சென்னை, செப். 14- துணை மருத்துவப் படிப்புகளுக்கும் 7.5 சதவீத இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி. வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்த அறிக்கையில் கூறியிருப்பதாவது: அரசுப் பள்ளிகளில் 6ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை பயிலும் கிராமப்புற ஏழை, எளிய மாணவர்கள் பயன்பெறும் வகையில் மருத்துவம், பொறியியல், சட்டப் படிப்பு மற்றும் சித்தா, ஆயுர்வேதா உள்ளிட்ட படிப்புகளுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீட்டு முறையை தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது.
இதன் மூலம் பல்கலைக்கழகங்கள், அரசு கல்லூரி மற்றும் சுயநிதி கல்லூரிகளில் படிக்கும் வாய்ப்புகிடைப்பது மட்டுமல்லாமல், அவர்களுக்குக் கல்விக் கட்டணம் உள்ளிட்ட அனைத்துக் கட்டணங்களை செலுத்துவதில் இருந்தும் விலக்கு அளிக்கப்படுகிறது.
ஆனால், பிஎஸ்சி (செவிலியர்), பி.ஃபார்ம். போன்ற துணை மருத்துவப் படிப்புகளுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடு இல்லை. இதனால் கல்லூரியில் படிக்க இடம் கிடைக்காதது மட்டுமில்லாமல் வாய்ப்புக் கிடைக்கும் மாணவர்களுக்கு கட்டணச் சுமையும் ஏற்படுகிறது. எனவே, இந்த ஆண்டு முதல் துணை மருத்துவப் படிப்புகளுக்கும் 7.5 சதவீத இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.