அண்ணனே! அறிஞர் கோவே!
ஆளுமைத் திறத்தின் வானே!
தண்ணளி நெஞ்சத் தாயாய்ச்
சாய்தலை தாங்குந் தோளே!
அண்ணலே! அன்பின் ஊற்றே!
அருநிழல் சுரக்குந் தோப்பே!
உன்பெயர் எண்ணுங் காலே
உணர்வெலாம் பாயுந் தேனே!
மணிப்பிர வாள மென்னும்
மாசுடன் தமிழ்க லந்து
தனித்திறம் இழந்த தென்னும்
தாழ்நிலை யுற்ற வேளை
அணிநடை அழகு மின்னும்
அருந்தமிழ் உலகு முண்ணக்
கனிச்சுவை எழுத்தால் பேச்சால்
காத்தனை தமிழை அண்ணா!
சென்னைமா காண மென்றே
செப்பிய நாட்டின் பேரை
திண்ணிய நெஞ்சம் கொண்டு
தீந்தமிழ் நாடென் றாக்கி
அன்னையின் மானங் காத்த
அருந்தவப் புதல்வ னென்றே
தன்கடன் ஆற்றிச் சென்ற
சரித்திரம் நீயே அண்ணா!
சுயமரி யாதை காத்த
திருமணம் செல்லா தென்றே
அயலவர் ஆளு மன்றம்
ஆணவத் தீர்ப்ப ளித்த
கயமையைக் கண்டெ திர்த்துக்
களைந்திடச் சட்டம் தந்து
துயர்நிலை போக்க வந்த
தூயவன் நீயே அண்ணா!
தந்தையின் கொள்கை யெல்லாம்
தத்துவம் என்றே யேற்ற
சிந்தையைக் கொண்ட தாலே
சீர்மிக ஆண்டாய் அண்ணா!
இந்தியைப் புறத்தில் வைத்து
இருமொழிக் கொள்கை தந்து
சந்ததி வாழ வைத்த
சாதனை நீயே அண்ணா!
கற்றவர் அவையெல் லாமுன்
காற்றடம் கண்டோம் அண்ணா!
சொற்றிறஞ் சுடர்வாள் நாவால்
சூழ்பகை அழித்தாய் அண்ணா!
பொற்பத நெஞ்சத் தானாய்ப்
புகழெனும் போதை வென்ற
நற்பதம் கண்டு வெம்பி
நாணிடும் எளிமை உன்முன்!
உற்றதும் பெற்ற தெல்லாம்
உயர்நிலை யடைந்த தெல்லாம்
நற்றிறம் நாங்க ளுற்று
நாற்றிசை பறந்த தெல்லாம்
கற்றறி வாய்ப்பை யுற்றுக்
கயக்கடல் கடந்த தெல்லாம்
பற்றிடக் கொழுகொம் பாகப்
பக்கம்நீ நின்ற தாலே!
தூண்டினாய் சுடர்ந்தோம் அண்ணா!
துலங்கினோம் ஒளிரும் பொன்னாய்!
தாண்டினோம் தடைகள் எல்லாம்!
தாங்கிடுந் தாயுன் னாலே!
வேண்டிய துணர்ந்து தந்த
வேந்தனுன் ஆட்சி யாலே
மீண்டெழ வைத்தாய் அண்ணா
மீட்பராய் நீவந் திங்கே!
தோண்டினால் தொன்மை சொல்லும்
கீழடி நிலத்தைப் போலே
ஊன்றினாய் எங்கள் நெஞ்சில்
உயிர்வளி நீங்காப் போலே!
மூண்டெழும் நெருப்பைப் போலே
முற்றுமாய்ப் பற்றி யெம்மை
ஆண்டவன் நீதான் அண்ணா
ஆளுவாய் தமிழைப் போலே!
ஆண்டுகள் கடந்த போதும்
அகன்றுநீ சென்ற போதும்
ஊன்சிதைந் தழிந்த போதும்
உற்றசீர் நிலைக்கு மென்றும்!
வான்புகழ் கொண்ட நின்பேர்
வையகம் ஒலிக்கு மென்றும்!
மேன்மையின் மேலாய் வாழ்ந்த
மேதமை நீதான் அண்ணா!
– செல்வ.மீனாட்சி சுந்தரம்