இந்திய பிஜேபி அரசு கூறும் ‘‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’’ கூட்டாட்சி முறையை சிதைக்கும்-நடைமுறைக்கும் சாத்தியமில்லை!

Viduthalai
2 Min Read

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் எதிர்ப்பு

சென்னை, செப். 20- ‘‘ஒரே நாடு ஒரே தேர்தல்’’ நடை முறைக்கு சாத்தியம் இல்லை, கூட்டாட்சி முறையை சிதைக்கும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்துக்கும், சட்டமன்றத்துக்கும், உள்ளாட்சி மன்றங்களுக்கும் என தனித்தனியாக தேர்தல் நடத்தப்பட்டு வருகிறது. இதன் காரண மாக கால விரயமும், செலவும் ஏற்படுகிறது. ஒரே நாடு ஒரே வரி என ஜி.எஸ்.டி.யை சாத்தியப்படுத்தியதை போல‘ஒரே நாடு ஒரே ‘தேர்தல்’ முறையை கொண்டு வர பா.ஜனதா அரசு முனைப்பு காட்டி வருகிறது.

அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு
தேசிய ஜனநாயக கூட்டணியின் இந்த கனவு திட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக குடியரசு மேனாள் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் அமைக்கப்பட்ட குழு கடந்த மார்ச் மாதம் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவிடம் தனது அறிக்கையை தாக்கல் செய்தது.
டில்லியில் பிரதமர் மோடி தலைமையில் நேற்று முன்தினம் (18.9.2024) நடைபெற்ற ஒன்றிய அமைச்சர வைக் கூட்டத்தில் ‘‘ஒரே நாடு ஒரே தேர்தல்’’ திட்டத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

மக்களவைக்கும், நாடு முழுவதும் உள்ள அனைத்து மாநிலங்களின் சட்டமன்றங்களுக் கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தவேண்டும், இதன்பிறகு 100 நாட்களுக்குள் நாடு முழுவதும் உள்ளாட்சித் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என்பதே ராம்நாத் கோவிந்த் குழுவின் பரிந்துரை ஆகும்.
ஒரே நாடு ஒரே தேர்தலுக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. உண்மையான பிரச்சினைகளில் இருந்து மக்களை திசை திருப்பும் தந்திரமாக இதை செய்துள்ளதாக அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூறியுள்ளார்.
இதேபோல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, திரிணாமுல் காங்கிரஸ், பகுஜன் சமாஜ், ஆம் ஆத்மி, ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா உள்ளிட்ட கட்சி கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எதிர்ப்பு
இதேபோல் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலி னும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் நேற்று (19.9.2024) வெளி யிட்ட சமூக வலைத்தள பதிவில் கூறியிருப்பதாவது:-
‘‘ஒரே நாடு ஒரே தேர்தல்’’ எனும் முன்மொழிவு நடைமுறைக்கு சாத்தியமற்றதும், இந்தியாவின் பரந்துபட்ட தேர்தல் முறையின் சிக்கல்களைக் கவனத்தில் கொள்ளாததும், கூட்டாட்சியியலைச் சிதைப்பதும் ஆகும். வெவ்வேறு மாநிலங்களில் வெவ்வேறு காலங்களில் தேர்தல் நடப்பது, அந்தந்த மாநிலத்துக்குரிய பிரச்சினைகள், ஆட்சி முன்னுரிமைகள் உள்ளிட்ட காரணங்களால் ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ நடை முறைக்கு ஒவ்வாதது.
எதார்த்தத்துக்கு முரணாக அனைத்து மாநில அரசுகளின் ஆட்சிக்காலத்தையும் ஒரே வரிசையில் கொண்டு வருவது என்பது இயல்பாக நடக்கும் அரசு நிர்வாகத்துக்கு இடைஞ்சலை உருவாக்கும்.

விலைவாசி உயர்வு
இந்த முன்மொழிவு என்பதே மொத்தத்தில் பா.ஜன தாவின் ஆணவத்தைத் திருப்திப்படுத்துவதற்கான நகர்வுதானே ஒழிய, இதனை ஒரு போதும் அவர்களால் நடைமுறைப்படுத்த இயலாது. இந்திய ஜனநாயகம் ஒற்றைக்கட்சியின் பேராசைக்கு ஏதுவாக வளைக்கப்படலாகாது.
ஒன்றிய அரசானது இத்தகைய திசைதிருப்பல் உத்திகளில் தனது ஆற்றலை வீணடிப்பதை விட்டு விட்டு, வேலையில்லாத் திண்டாட்டம், விலைவாசி உயர்வு, மாநிலங்களுக்கு வளங்களைச் சமமாக பகிர்ந்தளித்தல் ஆகிய முக்கியமான விவகாரங்களில் கவனம் செலுத்த வேண்டும்.
இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *