முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தந்தை பெரியார் குறித்த ஒரு நிமிட காணொலியை சமூகவலைதளத்தில் வெளியிட்டு தன்னுடைய வாழ்த்து செய்தியை அதோடு பகிர்ந்துள்ளார்.
புரட்டுக் கதைகளுக்கும் – வறட்டு வாதங்களுக்கும் வளைந்து கொடுக்காதீர்கள். எல்லாவற்றுக்கும் மேலானது சுயமரியாதை என இனமான உணர்வூட்டி நிமிர்நடை போட வைத்த பகுத்தறிவுப் பகலவனுக்குப் புரட்சி வணக்கம்!
இன்று உலகம் முழுவதும் தமிழர் உயர்ந்த நிலைகளில் இருப்பதற்கு, தந்தை பெரியாரின் சிந்தனையும் உழைப்புமே அடித்தளம்!
ஆயிரமாண்டு மடமையைப் பொசுக்கிய அவரது அறிவுத்தீதான், நமது பாதைக்கான வெளிச்சம்! அந்த வெளிச்சத்தில் சமத்துவ உலகத்தை நிறுவுவதே நமது தலையாய பணி!
– – – – –
இளைஞர் நலத்துறை மற்றும் தமிழ்நாடு விளையாட்டு வளர்ச்சித்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து செய்தி
ஈராயிரம் ஆண்டு மடமைக்கு எதிரான ஈரோட்டுப் பூகம்பம் – பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் பிறந்த நாள் இன்று. பழைமை சிந்தனைகளால் பாதுகாக்கப்பட்ட அநீதிகளையும், மூட நம்பிக்கைகளையும் பகுத்தறிவு கொண்டு சுட்டெரித்த சுயமரியாதை சூரியன் தந்தை பெரியார் இன்றைக்கும், என்றைக்கும் நம் தமிழ்நாட்டின் அடையாளம். உடலால் மறைந்தாலும்; என்றும் மறையாத – எக்காலமும் பொருந்துகிற திராவிடத் தத்துவமாய் நம்மோடு வாழ்கின்ற பெரியாரின் கருத்துகளை அடுத்தடுத்த தலைமுறைக்கு இன்னும் வேகத்தோடும் – ஆழத்தோடும் கொண்டு சேர்க்க உறுதியேற்போம். #சமூகநீதி_நாள் போற்றுவோம்! தந்தை பெரியார் வாழ்க!