கேள்வி 1: அண்மையில் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் மேற்கொண்ட யாழ்பாணப் பயணத்தின்போது, அங்கு பங்கேற்ற பல்வேறு நிகழ்ச்சிகளின் தொகுப்புகள் ஒளிப்படங்களுடன் தொடர்க் கட்டுரைகளாக ‘விடுதலை’ நாளேட்டில் வெளிவந்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. அவற்றை நூலாக வெளியிட ஆவன செய்வீர்களா?
– இரா. சு. மணி, காட்பாடி.
பதில் 1: தங்கள் யோசனைக்கு மிகுந்த நன்றி. விரைவில் புத்தகம் வெளிவரும்.
–- – – –
கேள்வி 2: தமிழ்நாட்டில் நடைபெறுகின்ற திராவிட மாடல் அரசு நாத்திகர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றும் வகையிலும், மக்களிடையே அறிவியல் மனப்பான்மையை வளர்க்கும் நோக்கிலும் ‘பகுத்தறிவுத் துறை’ ஒன்றை உருவாக்க நடவடிக்கை மேற்கொள்ளுமா?
– மல்லிகா,மாங்காடு.
பதில் 2: பல துறைகளில் பகுத்தறிவு வளர வேண்டும். அதற்கு அறிவியல் மனப்பான்மையை வளர்க்க வேண்டும். அப்படி செய்வதற்கு இந்திய அரசமைப்புச் சட்டத்தின் பிரிவு 51ஏ(எச்) படி, அறிவியல் மனப்பான்மையயும், கேள்வி கேட்கும் சிந்தனையையும், சீர்திருத்தத்தையும், மனித நேயத்தையும் வலியுறுத்த வேண்டும் என்று இருக்கிற காரணத்தால் அரசு இப்படி ஒரு துறையை உருவாக்க வேண்டும். நமது அரசு அதனைச் செய்தால் இந்தியாவில் முதலில் இதனைச் செயல்படுத்திய அரசு என்று ‘திராவிட மாடல்’ அரசு புகழ்பெறும். நமது முதலமைச்சர் அவர்கள் அது குறித்து சிந்திக்க வேண்டிய கட்டம் இது!
–- – – –
கேள்வி 3: நாற்பது ஆண்டுகளுக்குப் பின்னரான இலங்கைப் பயணத்தின்போது தொப்புள்கொடி உறவுகளின் இன்றைய வாழ்க்கை நிலை குறித்து தாங்கள் தெரிந்துகொண்டது குறித்து?
– கி. மாமல்லன், திருப்போரூர்
பதில் 3. இன்னும் அச்சம் அகலவில்லை.ஒரு தேக்க நிலை இருக்கிறது. பெரும்பாலான ஈழத்தமிழர்களுக்கு அந்தப் பாடத்தைக் கற்று, ஓரணியில் திரண்டு ஒன்றாக இணைந்திருக்க வேண்டும் என்ற ஒருங்கிணைப்புச் சிந்தனை இன்னும் வரவில்லை. தமிழர்கள் அவிழ்த்துக் கொட்டப்பட்ட நெல்லிக்காய் மூட்டையைப் போல சிதறிக் கிடக்கிறார்கள் என்கிற வேதனை நமக்கு உண்டு. சிந்திக்கக் கூடியவர்கள் இருக்கிறார்கள். இளைய தலைமுறைக்கு அப்படி சிந்தனையும், செயலாக்க ஊக்கமும் தேவை. பாடத்தை போதிய அளவுக்குக் கற்றாலும் அதை செயல்படுத்தக்கூடிய பக்குவத்தைப் பெற்று ஒன்று சேர்ந்து, செயல்பட வேண்டியது அவசியம் என்பதைப் புரிந்து கொண்டேன்.
–- – – –
கேள்வி 4: தமிழ்நாட்டில் மாணவர்கள் இருமொழிக் கொள்கையைத்தான் விரும்புகிறார்கள் என்று உயர்கல்வித் துறை அமைச்சர் கூறுவது சரியா?
– வா.விசுவம், ,வேலூர்
பதில் 4: சொல்வதற்குத் தகுதி படைத்தவர்கள், சொன்னால் ஏற்றுக் கொள்ளத்தானே வேண்டும்.
–- – – –
கேள்வி 5: தமிழ்நாட்டில் மதுவிலக்கை அமல்படுத்த வேண்டுமென்ற கோரிக்கைகள் திடீரென்று சூடு பிடித்துள்ளனவே. அதுகுறித்து தங்கள் கருத்து?
– நா.வல்லரசு, மதுரை
பதில் 5: தத்துவ ரீதியாக அது சிறப்பாகத் தோன்றலாம். நடைமுறை ரீதியாக அதற்கு என்ன வாய்ப்பு என்பதைத்தான் பகுத்தறிவு உள்ள நாம் சிந்திக்க வேண்டும்.
முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் முதலமைச்சராக இருந்தபொழுது, பட்ஜெட்டின்போது ஒரு அரிய கருத்தை, இதுபோன்ற நிலைமைகள் ஏற்படுவதற்குப் பதிலாகச் சொன்னார்.
‘‘தமிழ்நாடு அரசின் இன்றைய நிலை, கொளுத்தப்படாத கற்பூரத்தைச் சுற்றி, கொழுந்து விட்டு எரியக்கூடிய நெருப்புப் பந்தம், நெருப்பு வளையம் இருந்தால் என்ன நிலையோ, அந்த நிலைதான்‘‘ என்றார்.
எனவே, அகில இந்தியா முழுவதும் ஒன்றிய அரசு, மாநில அரசுகள் அதை நடைமுறைப் படுத்தினால்தான், இந்தத் திட்டம் வெற்றியடைய வாய்ப்பு உண்டு.
இது வருமானம் என்பதைவிட, இதனுடைய பெறுமானம் என்னவென்பதை எடை போட்டுப் பார்க்க வேண்டும்.
–- – – –
கேள்வி 6: நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் நியாமான கோரிக்கையை பேசியதற்காக தொழிலதிபரை மன்னிப்பு கேட்கவைத்துள்ளதே பாஜக?
– தே.பிரபாகரன், நெல்லை
பதில் 6: பா.ஜ.க.வைப் புரிந்துகொள்வதற்கு இது ஒரு வாய்ப்பு.
பா.ஜ.க. ஒரு சர்வாதிகார அமைப்பாகவே தன்னை வெளிப்படையாகக் காட்டிக் கொண்டிருக்கின்றது இதன்மூலம்.
ஜனநாயக நாட்டில், அதுவும் எந்தத் துறையில் யார் பாதிக்கப்பட்டார்களோ, அவர்கள், அந்தத் துறையில் இருக்கக்கூடிய துன்பங்கள், தொல்லைகள் இவற்றைப் பற்றி விளக்கிச் சொல்வதற்கு நாட்டில் உரிமையே இல்லையா?
கருத்துரிமைக்குத் தாங்கள்தான் காவலர்கள் என்பதைப்போல, வெளிநாடுகளில் பேசக் கூடியவர்களுடைய முகத்திரையை, அவர்களே கிழித்து, தெரிவித்துக் கொண்டிருக்கின்றார்கள்.
–- – – –
கேள்வி 7: உத்தரப்பிரதேசத்தில் தாழ்த்தப்பட்ட சில இதர பிற்படுத்தப்பட்ட மக்களின் வீடுகளில் கதவுகள் வைக்கத்தடை, கதவுகள் இல்லாத வீட்டில் ஓநாய்கள் குழந்தைகளை கவ்விச் சென்று தின்றுவிடுகின்றன. இனிமேலாவது அரசு கதவுகளை வைக்க உள்ள ஜாதித் தடைகளை கடுமையான சட்டம் இயற்றி நீக்குமா?
– மா.செங்குட்டுவன், திருச்சி
பதில் 7: அதைவிட மிக முக்கியம். பல ஆண்டு களாக உத்தரப்பிரதேசத்தில் ஓநாய் ஆட்சிதான் நடைபெறுகிறது. ஓநாய்களை விரட்டி, மனிதர்களை ஆட்சி செய்ய வைத்தால், இதுபோன்ற பிரச்சினை களுக்கு ஒட்டுமொத்தமான தீர்வு ஏற்படும்.
–- – – –
கேள்வி 8: இலங்கை அதிபர் தேர்தல் தொடர்பான விவகாரத்தில் மீண்டும் தமிழ்தேசியக் கூட்டணி இடையே பிளவு ஏற்பட்டுள்ளதே?
– சோ.கன்னியப்பன், உத்திரமேரூர்
பதில் 8: இன்னமும் நாம் தமிழ்நாட்டின் நண்டு களாகத்தான் இருப்போம் என்று சொல்கிறார்களே தவிர, ‘‘ஒன்றுபட்டு,ஒரு பெரிய சோதனை, நெருக்கடிக்கு இடையில்கூட பாடங்களை நாம் ஏன் கற்றுக்கொள்ளவில்லை‘‘ என்பதை ஏனோ ஈழத் தமிழர்கள் இன்றைக்கும் உணர மறுக்கிறார்கள் என்பது வேதனையான, வெட்கப்படக்கூடிய ஒன்றாகும்.
–- – – –
கேள்வி 9: அரியானா தேர்தலில் கூட்டணி முறிவிற்குப் பிறகு கெஜ்ரிவாலிற்கு பிணை வழங்கப்பட்டுள்ளதே?
-கல.சங்கத்தமிழன், செங்கை
பதில் 9: பிணை வழங்குவது என்பது நீதித் துறையாக இருந்தாலும், நீதித்துறை இப்பொழுது போகின்ற போக்கைப் பார்த்தால், இதுபோன்ற கேள்விகளுக்கு அதிகமான இடம்வர வாய்ப்புகள் இனியும் உண்டு.
பிள்ளையார் சதுர்த்தியே அதற்கு உதாரணம்.
–- – – –
கேள்வி 10: வக்புவாரிய மசோதா குறித்து ஆலோசனை நடத்த விசுவ ஹிந்துபரிஷத் நடத்திய கூட்டத்தில் ஒன்றிய சட்ட அமைச்சர் மற்றும் மேனாள் நீதிபதிகள் கலந்துகொண்டுள்ளார்களே?
– க.காளிதாசன், காஞ்சி
பதில் 10: முந்தைய கேள்விக்கும், இதற்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது எதிர்பாராத விதமாக. ஏனென்றால், நீதிபதிகளாக இருக்கிறவர்கள், நீதிபதிகளாக ஆவதற்கே அதுதான் தகுதி என்ற முறையில், அவர்கள் தங்களுடைய சுய உருவத்தைத் தற்காலிகமாக மறைத்துக் கொண்டி ருக்கிறார்கள். ஒப்பனை கலைந்து, இன்றைக்கு உருவத்தை முழுவதுமாக வெளிக்காட்டிக் கொண்டிருக்கின்றார்கள். இவ்வளவுதான் வேறுபாடு.