தமிழர் தலைவரின் அறிஞர் அண்ணா பிறந்த நாள் அறிக்கை
அரசியலிலும், சமூகத்திலும் பெரியார் வழியில் தனி முத்திரை பொறித்த அண்ணா வாழ்க என்று அறிஞர் அண்ணாவின் 116 ஆவது பிறந்த நாளில், தமிழர் தலைவர் ஆசிரியர் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:
அறிஞர் அண்ணா அவர்கள் – தந்தை பெரியார் அவர்களது பகுத்தறிவு, சுயமரியாதை இயக்கத்தின் தன்னிகரற்ற தளபதியாகியதோடு, தனது எழுத்து, பேச்சு, கலைத் துறைகளில் நாடகம், திரைத்துறை, விவாத மேடைகளில் ஒரு புதுவகையான கொள்கைப் பிரச்சாரத்தின்மூலம் தனது பொதுவாழ்வில் தனி முத்திரையைப் பதித்து, அரசியல் அமைப்பிலும் புகுந்து, ஒரு புதுத் திருப்பத்தை – வரலாற்றை உருவாக்கிய தனி ஆற்றலாளர் அறிஞர் அண்ணா!
‘திராவிட மாடல்’ ஆட்சிக்கு அடித்தளம் அமைத்து, கருதுகோள் – கொள்கை லட்சி யங்களை முன்னெடுத்து முப்பெரும் சட்டங்களை ஒரே ஆண்டில், முதலமைச்சர் பொறுப்பில் இருந்தபோது செய்து, உலகத்தை வியக்கச் செய்தவர்- அறிஞர் அண்ணா! அவரது ஆட்சி பொற்கால “திராவிட ஆட்சியின்’ சீரிய தொடக்க – கால்கோள் விழாவாகும்!
‘‘தந்தை பெரியார் அவர்களே தான் கண்ட, கொண்ட ஒரே தலைவர்” என்று மிகுந்த உறுதி யுடன் உலகுக்குப் பிரகடனப்படுத்தினார்! முதலமைச்சர் போன்ற பெரும் பொறுப்பை மக்கள் அவரிடம் மிகுந்த நம்பிக்கையுடன் ஒப்படைத்த பின்பும்!
அண்ணா மறைந்தபோது –
அய்யாவின் அறிக்கை!
அவரது 116 ஆம் ஆண்டு பிறந்த நாள் பெருவிழா இன்று (15.9.2024).
அவரது மறைவின்போது, அவரது தலைவர் தந்தை பெரியார் கொடுத்த செய்தி என்ன தெரியுமா?
‘அAண்ணா மறைந்தார்; அண்ணா வாழ்க!’ என்ற அறிக்கை ஆழமாக வரலாற்றில் இடம்பெற்றுள்ளது.
அதன் பொருள் – அரசியல், சமூக, பொருளி யலில் அண்ணா என்ற தத்துவம் மறையாது – அது ஒரு தொடராக என்றும் தொடரும் என்பதே!
அண்ணா ஆட்சி ஒரு தொடர் சரித்திரம் என்பதே!
அதன் பிறகு முத்தமிழறிஞர் கலைஞர் ஆட்சி – இன்று ‘திராவிட மாடல்’ நாயகர் மு.க.ஸ்டாலின் ஆட்சி என்பதெல்லாம் அதன் நீட்சியும், மாட்சியும்தான் என்பதையே வருமுன் உரைத்த அரசியல் கணிப்பு!
அதுபோல, அறிஞர் அண்ணாவும், தந்தை பெரியார் என்ற தனது அறிவு ஆசானின் இலட்சியப் பயணத்தினைப்பற்றிக் கூறுவ தையும், அவரது 116 ஆம் ஆண்டு பிறந்த நாள் பெருவிழாவில் நாம் நினைவுபடுத்திக் கொள்வது மிகச் சரியான ஒன்று.
‘‘தந்தை பெரியார் அவர்களால் ஏற்ப டுத்தப்பட்ட அறிவுப் புரட்சி சுலபத்தில் நிற்கப் போவதில்லை.
அது போகவேண்டிய தூரத்திற்குப் போய்,
அடையவேண்டிய இலக்கைத் தொட்டுத்தான் நிற்கும்!
அய்யா பற்றி அண்ணா!
எப்படி வில்லை விட்டுக் கிளம்பிய கணை, அடையவேண்டிய இடத்தில் பாய்ந்தால்தான் அதன் வேகம் நிற்குமோ, அதைப்போல, பெரியாரிடத்தில் இருந்து பிரிந்த அறிவுக் கணை, எந்த லட்சியத்தை அடையவேண்டுமோ, அதை அடைந்தே தீரும்; அதில் யாருக்கும் அய்யமில்லை. அதில் கால அட்டவணையைக் கூட கருதத் தேவையில்லை. அந்தப் பாதையிலே நாம் நடைபோட்டுக் கொண்டிருக்கிறோம்.”
என்னே அற்புத அறிவியல் கணிப்பு!
இன்று பெரியார் உலக மயம்; உலகம் பெரியார் மயம்.
அகிலம் அவர்களை அறிவு, அரசியல் கலங்கரை வெளிச்சமாகவும், வீச்சாகவும் கருதி, கொண்டாடி விடியலைக் கொண்டு வருகிறது!
வாழ்க பெரியார்! வாழ்க அண்ணா!
வெல்க திராவிடம்!
முகாம்: டோக்கியோ தலைவர்,
15.9.2024 திராவிடர் கழகம்