சென்னை, செப்.18- நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்ட எல்லைகளில் கண்காணிப்பை தீவிரப்படுத்த மாவட்ட சுகாதார அலு வலர்களுக்கு பொது சுகாதாரத்துறை உத்தர விட்டுள்ளது.
கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தில் நிபா வைரஸ் பாதித்து கல்லூரி மாணவன் பலியானார். இந்த நிகழ்வைத் தொடர்ந்து நீலகிரி மாவட்டத்தில் கேரளா மாநில எல்லை யொட்டிய தமிழ்நாடு எல்லை பகுதிகளில் சுகாதார துறையினர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இதில் கூடலூர், நாடுகாணி, சோலாடி, தாளூர், நம்பியார்குன்னு, பாட்டவயல் உள்ளிட்ட மாநில எல்லை நுழைவுப் பகுதி களில் இன்று முதல் சுகாதாரத் துறை அதிகாரிகள் சோதனைகளை துவங்கி உள்ளனர்.
சுகாதாரப் பணியாளர்கள் வாகனங்ளில் வரும் பயணிகளிடம் விசாரணை செய்து, காய்ச்சல் அறிகுறிகள் உள்ள நபர்களை கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
கேரளா மாநிலத்தில் ‘நிபா வைரஸ்’ பாதிப்பால் ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில் தமிழ்நாடு எல்லையோரப் பகுதிகளில் கண்காணிப்பை தீவிரப்படுத்த மாவட்ட சுகாதார அலுவலர்களுக்கு பொது சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில்; தமிழ்நாடு எல்லைக்குள் ‘நிபா வைரஸ்’ நோய் தொற்று அறிகுறிகளுடன் (காய்ச்சல்/வலிப்பு/தலைவலி) சந்தேகத்திற்குரிய நோயாளிகளை கண்டறிந்து உடனடியாகப் புகாரளிக்க வேண்டும்.
அரசு மற்றும் தனியார் மருத்துவர்களுக்கு மாவட்ட சுகாதார அலுவலர்கள் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். ஒருங்கிணைந்த நோய் கண்காணிப்பு திட்டத்துடன் இணைந்து சுகாதார தகவல் தளத்தின் மூலம் கடுமையான அக்யூட் என்செபாலிடிஸ் சிண்ட்ரோம் (AES) நோயாளிகளை சரியாக கண்டறிய வேண்டும்.
முக்கியமாக கேரளாவை ஒட்டிய நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் ‘நிபா வைரஸ்’ பாதிப்புக்கான கண்காணிப்பை அதிகரிக்க வேண்டும். நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் தேவையான பாதுகாப்பு உபகரணங்களைப் பயன்படுத்தி, அறிகுறி உள்ள அனைத்து நபர்களையும் பரிசோதிக்க வேண்டும்.
தமிழ்நாடு – கேரள எல்லையோரப் பகுதி சோதனைச் சாவடிகளில் 24 மணி நேரமும் சுகாதாரக் குழுக்கள் செயல்பட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.