பெரியாரிடத்தில் முழு நம்பிக்கை வைத்து நடந்து கொள்ளுங்கள்
“பார்ப்பனரல்லாதோருக்கு நான் சொல்வது என்னவென்றால் – தலை மைத்துவம், மக்கள் ஒற்றுமை, தலைவ ரிடம் மரியாதை ஆகியவற்றை மாற்றார் களிடமிருந்து பார்த்துப் படித்துக் கொள் ளுங்கள். காலம் கடவா முன்னர் கற்றுக் கொள்ளுங்கள். ஆதலால் உங்கள் தலை வரைக் குறைகூறுவது புத்திசாலித்தனமான காரியமாகாது. எனவே, தலைவர் பெரியாரிடத்தில் முழு நம்பிக்கை வைத்து மதித்து நடந்து கொள்ளுங்கள்.
– புரட்சியாளர் அம்பேத்கர் சென்னையில் கூறியது
‘குடிஅரசு’, 30.9.1944
கொள்கைக்காக உயிரையும் கொடுப்பவர்!
மதிப்பு வாய்ந்த என் நண்பர் தோழர் இராமசாமி நாயக்கர் அவர்கள் தற்காலத்திய பெரிய சமூகச் சீர்திருத்தக்காரராவார். அவர், சமூகச் சீர்திருத்தத்தை மிகவும் புனிதமாகக் கருதுகிறார். தம் கருத்தை நிறைவேற்றுவதில், அவர் எத்தகைய தியாகமும் செய்யத் தயாராயிருக்கிறார். எந்த ஒரு கொள்கையைத் தாம் நேர்மையானதாக எண்ணினாரோ, அதற்காக அவர் பல தடவை சிறை சென்றதும் உங்களுக்குத் தெரியும். சமூகச் சீர்திருத்தக் கொள்கை முற்போக்கடைய, இன்னும் எத்தனை தரம் வேண்டுமானாலும் சிறைக்குப் போகவும், மற்றும் தமது உயிரையே கொடுக்கவும் அவர் தயாராயிருக்கிறார். தோழர் ஆர்.கே. சண்முகம் அவர்கள் தெரிவித்தது போல், சமூகச் சீர்திருத்தத் துறையில் பலர் அனேக வருஷம் பாடுபட்டுப் பயன் பெறாமற் போன வேலையைச் சில வருஷத்தில் இவர் பயனளிக்குமாறு செய்து விட்டார்.
முன்னாள் முதல் மந்திரி, பனகல் அரசர் சர்.பி. ராமராயநிங்கவாரு அவர்கள் (1928)
நூல்: உலகத் தலைவர் பெரியார் வாழ்க்கை வரலாறு – 1
சரியென்று பட்டதை வலியுறுத்துபவர்!
நான் காங்கிரசிலிருந்த காலம் முதற் கொண்டு நாயக்கர் அவர்களை அறிவேன். அவர் மற்றவர்களுடைய உணர்ச்சி எவ்வாறு பாதிக்கப்படும் என்பதை கொஞ்சமும் மதியாது, தமக்குச் சரியென்று பட்டதை வலியுறுத்தி வந்த ஒரு காரணத்தாலேயே நான் அவரிடம் மாறாத அன்பு கொண்டேன்.
முன்னாள் முதன்மந்திரி, டாக்டர் பி.சுப்பராயன் அவர்கள் (1928)
நூல்: உலகத் தலைவர் பெரியார் வாழ்க்கை வரலாறு
எளிய வாழ்வு
பெரியார் அவர்கள் எளிய வாழ்வு என்று சொல்லிக் கொள்ளாமல், வறியவனும் வெறுக்கக் கூடிய வண்ணம் பாடுபடுகிறார். கிடைத்ததை உண்பதும், கண்டதைக் குடிப்பதும், கிடைக்காவிட்டால் பட்டினியுமே. ஸ்நானம் 4, 5 நாட்களுக்கு இல்லாமலே போனாலுமே போய்விடும். கூப்பிட்ட இடத்திற்குப் போக வேண்டியது. (பிறர்) நினைத்த நேரத்திலெல்லாம் தொண்டை காய்ந்து கால் கடுக்கும் வரையில் பேச வேண்டியது. 3வது வகுப்புப் பிரயாணம்தான். ஆனால், மூச்சுவிடக்கூட இடமிருக்காது கூட்டம். தப்பித் தவறி மேல்வகுப்புக்குப் போனால், அங்கும், அப்பொழுது அதே அவஸ்தைதான். பரிவாரம் ஒன்றுமில்லை. தம் பையைத் தாமே தூக்கிக் கொள்ளவேணும். தளர்ச்சி அதிகரிக்க, துணையாகச் சகா ஒருவர், இருவர் இவ்வளவுதான். சென்றவிடங்களில் அனேகமாய்த் தோப்போ, திடலோ, ரயிலடியோ அல்லது போகும் வண்டிதானோ! எங்காவது ஜாகை, சவுகரியமிருந்தால், அங்கும் 20 பேர் கூட்டம், உறங்க, ஓய்வெடுக்க இடமில்லாமல்! டாக்டர் என்றால் விரோதி. மருந்தென்றால் விஷம். வரவர இப்பொழுதுதான், தன்னுடம்பும் தசை, நரம்புகளாலானதுதான் என்ற எண்ணமுண்டாகியது.
முன்னாள் அமைச்சர், அட்வகேட் எஸ்.முத்தையா முதலியார் அவர்கள்
நூல்: உலகத் தலைவர் பெரியார் வாழ்க்கை வரலாறு -1
பிறர் செய்திராத பெரும் பணி செய்தவர்!
நண்பர் நாயக்கர் அவர்கள், இதுவரையில் வேறு யாரும் செய்திராத அளவு, மறுமலர்ச்சி இயக்கத்தை இந்தத் தென்னாட்டில் பரவச் செய்து விட்டார். இளைஞர் உலகத்தின் முழு ஆற்றலையும், பெருந் தீரத்தையும் ஒன்றாய்க் கூட்டிக் கலந்து, பேரெழுச்சியை உண்டு பண்ணிவிட்டார். இளைஞர் கூட்டம் மட்டுமன்று, முதியவர் கூட்டமுந்தான் அவரால் எழுச்சி பெற்றுவிட்டது. உள்ளபடியே தம்முடைய நாட்டு வளர்ச்சியில் நாட்டம் கொண்ட ஒவ்வொருவரும் ஈ.வெ.ரா. அவர்களுக்குக் கடமைப்பட்டுத்தான் இருக்கிறார்கள்.
– ஆற்காடு சர்.ஏ. இராமசாமி முதலியார் அவர்கள் (1928)
நூல்: உலகத் தலைவர் பெரியார் வாழ்க்கை வரலாறு-1
பேராசிரியர்
உலக அனுபவம் எனும் கலா சாலையை முற்றும் உணர்ந்த பேராசிரியர்!
– கல்கி கிஷ்ணமூர்த்தி
உலகத் தலைவர் பெரியார் வாழ்க்கை வரலாறு – 1
எங்களால் மறக்க முடியாதவர்!
தாழ்த்தப்பட்ட வகுப்பினர்களுக்காக மகத்தான வேலை செய்திருக்கும் திரு. ஈ.வெ.ராமசாமி அவர்களை, எங்கள் சமூகத்தார் என்றும் மறக்கவே முடியாது. வைக்கத்தில் அவர் செய்துள்ள வேலை அளவிடற்பாலது அன்று. அவர் ஒரு காலத்தில் தேசியப் போராட்டத்தில் அமிதவாதக் கொள்கையுடையவராக இருந்தார். சமூக சீர்திருத்தமின்றி அரசியல் சுதந்திரம் கொடுக்கப்படுமாயின், அதனால் எவ்வித நன்மையும் ஏற்படாது. சீர்திருத்தக்காரர்கள் பின்பற்றத்தகுந்த தலைவர் திரு.ஈ.வெ.ராமசாமி ஒருவரேயாவார்.
– ராவ்சாகிப் என்.சிவராஜ், B.A., B.L., M.L.C. (1928)
நூல்: உலகத் தலைவர் பெரியார் வாழ்க்கை வரலாறு – 1
35 கோடி பாமரர்களின் அறியாமையைப் போக்க வேண்டும்
தலைவர் இராமசாமியார் மார்ட்டின் லூதரைப்போல் மதக்கற்பனைகளை நமது நாட்டினின்று ஒழியுமாறு உங்கள் இயக்கத்திற்கு வழிகாட்டியுள்ளார். அவர் காட்டிய வழியைக் கடைப்பிடித்து நமது 35 கோடி பாமரர்களின் அறியாமையைப் போக்க வேண்டுமென உங்களை அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். அறியாமையைப் போக்குவது கஷ்டமென்று அதைரியப்படவேண்டாம். சோவியத் ரஷ்யாவில் 10 வருஷத்தில் 15 கோடி மக்களின் படிப்பின்மையைப் போக்கினார்களென்றால், நமது நாட்டு 35 கோடி ஜனங்களின் அறியாமையைப் போக்குவது கஷ்டமாமோ? “அடிக்க அடிக்க அம்மியும் நகரும்” என்றார் பெரியோர். ஆதலின் உங்களுக்கு ஊக்கமும், உற்சாகமும் தான் வேண்டும்.
– ம.சிங்காரவேலர்
சென்னை சுயமரியாதை மாநாட்டில் உரை, ‘குடிஅரசு’, 3.1.1932
இயற்கையின் அருமைப் புதல்வர் இவர்
மக்களுக்கு அவரவர்களுடைய கடமையை உணர்த்த மாறுதலைக் காட்டி அவர்தம் முயற்சியை வேறு பக்கம் திருப்பிச் சமுதாய முன்னேற்றத்திற்கு வழியமைத்துக் கொடுக்க அவ்வப்போது பெரியார்கள் இயற்கையாகவே தோன்றிக் கொண்டிருப்பார்கள். கண் மூடிப் பழக்கமெல்லாம் மண்மூடிப் போக என்று கூறி ஒரு ராமலிங்கனார் தோன்றியது, மாறுதலைக்காட்டி மக்கள் முயற்சியை வேறு பக்கம் திருப்பத்தான். திராவிட மக்களுக்கு நல் வழி காட்ட, அவர்கள் தம் அடிமை வாழ்க்கையை மாற்றி இன்ப வாழ்வு அமைத்துக் கொடுக்க இயற்கை தோற்றுவித்த பெரியார் தான் நமது ஈரோட்டுப் பெரியார் ஆவார். இயற்கையின் அருமைப் புதல்வர் இவர். ஆதலால்தான் காந்தியாரையும் மிஞ்சிய அளவுக்கு அகிம்சாவாதியாகவும், சாக்ரடீசையும் மிஞ்சிய அளவுக்கு சமுதாயச் சீர்திருத்தக்காரராகவும் பெரியார் விளங்குகிறார்.
தமிழ்ப் பெரியார் திரு. வி.கல்யாண சுந்தரனார் அவர்கள்
குடியரசு, 27.11.1948
இந்த இருபதாம் நூற்றாண்டிலேயே
பெரியார் ஒருவர்தான் இருக்கிறார்
இந்திய உபகண்டத்திலேயே ஜாதி ஒழிப்புக்காகவும், ஜாதி ஆணவ ஆதிக்கங்களை ஒழிப்பதற்காகவும் உண்மையிலேயே பாடுபட்டு உழைத்து வருபவர் பெரியார். இந்த இருபதாம் நூற்றாண்டிலேயே பெரியார் ஒருவர்தான் இருக்கிறார். ஆகவே, ஜாதி ஒழிப்பில் ஆர்வமிக்க அனைவரும் தாழ்த்தப்பட்ட வகுப்பினரும் பெரியார் அவர்களுடன் ஒத்துழைப்பதுடன், வாய்ப்புக் கிடைக்கும்போதெல்லாம் மேடைகளில் அவரது அறி வுரைகளைக் கேட்கும்படி வசதி ஏற்படுத்திக் கொள்வது நல்லது.”
– பாபு.ஜெகஜீவன்ராம்
‘விடுதலை’, 18.10.1960
அவருடைய சேவையை அடிப்படையாகக் கொண்டதுதான்
உண்மையிலேயே தமிழ்நாட்டில் இன்றைக்குள்ள அரசியல் சமுதாய விழிப்புக்கு முக்கிய காரணம் பெரியார் அவர்களின் தொண்டாகும். அவருடைய சேவையை அடிப்படையாகக் கொண்டது தான் இன்றைய தினம் நாம் அனுபவித்துக் கொண்டிருக்கும் சுதந்திர நாட்டின் வாழ்க்கையாகும்.
– முதலமைச்சர் காமராசர்
தந்தை பெரியார் 84ஆம் ஆண்டு பிறந்த நாள் ‘விடுதலை’ மலர்
அனைத்து உலகத்திற்கும் பொருந்துபவை
அனைத்துப் புரட்சிகளுமே ஒடுக்கப்பட்டவர்களுக்கு விடுதலை பெற்றுத் தந்துள்ளவைதாம். பெரியார் அவர்களது விடுதலைக்கு மட்டுமன்றி, சுயமரியாதைக்காகவும் போராடினார். இதுபற்றிய அவரது கருத்து அனைத்துலகத் திற்கும் பொருந்துவதாகும். அவை இன்றைக்கு மட்டும் பொருந்துபவை அல்ல; நாளைக்கும் அதன் பின் வருங்காலம் அனைத்துக்கும் பொருந்துபவை. இந்தியா மட்டுமல்லாமல் அனைத்து உலகத் திற்கும் அவை பொருந்துபவை ஆகும்.
– இந்திய முன்னாள் பிரதமர் சமூகநீதிக் காவலர் வி.பி.சிங்.
(தந்தை பெரியார் 125ஆம் ஆண்டு பிறந்த நாள் ‘விடுதலை’ மலர்)
பெரியாரின் அறிவுப் புரட்சி
பெரியார் அவர்களால் ஏற்படுத்தப்பட்ட அறிவுப் புரட்சி சுலபத்தில் நிற்கப் போவதில்லை. அது போக வேண்டிய தூரத்துக்குப் போய் அடைய வேண்டிய சக்தியை, இலக்கைத் தொட்டுத்தான் நிற்கும். எப்படி வில்லை விட்டுக் கிளம்பிய கணை அடைய வேண்டிய இடத்தில் பாய்ந்தால்தான் அதன் வேகம் நிற்குமோ, அதைப்போல, அவர்களிடத்தில் இருந்து பிறந்த அறிவுக்கணை எந்த இலட்சியத்தை அடைய வேண்டுமோ அதையடைந்தே தீரும்; அதில் அய்யம் யாருக்கும் இல்லை.
– அறிஞர் அண்ணா
(திருச்சியில் 17.9.1967 அன்று நடைபெற்ற பெரியார் பிறந்தநாள் விழா சொற்பொழிவிலிருந்து)
தந்தை பெரியார் 128-ஆம் ஆண்டு பிறந்தநாள் ‘விடுதலை’ மலர்