நம்பிக்கைகள் வாழ்வியலின் வழித்தடம்
மூடநம்பிக்கைகள் வாழ்நிலையைச் சீரழிக்கும் தடம்
நம்பிக்கைகளை ஊட்டினார்
நல்வழி காட்டினார்
காங்கிரஸ் இயக்கத்தில்
பெரும் பங்கு ஆற்றினார்
வைக்கம் அன்று
நாய்கள் நடமாடலாம்
மாடுகள் நுழையலாம்
கோயில் தெருக்களில்
மனிதர்கள் நுழையக்கூடாது
களம் கண்டார்
சிறை சென்றார்
மானுட உரிமைகளின் மீட்பர் ஆனார்
இன்றோ கேரள, தமிழ்நாடு அரசுகள்
பெரியாருக்கு விழா
எடுக்கின்றன!
களம் காண்
தொடர் களங்கள் காண்
இறுதி வெற்றி நமக்கே
இது தான் பெரியார் நமக்கு
விட்டுச் சென்ற நம்பிக்கை
சுயமரியாதை இயக்கம் தொடங்கி
100 ஆண்டுகள்
எத்தனை தடைகள்
எத்தனை முறை சிறைத் தண்டனைகள்
அஞ்சவில்லை
கெஞ்சவில்லை
80 அகவையிலும்
சமூக விடுதலைக்காகச்
சிறைத் தண்டனை பெற்ற ஒரே தலைவர்
அவர் தான் பெரியார்
70 ஆண்டுகளுக்கு முன்பே
எதை மதிக்க வேண்டும் என்று
பெரியார் கூறியது இன்று மானுட நெறியாய் நமக்கு நம்பிக்கை
ஊட்டுகிறது .
‘படிப்பை மதிக்க வேண்டுமென்றால்
நூலகத்தை மதிக்க வேண்டும்.”
அறிவை மதிக்க வேண்டுமென்றால்
கலைக்களஞ்சியத்தை மதிக்க வேண்டும்
பணத்தை மதிக்க வேண்டுமென்றால்
ரிசர்வ் வங்கியை மதிக்க வேண்டும்.
மாடுகள் மனிதனுக்குப் பால் கொடுக்கின்றன.
நாய்கள் பாதுகாப்பு தருகின்றன.
இவற்றில் எல்லாம் வேறுபட்டு
மனிதர்களிடம் என்ன இருக்கிறது?
என்ற கேள்வியை எழுப்பி, மற்றவர்களுக்கு உதவி செய்யக் கூடிய குணம் ஒன்று தான் மனிதனை மற்ற உயிர்களிடம் இருந்து வேறுபடுத்தி அடையாளப் படுத்துகிறது என்றார் பெரியார்.
இது தான் பெரியார் கண்ட மெய்யியலின் அடிப்படை. இந்த உயரிய மெய்யியலைத்தான் பெரியார் தனது வாழ்நாளில் பொதுவாழ்வில் முழுக்க முழுக்கப் பின்பற்றினார்.
மதவெறி ஜாதி வெறி கும்பல்
பெரியாரை அன்றும் எதிர்த்தது.
ஒன்றிய அரசின் ஆதரவோடு சில அடிதடி. பணம் பறிக்கும் பாலியல் வன்முறைக் கும்பல் பெரியாரை இன்றும் வம்புக்கு இழுக்கிறது.
ஆனால் இன்றைய தகவல் புரட்சிக் காலத்தில் எல்லாத் தடைகளையும் முறியடித்து பெரியாரின் உயர் சிந்தனைகள் வலம் வருகின்றன. அனைத்து மாநிலங்களிலும் பெரியாரின் தொண்டு உணரப்பட்டுப் போற்றப்படுகிறது. தூற்றுபவர்களின் சதி தூக்கி எறியப்படுகிறது.
2022 ஆம் ஆண்டில் ஓர் அரிய நூல் வெளிவந்தது.
அரசமைப்புச் சட்டம் பேசுகிறது- சட்டத்திற்காக அர்ப்பணிக்கப்பட்ட வாழ்க்கை (The Speaking Constitution -A Sisypean Life in Law- page 194) என்பது நூலின் தலைப்பு.
ஆந்திர மாநிலத்தின் மூத்த வழக்குரைஞர், இடதுசாரி சிந்தனையாளர், மனித உரிமைகள் செயற்பாட்டாளர் மறைந்த கே.ஜி. கண்ணபிரான் எழுதிய நூலாகும்.
“பழைமைவாதத்தையும், தெளிவில்லாத மதம் சார்ந்த கருத்துருக்களையும், தான் உயர்ந்த ஜாதி என்ற ஆதிக்க எண்ணத்தையும் மக்கள் மீது பார்ப்பனர்கள் திணித்தற்கு எதிராகச் சுயமரியாதை இயக்கத்தின் வழியாகப் பெரியார் இராமசாமி ஓர் அறிவுப் போரைத் தொடுத்தார்.
இத்தகைய உறுதியான மரபு அழியாமல் தொடர்வதுதான், பிரேமானந்தாவையும், சங்கராச்சாரியையும் சட்டத்தின் வழி தண்டிப்பதற்கு உதவியது.”
(In Tamilnadu EVR or Periyar, took on the intellectual onslaught against these obscurantist religious practices foisted by Brahmins on the population and caste hegemony they set up by launching self-respect movement. It is the survival of strong tradition that was responsible for the prosecution of Premananda and Shankaracharya – page -194)
இக்கருத்தை வழங்கியவர் அக்கிரகாரத்து அதிசய மனிதர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
சுயமரியாதை நூற்றாண்டில்
புகழ் பெற்ற மாமனிதர் அளித்த
சான்றிதழ் பெரியார் யார் என்பதை
உலகிற்கு உணர்த்துகிறதல்லவா!
பெரியார் கொள்கை
திக்கெட்டும் பரவட்டும்
சமூக நீதி வெல்லட்டும்
பொதுமை பூக்கட்டும்