புதுடில்லி, செப்.15- அதானி குழும முறைகேடு தொடா்பாக உச்சநீதி மன்றம் கட்டுப்பாட்டில் விசாரணை நடத்தப் பட வேண்டும் என்று காங்கிரஸ் வலியுறுத்தி யுள்ளது.
இதுதொடா்பாக அக்கட்சியின் பொதுச் செயலா் ஜெய்ராம் ரமேஷ் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவு:
சுவிட்சா்லாந்து பண முறைகேடு விசாரணை அலுவலகத்தின் புலனாய்வைத் தொடா்ந்து, அதானிக்கு நீண்டகாலம் நெருக்கமாக இருக்கும் சாங் சுங் லிங்கின் ரூ.2,610 கோடியை அந்நாடு முடக்கி யுள்ளது.
அதானி குழுமத்துடன் சாங்குக்கு உள்ள நெருக்க மான தொடா்பு ரகசியமானதல்ல. அவா் அதானி குழுமத்தின் பல நிறுவனங்களில் இயக்குநராக இருந்துள்ளாா்.
உலகப் பணக்காரா்கள் தங்கள் செல்வத்தை எவ்வாறு பதுக்கி வைத்தனர் என்பதை விவரித்த பனாமா ஆவணங்களில் சாங்கின் பெயா் இடம் பெற்றது.
அகஸ்டா வெஸ்ட்லேண்ட் ஹெலிகாப்டா் ஊழல் தொடா்பான அமலாக்கத் துறையின் இரு குற்றப் பத்திரிகைகளில் சாங்குக்கு சொந்தமான குடாமி பன்னாட்டு நிறுவனத்தின் பெயா் இடம்பெற்றது.
முந்த்ரா மற்றும் பிற அதானி துறைமுகங்களின் கட்டுமானப் பணி ஒப்பந்தங்களை சாங்கின் மகனுக்குச் சொந்தமான நிறுவனம் பெற்றது.
வடகொரியா மீது அய்.நா. விதித்த தடைகளை மீறியதாக ஷாங்காய் அதானி ஷிப்பிங், அதானி ஷிப்பிங் (சீனா) ஆகிய நிறுவனங்கள் மீது குற்றச்சாட்டு எழுந்த நிலையில், அந்த நிறுவனங்களுடன் சாங்குக்கு தொடா்புள்ளது.
இந்நிலையில், அதானி விவகாரம் குறித்து உச்ச நீதிமன்ற கட்டுப்பாட்டில் விசாரணை மேற்கொள்வது மிகவும் முக்கியம். அதானியின் மெகா ஊழல் குறித்து விசாரணை மேற்கொள்ள உடனடியாக நாடாளுமன்ற கூட்டுக் குழு கூட்டப்பட வேண்டும் என்றாா்.