தந்தை பெரியார் எழுதிய நூல்களில் புகழ்பெற்றது `பெண் ஏன் அடிமையானாள்?’. சமூகம் சார்ந்து வாசிக்க விரும்புபவர்களுக்கு முதல் நூலாக அறிமுகப்படுத்தக்கூடிய இந்நூல், இதுவரை சமூகத்தில் நிலவிய அறிவுக்குப் பொருந்தாத, சமத்துவம் இல்லாத மூட கருத்துகள் மீது அதிர்ச்சி அளிக்கும் விதமான மாற்றுக் கருத்துகளை முன் வைத்தது. எழுத்தாளர்கள், சமூகச் செயற்பாட்டாளர்கள், அரசியல்வாதிகள் எனப் பலரும் தங்களின் வாழ்க்கையை மாற்றியமைத்த நூலாக, இந்தப் புத்தகத்தைக் குறிப்பிடுவதைப் பார்க்க முடிகிறது.
“இன்றைக்கு நாளிதழ்களை எடுத்துப் பார்த்தால், பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைகளே தலைப்புச் செய்திகளாகி விட்டன. இவற்றைப் படித்துவிட்டு இயல்பாகக் கடந்துபோகும் மனநிலைக்கும் சமூகம் வந்துவிட்டது துயரம்தான். இதை ஒரே நாளில் மாற்றிவிட முடியாது. ஆண், பெண் ஆகிய இருபாலினம் குறித்த புரிதலைச் சமூகத்துக்குக் கற்பிக்க வேண்டியது அவசியம். குறிப்பாக, பெண் மீது `புனிதம்’ என்ற பெயரில் சுமத்தப்பட்டிருப்பவை சுமைகளே என்று இளம்தலைமுறையினருக்குச் சொல்ல வேண்டும்.
இந்த வேலையைத் தந்தை பெரியாரின் எழுத்துகள் எந்தத் தயக்கமுமின்றி சொல்லுபவை. அதிலும், `பெண் ஏன் அடிமையானாள்?’ எனும் நூல், பெண்களே தங்களைப் பற்றிய கற்பிதங்களிலிருந்து வெளிவர வேண்டிய விடயங்களையும் இணைத்துப் பேசியுள்ளது
திருவண்ணாமலை, ஜவ்வாதுமலை உண்டு உறைவிடப் பள்ளியில் பெண் ஏன் அடிமையானாள் நூல் 200 பிரதிகள், சிலரால் நன்கொடையாக வழங்கப்பட்டிருக்கின்றன. இந்த நூலைப் படித்துவிட்டு ஆர்வத்தோடு பேசிய மாணவர்கள் ஒரு சிலரின் கருத்துகள்:
7ஆம் வகுப்புப் படிக்கும் சிநேகா: “பெரியார் எழுதின பெண் ஏன் அடிமையானாள்னு ஒரு புத்தகம் இருக்கு. அதை நீங்கல்லாம் படிக்கணும்னு ஆசிரியை சொல்லிட்டே இருப்பாங்க. இப்போ, எங்களுக்கு இந்தப் புத்தகம் கிடைச்சுது. அப்பா மட்டும்தான் வெளியே போய்ட்டு வரணும், அம்மா வீட்டுக்குள்ளேயே இருக்கணும் என்பது மாறணும். பெண்களும் நாலு இடங்களுக்குச் செல்வது தப்பில்லை என்று எழுதியிருந்தது புதியதாக இருந்துச்சு.”
8ஆம் வகுப்புப் படிக்கும் ஆர்.மோகனப்ரியா: ‘கற்பு’ என்ற கட்டுரை எனக்குப் புடிச்சுது. ஏன்னா, கற்பு என்பது பெண்ணுக்கும் ஆணுக்கும் ஒண்ணுதான்னு சொன்னதுதான் சரியானது. அப்பறம், கற்பு என்று சொல்வதே, பெண்ணை அடிமைப்படுத்தத்தான் என்பதும் தெரிஞ்சுது.
6ஆம் வகுப்புப் படிக்கும் கே.பூமல்லி: மனைவி இறந்துட்டா, அந்தக் கணவன் இன்னொரு கல்யாணம் செஞ்சுக்கிறார். அந்த மனைவியும் இறந்துட்டா, இன்னொரு கல்யாணமும் செஞ்சுக்கிறார். ஆனா, கணவன் இறந்துட்டா, அந்தப் பொண்ணு இன்னொரு கல்யாணம் செஞ்சுக்கக் கூடாது என்பது சரியில்ல. இதைத்தான் பெரியார் இதில் சொல்லியிருக்கார்.
8ஆம் வகுப்புப் படிக்கும் என். தட்சணா: இந்தப் புத்தகத்தில படிச்சது எல்லாம் புதுசா இருந்துச்சு. ஆண்களுக்கு இருக்குற சுதந்திரம் பெண்களுக்கு இல்லைன்னு புரிஞ்சுது. பெண்களுக்குத் தொந்தரவு ஏதும் கொடுக்கக் கூடாதுன்னு தோணுச்சு.
8ஆம் வகுப்புப் படிக்கும் சக்திவேல்: ‘பெண்கள் விடுதலைக்கு ஆண்மை அழிய வேண்டும்’ என்ற கட்டுரையைப் படிச்சப்ப, அதிர்ச்சியாக இருந்துச்சு. என்னடா இது! ஆண்களையே குறை சொல்ற மாதிரி இருக்கேன்னு நினைச்சேன். ஆனா, முழுப் புத்தகத்தையும் படிச்சப்பறம்தான் அது தப்புன்னு புரிஞ்சுது. பெண்களும் நம்மள மாதிரிதான். அவங்களுக்கு நம்மளால எந்தக் கஷ்டமும் வரக் கூடாது.