அன்னபூர்ணா ஓட்டல் உரிமையாளரை போல், சென்னை திருவல்லிக்கேணி முரளி கஃபே உரிமையாளரும் தந்தை பெரியாரிடம் போய் ஒரு சம்பவத்துக்காக மன்னிப்பு கேட்டாராம். ஆனால் பெரியாரோ இந்த செய்தியை தனது விடுதலை பத்திரிகையில் கூட போடக் கூடாது என சொல்லிவிட்டாராம். இதனால்தான் அவர் பெரியார். முரளி கஃபே வரலாறு குறித்து ஒரு சிறிய வரலாற்றுக் கதையை தெரிந்து கொள்ளலாமா?
இதுகுறித்து கோவி லெனின் ஒரு காணொலி காட்சியில் கூறியிருப்பதாவது:
அப்படி என்னங்க சொல்லிட்டாரு அந்த அன்னபூர்ணா ஓட்டல் உரிமையாளர்? “நிதியமைச்சர் நிர்மலா அம்மா, நீங்க போட்டிருக்கிற ஜிஎஸ்டியால எங்கள் கம்ப்யூட்டரே குழம்பிப் போய்விடுகிறது.
அதனால், ஜிஎஸ்டி வரியை முறைப்படுத்துங்கள். ஜிஎஸ்டி வரியை ரத்து செய்யுங்கள் என்று கூட அவர் சொல்லவில்லை. அதற்காக அவரை வரவழைத்து மன்னிப்பு கேட்க வைத்து அதை காணொலி எடுத்து பரப்பிவிட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
அந்த காணொலியைப் பரப்பினது யாரு என பாஜகவுக்குள்ளேயே சண்டை நடந்துகிட்டு இருக்கு. அன்னபூர்ணா ஓட்டல் நிலையை பார்க்கும் போது, ஏற்கெனவே நடந்த ஒரு ஓட்டலின் வரலாற்றை நாம் பார்க்க வேண்டியிருக்கிறது.
1956ஆம் ஆண்டு மே மாதத்தில் இருந்து 1957ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரைக்கும் திருவல்லிக்கேணி பாரதி சாலையில் இருந்த முரளி கஃபே எனும் பிராமணாள் ஓட்டல் முன்பு திராவிடர் கழகத்தினர் தொடர்ந்து போராட்டம் செய்தார்கள். பிராமணாள் கஃபே என்பது ஒரு வர்ணத்தை குறிக்கிறது. மற்றவர்களை இழிவுப்படுத்துகிறது என சொல்லி தந்தை பெரியார்தான் அந்த போராட்டத்தை அறிவித்தார்.
இதையடுத்து நாள்தோறும் அந்த ஓட்டல் வாசலில் பத்துப்பத்து பேராக வந்து போராட்டம் நடத்துவார்கள். ஓட்டல்காரர்கள் விரட்டி அடிப்பார்கள். பிறகு காவல் துறையினர் கைது செய்துக் கொண்டு செல்வார்கள். மறுநாள் இன்னொரு 10 பேர் வருவாங்க! இப்படியே இது நடந்துக் கொண்டே இருந்தது. இதனால் அந்த ஓட்டல் நிர்வாகம் ஒரு நாள் மாடியிலிருந்து கொதிக்க கொதிக்க வெந்நீரை எடுத்து அவர்கள் மீது ஊற்றியது.
ஆயினும், இதை தாங்கிக் கொண்டு தொடர்ந்து போராட்டம் நடத்தினார்கள். ஒரு வழியாக அந்தப் போராட்டம் முடிவடைந்து. அந்த பிராமணாள் கஃபே என்பது நீக்கப்பட்டு முரளி அய்டியல் கஃபே என பெயர் மாற்றம் பெற்று அந்த போராட்டம் வெற்றி பெற்றது. அப்போது அந்த ஓட்டல் முதலாளி ஒரு இரவு நேரத்தில் சென்னை சிந்தாதிரிப்பேட்டை அலுவலகத்தில் இருந்த தந்தை பெரியாரை போய் பார்த்தார்.
தனது நிர்வாகம் செய்த தவறுகளுக்கு வருத்தம் தெரிவித்தார். அவரிடம் மன்னிப்பும் கேட்டார். அந்த கஃபே உரிமையாளர். அந்தக் காலத்தில் ரகசியமாக முதுகுக்கு பின்னாடி காட்சிப் பதிவு எடுக்குற அலைபேசி எல்லாம் கிடையாது. ஒளிப்படப் பிடிப்பாளர்கள் இருப்பார்கள். அதை எடுக்கலாம். ஆனால் பெரியார் அந்த ஒளிப்படத்தையும் எடுக்கவில்லை–! இந்த செய்தியை கூட தனது விடுதலை பத்திரிகையில் போடக் கூடாது என கறாராக சொல்லிவிட்டார். அதனால்தான் அவர் பெரியார்! அதனால்தான் இது பெரியார் மண்! என்ன செய்தாலும் பாஜக இங்கே ஏன் ஜெயிக்க முடியலைனு இப்போது தெரிகிறதா?
– கோவி லெனின் முகநூல் பதிவிலிருந்து…