தொகுப்பு: சே.மெ.மதிவதனி
சென்னை, செப். 20- அறிவாசான் தந்தை பெரியார் அவர்களின் 146ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா சென்னை பெரியார் திடலில் 17.09.2024 அன்று காலை நடைபெற்றது.
ஆதிக்கம் எந்த வடிவில் இருப்பினும் அதனை எதிர்த்து நிற்க வேண்டும் என்ற தந்தை பெரியாரின் கொள்கைகளை விளக்கி, அவரை எதிர்த்தவர்களே இன்று அவரை கொண்டாடும் நிலையினை எடுத்துரைத்து, நிகழ்ச்சிக்கு வருகை தந்த அனைவரையும் வரவேற்று மாநில மகளிர் பாசறை செயலாளர் வழக்குரைஞர் பா.மணியம்மை வரவேற்புரை ஆற்றினார்.
பெரியார் உலகமயம்;
உலகம் பெரியார் மயம்!
நிகழ்வில் கழகத்தின் பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ் தொடக்கவுரை ஆற்றினார். அவரது உரையில் : தமிழ்நாட்டை கடந்து வட இந்தியாவில் கொண்டாடப்பட்ட தந்தை பெரியாரின் பிறந்தநாள் விழா, இன்று உலக அளவில் கொண்டாடப்படும் நிலையை எடுத்துரைத்து, தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் ஜப்பான், சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் பெரியாரின் 146ஆம் ஆண்டு பிறந்தநாள் விழாவினைக் கொண்டாடி கொண்டு இருக்கும் மகிழ்வை வெளிப்படுத்தினார். “பெரியார் உலகமயம்; உலகம் பெரியார் மயம்!” என்ற ஆசிரியர் அவர்களின் குறிக்கோள் நிறைவேறி இருக்கிறது என்றார். தந்தை பெரியாரின் தொலைநோக்கு சிந்தனைகளுக்கு அடுக்கடுக்கான ஆதாரங்களை எடுத்துரைத்தார். குறிப்பாக, தரமான கல்வி, பாலின சமத்துவம், புதுமை, வறுமை ஒழிப்பு போன்றவற்றை இன்று அய்க்கிய நாடுகள் சபை Sustainable Development Goals என்று வரையறுத்து இருப்பதை விளக்கினார். அய்யாவின் கருத்துகளால் தமிழ்நாடு அடைந்துள்ள முன்னேற்றங்களை சான்றுகளுடன் கூறினார். மேலும், மூடநம்பிக்கைகள் சார்ந்த நிகழ்வுகளை தவிர்க்குமாறும், முடியாத பட்சத்தில் குறைந்தப்பட்சம், இவை அனைத்தும் உண்மை அல்ல என்ற பொறுப்புத் துறப்புடன் (Disclaimer) அவற்றை வெளியிடுமாறு ஊடகத் துறையினருக்கு வேண்டுகோள் விடுத்து நிறைவு செய்தார்.
மண்டைச் சுரப்பை உலகு தொழும்!
கழகத்தின் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்கள் தலைமை உரை நிகழ்த்தினார். அவரது உரையில்: கழகத் தலைவர் ஆசிரியர் அவர்கள் வெளிநாட்டில் இருக்கின்ற போதும் இத்தனை சிறப்பாக, அதிக கருஞ்சட்டை குடும்பங்களுடன் அய்யா பிறந்தநாள் நிகழ்ச்சி நடைபெறுவது இயக்கத்தின் வலிமையை காட்டுகிறது என்றார். தொடர்ந்து, “பெரியாரின் மண்டைச் சுரப்பை உலகு தொழும்” என்ற புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் கவிதை வரிகள் இன்று உண்மையாக இருக்கிறது என்பதை சான்றுகளுடன் விளக்கினார். வட இந்தியாவில் பெரியார் பிறந்த நாள் கொண்டாடப்படுவது மட்டுமல்லாமல், இந்தியாவின் பல மொழிகளில் தந்தை பெரியாரின் கருத்துக்கள் மொழிபெயர்க்கப்பட்டு இருக்கின்றன. அதிலும் குறிப்பாக வங்க மொழியிலே தந்தை பெரியார் குறித்த ஒரு புத்தகத்தை திடலில் வழங்கிய போது அது என்ன புத்தகம் என்று வங்க மொழி தெரிந்தவர்களிடம் கேட்டுப் பார்த்தபோது இராமாயண பாத்திரங்கள் என்ற பெரியார் எழுதிய புத்தகத்தை வங்கமொழியில் மொழிபெயர்த்து இருக்கிறார்கள் என்ற செய்தியை குறிப்பிட்டார். அந்த வகையில் தொடர்ந்து தந்தை பெரியார் அவர்களை இளைஞர்கள் தேடித்தேடி படிப்பதற்கு ஒரு வகையில் பிஜேபி தான் அந்த வாய்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது, அவர்களுக்கு நன்றி என்று அவருக்கே உரிய நகைச்சுவையுடன் பதிவு செய்தார்.
தந்தை பெரியார் அவர்கள் இந்த மண்ணில் செய்த புரட்சிகளை அடுக்கடுக்காக விவரித்தார். குறிப்பாக தமிழ் மொழிக்கு தமிழ்நாட்டில் இருந்த நிலையையும், தமிழர்கள் கல்வி கற்க முடியாமல் இருந்த சூழலையும், தமிழ் படிப்பதற்கே சமஸ்கிருதம் தேவை என்று இருந்த இழிநிலையையும் இந்த இயக்கம் எப்படி புரட்டிப் போட்டு இருக்கிறது என்பதை விவரித்தார். தந்தை பெரியாரின் சிந்தனைகளை இன்றைக்கு காங்கிரஸ் கையில் எடுத்திருக்கிறது என்றும், பெரியாரின் சமூக நீதிக் கொள்கைகளை நாங்கள் நிறைவேற்றுவோம் என்று ராகுல் காந்தி சொல்வது மட்டுமல்லாமல் 50 சதவீதத்திற்கு மேல் இதர பிற்படுத்தப்பட்ட சமூகங்களுக்கு இட ஒதுக்கீட்டு பெற்று தர வேண்டும் என்று சொல்வதில் பெரியாரின் வெற்றி இருக்கிறது என்று மன மகிழ்ச்சியுடன் பதிவு செய்தார்.
மலர் வெளியீடு:
சுயமரியாதை இயக்க நூற்றாண்டு – தந்தை பெரியார் 146ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா மலர் வெளியிடப்பட்டது. திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் தலைவர் பேராசிரியர் சுப.வீரபாண்டியன் அவர்கள் மலரினை வெளியிட்டார்.
தந்தை பெரியாரின் பார்வையில் இந்திய அரசமைப்புச் சட்டம் 51 A(h) என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது.
Scientific Social Responsibility என்று பிஜேபி செய்த குளறுபடிகள்: கருத்தரங்கில் ஊடகவியலாளர் இந்திரகுமார் தேரடி அவர்கள் கருத்துரை ஆற்றினார். அவரது உரையில்: இந்திய அரசமைப்புச் சட்டத்தில் 1976 ஆம் ஆண்டு 42 வது சட்ட திருத்தத்தின் மூலம் பிரிவு 51 A(h) எப்படி இணைக்கப்பட்டது என்றும், அதனை கொண்டு வந்த கமிட்டியின் அறிக்கையில் இதைப் பற்றிய எந்த விளக்கமும் இல்லாமல் இருந்த நிலையையும், வரலாற்று ஆதாரங்களுடன் எடுத்துரைத்தார்.
மேலும் இந்த பிரிவுகள் வருவதற்கு முன்பே தந்தை பெரியார் அவர்கள் ஒழுக்கம் என்பதும், பகுத்தறிவு என்பதும் தமிழ் சமூகத்திற்கு எவ்வளவு முக்கியம் என்பதை விளக்கிய பாங்கினை எடுத்துரைத்தார். இன்றைக்கு ஒன்றியத்தை ஆளும் பிஜேபி அரசு புதிய கல்விக் கொள்கையின் மூலமாக அறிவியல் மனப்பான்மைக்கு எதிராக எத்தகைய மூடநம்பிக்கைப் போக்கினை கடைப்பிடிக்கிறது என்பதை விளக்கினார். தொடர்ந்து சயின்டிஃபிக் சோசியல் ரெஸ்பான்சிபிலிட்டி (Scientific Social Responsibility) என்ற பெயரில் ஒன்றிய பிஜேபி அரசால் வெளியிடப்பட்ட வழிகாட்டி நெறிமுறைகளில் இருக்கின்ற குளறுபடிகளையும், அறிவியல் விரோத போக்கினையும் ஆதாரங்களுடன் எடுத்துரைத்தார். அடிப்படை கடமைகளை யார் ஒருவர் மீறினாலும் நீதிமன்றத்திற்குச் சென்று அதனை எதிர்த்து நீதி பெற முடியாத சூழலில் இந்த சட்டப்பிரிவு வைக்கப்பட்டிருப்பதை ஏதேனும் வழிமுறைகளைப் பயன்படுத்தி மாற்றி அமைக்க வேண்டும் என்ற தனது கருத்தினை பதிவு செய்தார்.
சுயமரியாதையை மீட்டெடுக்க
பயன்பட்ட ஆயுதம்!
நிகழ்வில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் செய்தி தொடர்பாளர் சூரியா கிருஷ்ணமூர்த்தி அவர்கள் உரையாற்றினார். அவரது உரையில்: சட்டம் இயற்றி இந்த மண்ணில் சாத்தியப்படுத்த நினைத்த பணிகளை, சட்டம் இயற்றுவதற்கு ஏறக்குறைய 50 ஆண்டுகளுக்கு முன்பே செய்து காட்டிய தலைவர் தந்தை பெரியார் என்றார். மூடநம்பிக்கைகளை வலியுறுத்தக்கூடிய கல்வி முறைகளாக அமைந்திருந்த குருகுலக் கல்வியை பெரியார் எதிர்த்த பாங்கினையும், மூடநம்பிக்கைகளுக்கு ஆதரவாக எந்த காலகட்டத்தில் எது தோன்றினாலும் அதை எதிர்த்து நிற்க பெரியார் தயாராக இருந்த நிலையையும் வரலாற்று சான்றுகளுடன் எடுத்துரைத்தார்.
பெரியார் மூடநம்பிக்கை எதிர்ப்பை பேசிய காலகட்டம் என்பது சமூகம் முழுவதும் பிற்போக்கு சிந்தனைகளால் நிரம்பி இருந்த காலகட்டம். ஒரு வயதில் கைம்பெண்கள் வாழ்ந்த மண்ணில்தான் தந்தை பெரியார் நினைத்துப் பார்க்க முடியாத புரட்சிகளை செய்தார் என்பதை எடுத்துரைத்தார். தந்தை பெரியாரின் பகுத்தறிவு சிந்தனைகள் என்பது சுயமரியாதையை மீட்டு எடுக்க பயன்பட்ட ஆயுதம் என்றார். பெரியாரின் சிந்தனைகளால்,திராவிடர் இயக்கத்தால் தமிழ்நாடு அடைந்திருக்கக் கூடிய மாற்றங்களை அடுக்கடுக்கான ஆதாரங்களுடன் எடுத்துரைத்து, நாம் பெரியாரால் முன்னேறி இருக்கிறோம் என்பதை பதிவு செய்தார்.
அடிப்படை காரணம் தந்தை பெரியார்!
நிகழ்வில் கழகத்தின் துணைப் பொதுச் செயலாளர் வழக்குரைஞர் சே.மெ.மதிவதனி கருத்துரை வழங்கினார் அவரது உரையில் : தந்தை பெரியார், அன்னை மணியம் மையாருக்குப் பிறகு தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் இயக்கம் என்பது இயங்கிக் கொண்டே இருக்க வேண்டும் என்று சொன்னதற்கு இணங்க ஆசிரியர் வெளிநாடுகளில் இருக்கும்போது கூட கட்டுப்பாட்டுடன் தோழர்கள் அய்யா வின் பிறந்த நாள் விழாவை கொண்டாடுவது என்பது தான் இந்த இயக்கத்தின் சிறப்பு என்று தொடங்கி, பிரிவு 51 A(h) -இல் கூறப்பட்டுள்ள அறிவியல் மனப்பான்மையை வளர்ப்பது மட்டுமின்றி மனிதநேயத்தை வளர்ப்பது, ஆராய்ச்சி மனப் பான்மையை வளர்ப்பது, சீர்திருத்தம் ஆகிய அனைத்து கொள்கைகளையும் நடைமுறைப்படுத்தியவர் தந்தை பெரியார் என்றார்.
அதற்கான சான்றுகளாக தந்தை பெரியார் மனிதநேயத்தோடு ஜாதி ஒழிப்பை பேசிய பாங்கினையும், ஆராய்ச்சி மனப்பான்மையோடு அனைத்தையும் கேள்வி கேட்டு விடை கண்ட விதத்தையும், பிறப்பு முதல் இறப்பு வரை தமிழ்ச் சமூகத்தில் புரையோடிக் கிடந்த பார்ப்பனியச் சிந்தனையை மாற்றி புதிய புரட்சிகர சீர்திருத்த கருத்துகளை விதைத்த விதத்தை எடுத்துரைத்தார். இன்றைக்கு கடவுளின் பெயரால் நடக்கக்கூடிய செயல்களையும், மூடநம்பிக்கையின் பெயரால் வர இருக்க கூடிய ஆபத்துகளையும் புரிந்து கொள்ளக் கூடிய மாநிலமாக தமிழ்நாடு இருக்கிறது என்றால் அதற்கு அடிப்படை காரணம் தந்தை பெரியார் என்பதற்கான விளக்கங்களை பதிவு செய்தார்.
ஜாதி, மத பேதமற்ற
புதியதோர் உலகை செய்வோம்!
கருத்தரங்கத்திற்கு தலைமை ஏற்று, தலைமை உரையினை கழகத்தின் பிரச்சார செயலாளர் வழக்குரைஞர் அருள்மொழி அவர்கள் வழங்கினார் அவரது உரையில்:
உரையாற்றிய கருத்துரையாளர்களுக்கு தன்னுடைய பாராட்டுகளை பதிவு செய்து உரையை தொடங்கினார். அரசமைப்புச் சட்டத்தின் பிரிவு 51A(h) என்பதை சட்ட ரீதியாக எப்படி புரிந்து கொள்ள வேண்டும் என்பதையும், இந்தப் பிரிவினை நீதிபதிகள் எப்படி அணுகுவார்கள் என்பதையும், இன்றைக்கு இருக்கக்கூடிய நீதிபதிகளின் மனநிலையில் இருந்து அதை நாம் எப்படி பார்க்க வேண்டும் என்பதை எடுத்துரைத்தார்.
மேலும், இன்றைய சூழலில் தந்தை பெரியாருடைய பிறந்தநாளை ஜப்பான், சிங்கப்பூர் போன்ற நாடுகளில் அங்கு வாழும் தமிழர்கள் கொண்டாடக் கூடிய நிலையில் பெரியாரின் கொள்கைகள் எந்த அளவிற்கு அனைவருக்கும் தேவைப்படுகிறது என்பதை விளக்கினார். இந்த சமூகத்தினுடைய மகிழ்ச்சியை, சுயமரியாதையை சீர்குலைக்க கூடிய சக்தியாக பாசிசமும் பிஜேபியும் இருக்கின்ற நிலையில், எல்லாவற்றிற்கும் மத சாயம் பூசி விவாத நிகழ்ச்சிகள் தொடங்கி பள்ளிக்கூடங்கள் வரை கேள்வி கேட்பவர்களை நோக்கி உங்கள் பெயர் என்ன? என்று கேட்பதன் மூலமாக மதவெறியை தூண்ட நினைக்கக்கூடிய சக்திகளுக்கு இடையில் தான் பெரியாரின் தேவை அதிகரித்து இருக்கிறது என்பதை விளக்கினார்.
அறிவியல் என்பது இரு வகைகளில் இருக்கின்றது. ஒன்று மெட்டீரியல் சயின்ஸ் மற்றொன்று சோசியல் சயின்ஸ் என்று கூறி, மெட்டீரியல் சயின்ஸ் என்பது என்னவென்றும், சோசியல் சயின்ஸ் என்பதைத்தான் தந்தை பெரியாரின் வழியில் நின்று நாம் அணுக வேண்டும் என்பதை பல்வேறு ஆதாரங்களுடன் விளக்கினார். சுதந்திரம் என்பது உள்ளபடியே எது என்பதை ரவீந்திரநாத் தாகூர் அவர்களின் வரிகளின் மூலமாக எடுத்துரைத்து, இந்த சமூகம் எப்படிப்பட்ட சமூகமாக இருக்க வேண்டும் என்ற பெரியாரின் கனவுகளை கவிதை வரிகளால் பாரதிதாசன் வடித்த விதத்தையும், அந்த கவிதைகளின் வரிகளை கூறி ஜாதி, மத பேதமற்ற புதியதோர் உலகை செய்வோம் ; அதற்கு அடிப்படையாக பெரியார் கொள்கைகளை நாம் பரப்புவோம் என்று பதிவு செய்தார்.
பிரிப்பது ஆரியம்; இணைப்பது திராவிடம்!
நிறைவாக திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் தலைவர் பேராசிரியர் சுப.வீரபாண்டியன் சிறப்புரை ஆற்றினார். அவரது உரையில்: ஆரியத்திற்கும் திராவிடத்திற்கும் அடிப்படையாக இருக்கக்கூடிய வேறுபாடுகளை அடுக்கடுக்காக விளக்கினார். தந்தை பெரியாரின் பிறந்தநாளில் பிரதமர் மோடி பிறந்தநாளை கொண்டாடினால் அவருக்கும் வாழ்த்து சொல்லக் கூடிய அளவிற்கு தமிழ்நாட்டை தந்தை பெரியார் பக்குவப்படுத்தி இருக்கக்கூடிய பாங்கினை விளக்கினார். ஜாதிய ரீதியாகவோ, மத ரீதியாகவோ, கருத்தியல் ரீதியாகவோ யார் ஒருவரையும் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகள் இன்றி அணுகக் கூடிய போக்கினை விளக்கினார். அடிபணிய வைக்க நினைப்பது ஆரியமாகவும், யாரையும் அடிமைப்படுத்த நினைக்காமல் இருப்பது தான் திராவிடம் என்ற பெரியாரின் கொள்கைகளை இன்றைய சூழலுக்கு ஏற்ப ஒப்பிட்டுப் பேசினார்.
அதிலும், ஒன்றிய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் அவர்கள் ஓட்டல் உரிமையாளர் தன்னை நோக்கி கேள்வி எழுப்புவதைக் கூட பொறுத்துக் கொள்ள முடியாமல் மன்னிப்பு கேட்க வைப்பது தான் ஆரியத்தினுடைய வடிவமாக எல்லா காலத்திலும் இருக்கிறது. ஆனால் தனி அறையில் மன்னிப்பு கேட்டவரை பற்றி எந்த இடத்திலும் வெளிப்படுத்தாமல் அவர்களின் சுயமரியாதையும் சேர்த்து காத்து நின்ற கொள்கைதான் திராவிடம்; அந்த தலைவர் தான் பெரியார் என்பதை எடுத்துரைத்தார். பிளவுப்படுத்தி, மக்களைப் பிரித்து அதன் மூலம் ஆட்சி செய்ய நினைப்பது ஆரியம்; ஆனால் மக்களை இணைக்க கூடிய சித்தாந்தம் தான் திராவிடம், அதனை பெரியாரின் கொள்கையின்படி பரப்புவோம் என்று பதிவு செய்தார்.
தந்தை பெரியாரால்தான் வாழ்கிறோம். இந்த நிலையை அடைந்திருக்கிறோம் என்பதற்காக தந்தை பெரியாருக்கும் நன்றி தெரிவித்து, வருகைப் புரிந்த அனைத்துத் தோழர்களுக்கும் நன்றி கூறி கழகத்தின் வடசென்னை மாவட்டத் தலைவர் வழக்குரைஞர் தளபதி பாண்டியன் நன்றியுரை ஆற்றினார். நிகழ்வில் பெரியார் களம் இறைவி இணைப்புரை வழங்கினார்.