நெல்லை, செப்.18- நெல்லையில் டேங்கர் லாரி மோதிய கோர விபத்தில் மோட்டார் சைக்கிளில் கோவிலுக்கு சாமி கும்பிடசென்ற ஒரே குடும்பத்தினர் 4 பேர் பலியானார்கள்.
பொறியாளர் குடும்பம்
நெல்லை ராமையன்பட்டியை சேர்ந்தவர் கண்ணன் (வயது 40), பொறியாளர். பாளையங்கோட்டை யில் உள்ள தகவல் தொடர்புத்துறை நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். இவருடைய மனைவி செல்வி. இவர்களுடைய மகள்கள் மாரீஸ்வரி (12). சமீரா (7). மாரீஸ்வரி கங்கை கொண்டான் அரசு பள்ளியில் 7ஆம் வகுப்பும், சமீரா அருகில் உள்ள பள்ளியில் 1ஆம் வகுப்பும் படித்து வந்தார்கள். கண்ணன் தற்போது மனைவி செல்வியின் சொந்த ஊரான கங்கை கொண்டான் அருகே உள்ள ராஜபதி கிராமத்தில் குடும்பத்துடன் வசித்து வந்தார்.
கோவிலுக்கு சாமி கும்பிட…
இந்த நிலையில் கண்ணனின் மாமியாரான ஆண்டாள் (60) தூத் துக்குடி மாவட்டத்தில் உள்ள ஒரு கோவிலுக்கு சாமி கும்பிட நேற்று (17.9.2024) புறப்பட்டார். அப்போது பேத்திகளுக்கு நேற்று பள்ளிக்கூட விடுமுறை என்பதால், அவர்களையும் அழைத்துச்செல்ல முடிவு செய்தார்.
அப்போது கண்ணன் வீட்டில் இருந்து வேலைக்கு செல்வதற்காக மோட்டார் சைக்கிளில் புறப்பட்டார்.அவருடன் குழந்தைகள் மற்றும் மாமி யார் ஆண்டாள் ஆகியோர் நெல்லையில் வந்து இறங்கி, பேருந்தில் கோவிலுக்கு செல்ல திட்டமிட்டனர்.
டேங்கர் லாரி மோதியது
நேற்று காலை கண்ணனுடன் மோட்டார் சைக்கிளில், குழந்தைகள் மாரீஸ்வரி, சமீரா மற்றும் ஆண்டாள் ஆகியோர் புறப்பட்டனர். நெல்லை தச்சநல்லூர் ரவுண்டானாவை கடந்து வடக்கு புறவழிச்சாலையில் உள்ள ரெயில்வே பாலம் அருகே அவர்கள் சென்று கொண்டிருந்தனர்.
அப்போது சேரன்மாதேவியில் இருந்து சந்திப்பு ரயில் நிலையம் அருகில் உள்ள ஆயில் நிறுவனத்துக்கு சென்று டீசல் நிரப்புவதற்காக ஒரு டேங்கர் லாரி வந்தது.
சிறுமிகள் உள்பட 4 பேர் பலி
ரயில்வே மேம்பாலம் அருகே உள்ள உலகம்மன் கோவில் எதிரே வந்தடேங்கர் லாரி எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இந்த கோர விபத்தில் கண் ணன், ஆண்டாள், சிறுமிகள் மாரீஸ்வரி, சமீரா ஆகிய 4 பேரும் சாலையில் தூக்கி வீசப்பட்டனர். படுகாயம் அடைந்த 4 பேரும் ரத்தவெள்ளத்தில் நிகழ்வு இடத்திலேயே துடிதுடித்து பலியானார்கள்.
இதுபற்றி தகவல் அறிந்த காவல் துறையினர் நிகழ்வு இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.
லாரி டிரைவர் கைது
விபத்து குறித்து நெல்லை மாநகர போக்குவரத்து புலனாய்வு பிரிவு காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து, டேங்கர் லாரியை ஓட்டி வந்த பத்த மடை பகுதியை சேர்ந்த கணேசன் என்பவரை கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
கோவிலுக்கு சாமி கும்பிட சென்ற ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் லாரி மோதி பலியான நிகழ்வு நெல்லையில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.