கோயம்புத்தூரின் பிரபல மரக்கறி உணவகத் தொடரான சிறீஅன்னபூரணாவின் உரிமையாளர் சீனிவாசன், 11.9,2024 அன்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுடன் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அங்கு அவர் மிக மிக மரியாதையுடன் ஜிஎஸ்டியில் உள்ள முரண்பாடுகள் குறித்து ஒரு கேள்வியை எழுப்பினார்.
“பிரச்சினை என்னவென்றால், ஒவ்வொரு பொருளுக்கும் ஜிஎஸ்டி வித்தியாசமாக விதிக்கப்படுகிறது. உதாரணமாக: பன்னுக்கு (Bun) ஜிஎஸ்டி இல்லை; அதில் கிரீம் வைத்தால், ஜிஎஸ்டி 18% ஆகிறது. இதனால், வாடிக்கையாளர்கள் பன்னையும் கிரீமையும் தனித்தனியாகத் தரும்படி கேட்கின்றனர், அவர்களே பணத்தை மிச்சப்படுத்த பன்னில் கிரீமைத் தடவிக் கொள்கின்றனர். வடக்கில் மக்கள் அதிகம் இனிப்பு சாப்பிடுவதால் நிதியமைச்சர் இனிப்புக்கு 5% ஜிஎஸ்டியும், காரத்திற்கு 12% ஜிஎஸ்டியும் விதித்துள்ளதாக மக்கள் சொல்கிறார்கள். தமிழ்நாட்டில் இனிப்பு, காரம், காபி எல்லாம் சேர்ந்தே போகும். தயவு செய்து இவற்றுக்கு ஒரே சீரான ஜிஎஸ்டியை விதியுங்கள். இந்த ஜிஎஸ்டி குழப்பத்தால் கணினியே சிக்கிக் கொள்கிறது” என்று கூறியுள்ளார்.
மேடையில் நிதியமைச்சர் சீதாராமன் அம்மையார் இதைக் கேட்டு சிரித்தார். ஆனால் பின்னர் வெளியான காட்சிப்பதிவில் ஓட்டல் அதிபர் அவரிடம் மன்னிப்பு கேட்க வைக்கப்பட்டார், மேலும் தான் எந்தக் கட்சியுடனும் தொடர்பில்லை என்றும் கூறியுள்ளார். ஆனால் நிதி அமைச்சர் விமர்சனங்களை ஏற்க மறுக்கிறார், நிர்மலா சீதாராமன், வானதி மற்றும் அவரது ஆதரவாளர்களும் அவரைப் போலவே நடந்து கொண்டு, விமர்சனங்களை மிகவும் சகிக்க முடியாதவர்களாக மாறி வருகின்றனர் என்று விமர்ச்சிக்கப்படுகிறது.
– – – – – –
நிர்மலா சீதாராமனிடம் மன்னிப்பு கேட்ட விவகாரம் தொடர்பாக சமூகவலைதளப் பக்கத்தில் கருத்து தெரிவித்திருந்த மக்களவை உறுப்பினர் கனிமொழி ஒன்றிய அரசு தமிழர்களின் சுயமரியாதையை சீண்டாமல் இருக்கவேண்டும் என்று கருத்து தெரிவித்துள்ளார்
அவர் குறளை மேற்கோள் காட்டி எழுதியது
‘பணியுமாம் என்றும் பெருமை சிறுமை
அணியுமாம் தன்னை வியந்து’ (குறள் 978, அதிகாரம் 98)
ஒன்றிய அரசும், ஒன்றிய அமைச்சர்களும் தமிழர்களின் சுயமரியாதையை சீண்டாமல் இருக்க வேண்டும் என்று எழுதியுள்ளார்.
– – – – –
ஊறுகா மாமியை கேள்வி கேட்டார் பாத்தியளா
நிர்மலாசீதாராமனின் நக்கல் விளக்கம்
ஜிஎஸ்டி குறித்து கேள்வி கேட்டு பிறகு தனியாக அவர் நிதி அமைச்சர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் வானதியிடம் மன்னிப்பு கேட்ட விவகாரம் தொடர்பாக நிர்மலா சீதாராமனிடம் கேள்வி கேட்டபோது –
என்னிடம் கேள்வி கேட்டவர் ரொம்பவும் ஜனரஞ்சகமாக அதாவது எல்லோரும் சிரிக்க வைப்பதற்காக கேட்டார். அது அவரது ஸ்டைல் – அவருக்கு ஜிஎஸ்டி கவுன்சிலில் என்ன என்ன நடக்கிறது என்று தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால் அதை வைத்து ‘பாத்தியளா ஊறுகா மாமியை கேள்வி கேட்டுவிட்டார், ஹே ஹே என்று, என்று எல்லாம் சமூகவலைதளத்தில் பேசுகிறார்கள் அதைப் பற்றி எல்லாம் நான் கவலைப்பட மாட்டேன்’ என்று மிகவும் நக்கலாக ஊடகவியலாளர்களுக்கு பதில் அளித்தார்
இது என்ன புதுக்கூத்து?
தனது கட்சியினர் மன்னிப்புக் கேட்ட காட்சிப் பதிவை வெளியிட்ட விவகாரத்தில் லண்டனில் இருக்கும் அண்ணாமலை உணவக உரிமையாளரிடம் மன்னிப்புக் கேட்டுள்ளார்.
அன்னபூர்ணா உணவகங்களின் மதிப்பிற்குரிய உரிமையாளரான திரு சீனிவாசன் அவர்களுடன் நான் பேசினேன், இந்த எதிர்பாராத தனியுரிமை மீறலுக்கு வருத்தம் தெரிவிக்கிறேன்:
அன்னபூர்ணா சீனிவாசன் அண்ணன் தமிழ்நாட்டின் வணிக சமூகத்தின் தூணாக இருக்கிறார், மாநில மற்றும் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்குக் குறிப் பிடத்தக்க பங்களிப்பை அளித்து வருகிறார். இந்த விவகாரத்தை உரிய மரியாதையுடன் முடித்து வைக்குமாறு அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன் என அண்ணாமலை பதிவு செய்துள்ளார்.
ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் உணவக உரிமையாளர் மன்னிப்பு கேட்ட காட்சிப் பதிவை பொதுவெளியில் பாஜகவினர் வெளியிட்டதற்கு மன்னிப்பு கேட்பதாகவும் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
ஒன்றிய நிதி அமைச்சரிடம் வியாபாரம் தொடர்பாக, ஒரு உணவு விடுதி உரிமையாளர் உரிய இடத்தில், உரிய சந்தேகத்தைக் கேட்கக் கூடாதா? கேள்வியை எழுப்பக் கூடாதா? சந்தேகத்தை கேள்வியை எழுப்பினால், அது என்ன பஞ்சமா பாதகமா? நாடாளுமன்றத்திலேயே நான் வெங்காயம் சாப்பிடாத பரம்பரை என்று சொன்னவராயிற்றே இந்த நிர்மலா சீதாராமன்.
இது ஜனநாயக நாடு தானே! குடிமக்களுக்குக் கேள்வி கேட்கும் உரிமை கிடையாதா? ஓ மறந்தே போச்சு – நடப்பது பாசிச பா.ஜ.க. ஆட்சியாயிற்றே?
இதில் ஒரு வேடிக்கை வினோதம் என்னவென்றால், ஒன்றிய நிதி அமைச்சரிடம் மன்னிப்புக் கேட்டவரிடம் தமிழ்நாடு பிஜேபி தலைவர் மன்னிப்புக் கேட்டதுதான்.
ஓ – ஆரிய – திராவிடப் போராட்டம் அந்த முகாமிலும் வெடிக்க ஆரம்பித்து விட்டது போலும்!