காரைக்குடி செப். 16- வெங்காயம் பதிப்பகம் சார்பில் மூன்று நூல்கள் வெளியீட்டு விழா பதிப்பகத்தின் நிறுவனர் இக்லாஸ் உசேன் வரவேற்புரையுடன் தொடங்கியது. மேனாள் அமைச்சரும், தி.மு.க. மாநில இலக்கிய அணி புரவலரு மான மு.தென்னவன் தலைமை வகித்து உரையாற்றினார். அவர் தனது உரையில்,
இந்த விழாவில் தலைமை வகித்து உரையாற்ற கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி ஒரு சில கருத்துகளை பேச வேண்டும் என்று நினைக்கிறேன். சுயமரியாதை இயக் கத்தின் நூற்றாண்டு விழாவை நாம் நடத்திக் கொண்டு இருக்கிறோம். நம்மை பார்த்து வாரிசு அரசியலை நடத்துகிறோம் என்று சிலர் கூறுகின்றனர். ஆம்! அவர்களுக்கு நான் சொல்வது இதுதான். நாங்கள் வாரிசு அரசியலைத்தான் நடத்துகிறோம்.
அது கொள்கை வாரிசு அரசியல் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
பெரியார் தொட்டார்! அண்ணா தொடங்கினார்! கலைஞர் தொடர்ந்தார்! தளபதி ஸ்டாலின் தொடர்கிறார்! உதயநிதி தொடருவார்!! எனவே நாங்கள் வாரிசு அரசியலை தூக்கி சுமக்கிறோம். உதயநிதி அவர்கள் சங்கராச்சாரியாரை போற்றினால் அவரை தூக்கி சுமக்க முடியுமா? மாறாக அவர், தந்தை பெரியாரை அல்லவா போற்றுகிறார். பெரியாரின் கொள்கைகளைத்தானே பின் தொடர்கிறார். பேசி வருகிறார். எனவே நாங்கள் உதயநிதி அவர்களை தூக்கி சுமக்கிறோம்.
இன்றைக்கு தந்தை பெரியாரின் கொள்கைகளை, இலட்சியங்களை, கருத்துகளை உலகம் முழுவதும் பரப்பி வரும் பணியை நமது ஆசிரியர் வீரமணி அவர்கள் செய்து வருகிறார். பேராசிரியர் சுப.வீ அவர்களும் செய்து வருகிறார்கள். அதற்காக நாங்கள் ஆசிரியரையும், பேராசிரியரையும் தூக்கி சுமந்து வருகிறோம். இங்கே பேரா.சுப.வீ. பேசும்போது என்னை பார்த்து தி.மு.க. வில் இருப்பவர். அதனால் அவருக்கு தேர்தல் அரசியலில் பணிகள் அதிகம் இருக்கும். அவ்வளவு சிரமத்திற்கு இடையிலும் இங்கே வந்திருக்கிறார் என்றார்.
அவருக்கும், உங்களுக்கும் ஒன்றை சொல்லிக்கொள்கிறேன். நான் தி.மு.க.வில் இருப்பவன் தான். அதேவேளையில் தி.மு.க.வில் இருக்கும் தி.க. காரன் என்பதையும் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். எனவே திராவிட இயக்கத்திற்கான தேவை இன்னும் அதிகம் இருக்கிறது. இந்த இயக்கத்தை நூறாண்டு காலம் எடுத்துச் செல்ல இளைஞர்கள் அணி வகுத்து வாருங்கள்! வாருங்கள் என்று கேட்டு இந்த அளவோடு என் உரையை நிறைவு செய்கிறேன். நன்றி. வணக்கம்!! இவ்வாறு தனது உரையில் பேசினார். இந்த விழாவில் இராம. வைரமுத்து எழுதிய ‘திராவிடம் வென்றது’, எஸ். சொக்கலிங்கம் எழுதிய ‘பங்குச்சந்தை மோசடிகள்’, ‘ஆணையமும் வரலாறுகளும்’ என்ற மூன்று நூல்கள் வெளியிடப்பட்டது.
தி.மு.க. மாநில மாணவரணி தலைவர் ராஜீவ் காந்தி, திராவிட இயக்கத் தமிழர் பேரவை தலைவர் பேரா.சுப.வீரபாண்டியன் ஆகியோர் நூல் ஆய்வரங்கத்தில் பேசினர்.
மாவட்ட தி.க. காப்பாளர் சாமி திராவிடமணி, மாவட்ட தி.க. தலைவர் ம.கு.வைகறை, கழக சொற்பொழிவாளர் தி.என்னாரெசு பிராட்லா, ப.க. துணைப் பொதுச்செயலாளர் முனைவர் மு.சு.கன்மணி, மாவட்ட ப.க. எழுத்தாளர் மன்ற தலைவர் ந.குமரன்தாஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.