சர் ஜான் மார்ஷல் 1913இல் தட்சசீலத்தில் முதலில் தொல்லியல் அகழ் ஆய்வுகளை மேற்கொண்டார். 1918இல் தொல்லியல் அகழ் ஆய்வில் கண்டெடுத்த தொல்பொருட்களைக் கொண்டு தட்சசீலத்தில் தொல்லியல் அருங்காட்சியகத்தை அமைத்தார். பின்னர் சாஞ்சி மற்றும் சாரநாத் பவுத்த தொல்லியல் களங்களில் அகழ் ஆய்வுப் பணிகளை மேற்கொண்டார்.
ஜான் மார்ஷல், சிந்து வெளி நாகரிகம் மற்றும் மவுரியப் பேரரசர் அசோகர் காலம் குறித்தான ஆவணங்களை ஆதாரங்களுடன் வெளியிட்டார். இந்தியத் தொல்லியல் ஆய்வகத்தின் முதல் தலைமை இயக்குநரான அலெக்சாண்டர் கன்னிங்காமின் வழிகாட்டுதலின்படி ஜான் மார்ஷல், 1920இல் அரப்பா மற்றும் மொகஞ்சதாரோவில் (தற்போது பாகிஸ்தானில் உள்ளது) அகழாய்வுகளை மேற்கொண்டார்.
சிந்துவெளிப் பண்பாட்டை ஆய்வாளர் ஜான் மார்ஷல் உலகிற்கு அறிவித்த நாள் செப்டம்பர் 20, 1924; ஜான் மார்ஷல் 1902ஆம் ஆண்டு துவங்கி 1928ஆம் ஆண்டு வரையில் பிரிட்டிஷ் இந்தியா அரசாங்கத் தின் தொல்லியல் ஆய்வகத்தின் தலைமை இயக்குநராக இருந்தார். இவர்தான் அரப்பா மற்றும் மொகஞ்சதாரோ தொல்லியல் களங்களில் அகழ் ஆய்வுகளை மேற்கொண்டு உலகிற்கு அறிவித்தவர். ஜான் மார்ஷல் மொகஞ்சதாரோ மற்றும் அரப்பா எனும் இரண்டு இடங்களில் நடைபெற்ற தொல்லியல் ஆய்வுகளின் கூறுகளை ஒருங்கிணைத்து ஆய்வு செய்து, இந்த இரண்டு நாகரிகங்களும் ஒரே மாதிரியாக இருப்பதைக் கண்டறிந்தார். மேலும் இது திராவிட மொழிக்குடும்பத்தின் நாகரிகமே, வேத நாகரிகத்திற்கும் இதற்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்பதையும் தெரிவித்தார். வேத காலத்தை விட 1500 ஆண்டுகள் பழைமையான நாகரிகம் இது என்பதையும் ஜான் மார்ஷல் நிரூபித்தார்.
பவுத்தத்தின் தொன்மங்களைத் தேடிப் புறப்பட்டவர்களின் விடையாகவே சிந்துவெளி நாகரிகம் நமக்குக் கிடைத்தது மேலும் சிந்துவெளியானது ஒன்றரை மில்லியன் சதுர கிலோமீட்டர் கொண்ட பரப்பளவிலான பெரிய நாகரிகமாகும். இந்த நாகரிகம் கி.மு 2600ஆம் ஆண்டு தொடங்கி கி.மு 2500 – 2000 ஆண்டுகளில் முதிர்ச்சி அடைந்தது
சிந்துவெளி நாகரிகம் செம்பு காலத்தைச் சேர்ந்தது. சிவப்பு – கருப்பு மற்றும் கருப்பு – சிவப்பு மண்பாண்டங்கள் கிடைத்துள்ளன. மூடப்பட்ட கழிவுநீர் கால்வாய்கள், தார் கொண்டு தண்ணீர் கசிவைத் தடுத்து, கட்டமைக்கப்பட்ட பெரிய குளம், பொது தானியக் களஞ்சியம் இருப்பது என்பன இந்த நாகரிகத்தில் உபரி கிடைத்ததற்கான சான்றாக அமைந்துள்ளன. களிபங்கன் எனும் இடத்தில் நடைபெற்ற அகழ் ஆய்வில் கிணற்றுக்காக செய்யப்பட்ட செங்கற்கள் மண் மற்றும் செம்பினால் செய்யப்பட்ட கலைப் பொருட்கள் கிடைக்கப் பெற்றன.
சிந்து சமவெளியில் உள்ள 600 ஊர்களின் பெயர்கள் – தமிழ்ப் பெயர்களேயாகும். கீழடி அகழ் ஆய்வுக்குப் பிறகு – தமிழ் மொழிக்கும், சிந்து சமவெளிக்கும் இடையிலான தமிழ் – திராவிட உறவு மேலும் உறுதிப்படுத்தப்பட்டது.
வெளியிலிருந்து இந்நாட்டுக்குள் பிழைக்க வந்த ஆரியர்களின் படை எடுப்பு சிந்து சமவெளி அழிவுக்கு முக்கிய காரணமாகும். ஜான் மார்ஷல் சிந்துவெளி திராவிட நாகரீக அழிவிற்கு காரணம் வெளியிலிருந்து வந்த அந்நியப் படையெடுப்பே என்று பல சான்றுகளோடு கூறியுள்ளார். அதனையே மேலும் ஆய்வு செய்து “இந்திய வரலாறு – ஒரு மார்க்சிய கண்ணோட்டம்!” எனும் நூலை எழுதிய ஈ.எம்.எஸ்.நம்பூதிரி பாத் – சிந்து சமவெளியில் இருந்த அணைகளை ஆரியர்கள் உடைத்தனர் என்று ஜான்மார்ஷலின் ஆய்வுக்கட்டுரையை மேற்கோளிட்டுக் காட்டியுள்ளார்
Very useful information for everyone to be aware of what happened in the history, and thank ‘Viduthalai’ to do such service for this creates a better social awareness in the so!