சுகம் பூபதி தமது சிறப்புரையில், முதலில் பெரியார் பெயரில் அமைந்திருக்கும் இக்கல்லூரியில் பெரியார் பிறந்தநாளில் பேசுவதில் பெருமகிழ்ச்சி அடைவதாகவும் அதிலும் தான் சார்ந்துள்ள மருத்துவத்துறை தொடர்பான மருந்தியல் கல்லூரிக்கு வருகை தந்திருப்பதில் இரட்டிப்பு மகிழ்ச்சியடைவதாகவும் கூறினார்.
மேலும் பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் அவர்களின் கொள்கைகளையும் சிந்தனைகளையும் ஆழ்ந்து கவனித்தால் அய்யா அவர்களின் அளவிற்கு மானுடத் தின் தன்மானத்திற்கும் வளர்ச்சிக்கும் சிந்தித்த ஒப்பற்ற தலைவரை எங்கும் பார்க்க முடியாது. 146 வயது வரை ஒரு தலைவரின் பிறந்தநாள் அடுத்தடுத்த சமுதாயத்தால் கொண்டாடப்படுகிறது என்றால் அனைத்து துறைகளிலும் அவர் சிந்தித்ததால்தான், தலைமுறைகள் தாண்டியும் தந்தை பெரியார் உயர்ந்து நிற்கின்றார். பெரியார் கல்வி நிறுவனங்களில் மூடநம்பிக்கைகளை ஒழிப்பதில் மிகுந்த அக்கறை காட்டப்படுகிறது. கைகளில் கயிறு கட்டுவதை அனுமதிப்பதில்லை என்று முதல்வர் அவர்கள் உரையாடும் போது தெரிவித்தார். அத்தகைய கயிறுகளால் கிருமிகளின் தாக்கமும் உடல்நலக்கோளாறுகளும் ஏற்படுவதை நம்மைப்போன்ற நலவாழ்வுத்துறையில் இருப்பவர்களுக்கு நன்றாகத் தெரியும். தீவிர சிகிச்சைப்பிரிவில் அறுவைச் சிகிச்சைக்கு அனுமதிக்கப்படுபவர்களாக இருந்தாலும் அவர்களை சந்திக்க வருபவர்களாக இருந்தாலும் இதுபோன்ற கயிறுகளை அனுமதிப்பதில்லை.
அதுமட்டுமல்ல, குழந்தை பிறந்த நேரத்தை குறித்து வைத்துக் கொண்டு ஜாதகம் பார்ப்பது மாப்பிள்ளை தேடுவது எல்லாம் மூடநம்பிக்கையின் உச்சம். பெண்கள் நெற்றியில் மத அடையாளம் இடுவதையும், பூ வைத்துக் கொள்வது போன்றவற்றையும் ஏன் தந்தை பெரியார் அவர்கள் எதிர்த்தார் என்றால் கணவனை இழந்த பெண்கள் பொட்டு வைக்கக்கூடாது – பூ வைக்கக்கூடாது என்று அவர்கள் ஓரங்கட்டப்படுவதை தந்தை பெரியார் அவர்கள் மிகவும் எதிர்த்தார். அதுமட்டுமல்ல – பெண்கள், குழந்தை பெறும் எந்திரம் அல்ல. கருப்பை என்ற ஒன்றால் நீங்கள் அடிமைப்படுத்தப் படுவீர்களேயானால் அத்தகைய கருப் பையை தூக்கி எறிய வேண்டும் என்று பெண்ணுரிமையின் உச்சத்திற்கே சென்றவர் தந்தை பெரியார் அவர்கள். இன்றைக்கு கல்வி, வேலைவாய்ப்பு, அரசியல் போன்ற அனைத்திலும் பெண்களுக்கு இட ஒதுக்கீடுகள் கிடைத்திருக்கின்றது என்று சொன்னால் அது தந்தை பெரியாரும் அவரின் கொள்கைகளை ஏற்ற திராவிட கட்சிகளாலும்தான்.
நல்ல நேரம், கெட்ட நேரம் என்ற ஒன்றை பார்த்துக்கொண்டிருந்தால் நிச்சயம் எதனையும் செய்ய முடியாது என்று கூறியதோடு மகப்பேறு மருத்துவராக இருப்பதால் பொங்கல் விழாவின்போது கூட மருத்துவமனையில் அவசரமாக பிரசவம் பார்க்கவேண்டிய சூழல் ஏற்பட்டதால் அதனை முடித்துவிட்டு வந்து பகுத்தறிவு சிந்தனையுள்ள தம்முடைய புகுந்த வீட்டில் எந்த நேரமும் பார்க்காமல் வைத்த சர்க்கரை பொங்கலும் அதே சுவையுடன் இருந்ததை சிறப்பாக எடுத்துரைத்தார்.
மாணவர்கள் அறிவியல் மனப்பான்மை கொண்டு எதனையும் ஏன், எதற்கு, எப்படி என்று கேள்வி கேட்க வேண்டும். அப்படி கேள்வி கேட்டவர்தான் தந்தை பெரியார் அவர்கள். அவரின் கேள்விகள் மனிதனை அடிமையாக நடத்தியே சுக வாழ்க்கையை அனுபவித்த பலருக்கு எரிச்சலையும் பயத்தையும் ஏற்படுத்திவிடவே, அவர்கள் தந்தை பெரியார் எங்கு மக்கள் மத்தியில் உயர்ந்து விடுவாரோ, ஆதிக்க சக்திகளுக்கு கிடைக்கும் சலுகைகள் பறிபோய்விடுமோ என்ற பயத்தில் அவர்கள் தந்தை பெரியாரை கடவுள் மறுப்பாளராக மக்களிடத்தில் கொண்டு சென்றனர். இது போன்ற உண்மைகளை உலகுக்கு எடுத்துச் செல்ல மாணவ சமுதாயத்தால் மட்டும்தான் முடியும். “கடவுளை மற என்று சொன்ன பெரியார்தான் மனிதனை நினை” என்று சொன்னார். அத்தகைய பெரியாரின் கொள்கைகளை எடுத்துச் செல்லும் திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் அனைவருக்கும் அனைத்தும் கிடைக்க திராவிட மாடல் ஆட்சியின் தலைவர் அவர்களின் வழிகாட்டுதலில் நாங்கள் பாடுவோம் என்று கூறி மாணவர்களுக்கு தந்தை பெரியார் அவர்களின் பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்துக்கொண்டு கலை மற்றும் விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளையும் பாராட்டுச் சான்றிதழ்களையும் வழங்கி சிறப்பித்தார்.
திராவிட மாணவர் கழக பொறுப் பாளர்கள் முன்னிலை வகித்த இந்நிகழ்ச்சியில் பெரியார் மருந்தியல் கல்லூரியின் துணை முதல்வர் முனைவர் கோ. கிருஷ்ணமூர்த்தி அவர்கள் நன்றியுரையாற்றினார். இந் நிகழ்ச்சியில் திருச்சி மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் ஞா. ஆரோச்சியராஜ் அவர்களின் வாழ்விணையர், திராவிடர் கழக பொறுப்பாளர்கள், சாமி கைவல்யம் முதியோர் இல்ல பெரியோர்கள் பேரசிரி யர்கள், பணியாளர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். முன்னதாக சமூக நீதிக்கான உலகின் முதல் OTT தளமான “பெரியார் விஷன்” தளத்தில் திராவிட மாணவர் கழகத்தின் சார்பாக தந்தை பெரியாரின் பிறந்தநாளான 146அய் மய்யப்படுத்தும் விதமாக 146 மாணவர்கள் ரூ.146/- மதிப்புள்ள சந்தாவினை சிறப்பு விருந்தினர் முன்னிலையில் செலுத்தினர்.
அதனைத் தொடர்ந்து சமூக நீதி நாள் உறுதி மொழியினை அனைவரும் ஏற்றனர். 13.09.2024 அன்று பெரியார் மருத்துவக்குழுமம் மற்றும் பெரியார் மருந்தியல் கல்லூரியின் சார்பில் பெரியார் மணியம்மை மருத்துவ மனையில் மருத்துவ அலுவலர் பி. மஞ்சுள வாணி, மருத்துவர் சீனிவாசன் மற்றும் சபரி மருத்துவமனையின் மருத்துவர் வெங்கடேசன் ஆகியோர் தலைமையில் பொதுமருத்துவ முகாமும் மருத்துவர் பி.ஆர் பெரி அவர்கள் தலைமையில் பல் பரிசோதனை முகாமும் நடைபெற்றது. இதில் பெரியார் மருந்தியல் கல்லூரியின் நாட்டு நலப்பணித்திட்ட மருந்தியல் மாணவர்கள் பொதுமக்களுக்கு மருந்துகளை வழங்கினர். இதில் மொத்தம் 172 பேர் கலந்து கொண்டு பயனடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.