உலகின் பல நாடுகளிலும் தந்தை பெரியார் பிறந்த நாள் விழாக் கொண்டாட்டம்!

5 Min Read

தந்தை பெரியாரின் 146ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா – இங்கு அங்கு எனாதபடி பல நாடுகளிலும் மிகப் பெரும் எழுச்சியுடன் நடைபெற்றுள்ளது.

‘மண்டைச் சுரப்பை உலகு தொழும்’ என்று தந்தை பெரியார் பற்றி புரட்சிக் கவிஞர் பாடினாரே (1958இல்) அதனை இப்பொழுது நடைமுறையில் பார்க்கிறோம்.

செப்டம்பர் 15ஆம் தேதி ஜப்பான் – டோக்கியோவில் அங்கு வாழும் தமிழர்களால் தந்தை பெரியார் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டுள்ளது.

திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் மானமிகு கி. வீரமணி அவர்கள் பங்கேற்றுச் சிறப்புரையாற்றினார்.
(தி.மு.க. மாநிலங்களவை உறுப்பினர் எம்.எம். அப்துல்லா, அறிஞர் அண்ணா அவர்களைப்பற்றி அதே விழாவில் பேசினார்)

நேற்று (17.9.2024) தந்தை பெரியார் பிறந்த நாளில் சிங்கப்பூரில் கருத்துரையாற்றினார் தமிழர் தலைவர்.
அமெரிக்கா வெர்ஜீனியாவில் தந்தை பெரியார் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டுள்ளது. கழகப் பொதுச் செயலாளர் முனைவர் துரை. சந்திரசேகரன் பங்கேற்றுள்ளார்.

தி.மு.க. சார்பில் சென்னையில் நேற்று (17.9.2024) மாலை முப்பெரும் விழா நடத்தப்பட்டுள்ளது. அரசியல் கட்சி தொடங்கப் போவதாக அறிவித்திருக்கும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் சென்னை பெரியார் திடலில் தந்தை பெரியார் சிலைப் பீடத்தில் மலர் மாலை வைத்து, பூக்களைத் தூவி மரியாதை செலுத்தியுள்ளார்.
சுருக்கமாகச் சொல்லப் போனால் பிஜேபி வகையறாக்களைத் தவிர, அத்தனை அரசியல் கட்சிகளும், சமூக அமைப்புகளும் தந்தை பெரியார் பிறந்த நாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடி யுள்ளனர்.

அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேயிலிருந்து, ராஷ்டிரிய ஜனதா தளத் தலைவரும் மேனாள் பீகார் துணை முதலமைச்சர் தேஜஸ்வி வரை தந்தை பெரியார் பிறந்த நாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டுள்ளனர்.

உத்தரப்பிரதேசத்தில் தந்தை பெரியார் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டுள்ளது. கொல்கத்தா சாந்தி நிகேதனில் கொண்டாடப்பட்டுள்ளது.

வங்கமொழியில் தந்தை பெரியாரின் ‘இராமாயணப் பாத்திரங்கள்’’ என்ற நூல் வெளிவந்துள்ளது. கழகம் வெளியிட்ட “The Collected Works of Thanthai Periyar” என்ற நூல் பஞ்சாப் மொழியில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.

தந்தை பெரியாரின் நூல்கள் 21 மொழிகளில் தமிழ்நாடு அரசால் மொழி பெயர்ப்பதாக அறிவிக்கப்பட்டு இதுவரை ஜப்பானீஸ், அரபிக், உருது, பிரஞ்சு, மராத்தி, ரஷ்யா மற்றும் ஆங்கில மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டு நூல்களும் வெளி வந்துள்ளன.

ஏற்றத் தாழ்வுகள் எந்த வகையில், எந்த வடிவத்தில் இருந் தாலும், அவை ஒழிக்கப்பட வேண்டும்; ‘பேதமற்ற இடம்தான் மேலான திருப்தியான இடம்’ (‘குடிஅரசு’ 11.11.1944) என்பதுதான் தந்தை பெரியாரின் கொள்கை.

‘உள்ளதைப் பங்கிட்டு உண்பது, உழைப்பைப் பங்கிட்டு செய்வது என்ற நிலை ஏற்பட்டால் கடவுளுக்கு வேலையோ, அவசியமோ இருக்காது’’ (‘விடுதலை’ 3.11.1970) என்ற கொள்கைகள் ஒரு குறிப்பிட்ட நாட்டு மக்களுக்கு மட்டுமே

தேவையான கொள்கை என்று சொல்ல முடியுமா?

1) ‘மக்கள் சமூக வாழ்வில் ஒருவருக்கொருவர் எவ்வித உயர்வு – தாழ்வும் இருக்கக் கூடாது.

2) மனித சமுதாயம் பொருளாதாரத் தன்மையில் ஒருவருக்கொருவர் பணக்காரன், ஏழை என்கின்ற வித்தியாசமில்லாமல், எல்லாப் பொருளும், பூமியும் எல்லோருக்கும் சரி சமமாக இருக்க வேண்டும்.

3). மனித சமூகத்தில் ஆணுக்கும், பெண்ணுக்கும் எவ்வித வித்தியாசமும் இல்லாமல் சகல துறைகளிலும் சரி சமத்துவம் இருக்க வேண்டும்.

4). மனித சமூகத்தில் ஜாதி, மதம், வருணம், தேசம், கடவுள் ஆகிய அபிமானங்களை அறவே ஒழித்து உலக மனித சமூக நேய ஒருமையே நிலவ வேண்டும்.

5). உலகில் உழைப்பாளி என்றும், முதலாளி என்றும், பிரிவி னையே இல்லாமல், சகல தேவைகளுக்கும் சகல மனிதர்களும் சரி சமமாகப் பாடுபட்டு, அவற்றின் பயனை எல்லோரும் சரிசமமாக அனுபவிக்க வேண்டும்.

6) ஒவ்வொரு மனிதனும் வெற்றிற்கும், எவ்விதத்திலும் அடிமையாகாமல், அவனவன் அறிவு, ஆராய்ச்சி, உணர்ச்சி, காட்சி ஆகியவைகளுக்கு இணங்கி நடக்க சர்வ சுதந்திரமும் இருக்க வேண்டும். (‘குடிஅரசு’ 6.12.1947 பக்கம் 9)
என்பதுதான் சுயமரியாதை இயக்கத்தின் தத்துவம் என்று கூறுகிறார் தந்தை பெரியார்.

இவை ஒரு நாட்டு மக்களுக்கு மட்டுமா பொருந்தக் கூடியவை? எல்லா நாடுகளிலும் ஏதோ ஒரு வகையில் பேதம் இருக்கத்தான் செய்யும். அந்த நோய்க்குத் தந்தை பெரியாரின் தத்துவமும், சித்தாந்தமும் பொருந்தக் கூடிய மருத்துவம்தானே!

‘இன்றைய தினம் வேண்டுமானால் சுயமரியாதை இயக்கம் ஒரு சில வகுப்பாருடன் போராடத் தோன்றியதாகத் தோன்றினாலும், அதுவல்ல அதன் இலட்சியம்.

ஒரு இயந்திரத்தைச் சுற்றும்போது முதலில் சுற்றும் சிறு வேகம் போல், இன்று ஒரு சிறு வகுப்பார் உணர்ச்சியோடு போராடத் தோன்றியதாகக் காணப்படுகிறது. மற்றபடி பின்னால், அது உலகத்தையே ஒன்றுபடுத்த உலக மக்களையே ஒரு குடும்பச் சகோதரர்களாகச் செய்யும் முயற்சியின் போதுதான் அதன் உண்மை சக்தியும், பெருமையும் வெளியாகும்’’ (‘குடிஅரசு’ 17.2.1929) என்று கூறும் தந்தை பெரியர்தம் சிந்தனைச் செழுமையைச் சீர்தூக்கிப் பார்த்தால்தான் தந்தை பெரியார் உலகமயமாகி வருகிறார். அந்த அடிப்படையில் தான் உலகின் பல நாடுகளிலும் தந்தை பெரியார் போற்றப்படுகிறார் – அவரின் பிறந்த நாட்களும் கொண்டாடப்படுகின்றன என்றால், அவரின் கொள்கைகள் வரவேற்கப்படுகின்றன என்று பொருள்படும்.
அந்த உலகத்தை தந்தை பெரியார் எதிர்நோக்குகிறார்.

‘மனித சமூகத்தினரிடம் அன்பு கொண்டு, சம நோக்குடன் மக்களுக்குச் சேவை செய்ய வேண்டுமென்ற ஆசையுள்ள மக்களை, அப்படிப்பட்ட சமதர்ம நோக்கமுள்ள உண்மைத் தொண்டர்களை இரண்டு கைகளையும் நீட்டி, மண்டியிட்டு வரவேற்க சுயமரியாதை இயக்கம் காத்திருக்கிறது. அது உலக மக்கள் எல்லோரையும் பொறுத்த இயக்கம்’ (‘குடிஅரசு’ 30.7.1933) என்கிறார் தந்தை பெரியார்.

இந்த அடிப்படையைத் தான் இவ்வாண்டு தந்தை பெரியார் பிறந்த நாள் ‘விடுதலை’ மலர் கட்டுரையிலும் ஆசிரியர் என்ற முறையில் மானமிகு கி. வீரமணி அவர்கள் ஆசிரியர் உரையாக எழுதியுள்ளார்.
‘பெரியார் உலகமயமாகிறார் – உலகம் பெரியார் மயம்’’ என்று ஆசிரியர் உரையில் குறிப்பிட்டிருப்பது இந்த அடிப்படையில்தான்!

21 மொழிகளில் தந்தை பெரியார் அவர்களின் கருத்தாழமுள்ள நூல்கள் மொழி பெயர்க்கப்பட்டு, உலகைச் சுற்றி வரும்போது தந்தை பெரியாரின் எதிர்பார்ப்பில் – ஒரு பெரும் பாய்ச்சலாக இருக்கும் என்பதில் அய்யமில்லை.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *