வி.சி.வில்வம்
தமிழர் தலைவர் ஆசிரியரின் தலைமையில் இயக்கத்தில் இருக்கிறோம் என்பதே எங்களைப் போன்றோருக்குப் பெருமை என்று கூறுகிறார் மாவட்டக் காப்பாளரான குடியாத்தம் ஈஸ்வரி அம்மா அவர்கள்.
எவ்வளவு நினைவாகக் கத்தியின் அளவைக் கூட
நினைவில் வைத்துள்ளீர்கள்?
ஆமாம்! வரலாற்று நிகழ்வு அல்லவா அது!
பெண்கள் விடுதலை மாநாடு 12.12.1981 அன்று தர்மபுரியில் நடைபெற்றது. அதனையொட்டி ஒரு வாரம் முன்பு வேலூர் மாவட்டம், சோலையார்பேட்டையில் இருந்து, பெண்கள் வழிநடைப் பிரச்சாரம் செய்தோம். அதில் நானும், எங்கள் 4 வயது மகள் இரம்யாவும் கலந்து கொண்டோம். 6 நாட்கள் நடந்து தர்மபுரியை அடைந்த இந்தப் பிரச்சாரப் படையை, தமிழர் தலைவர் அவர்கள் வரவேற்றுப் பெருமை செய்தார்கள். அந்த மாநாட்டில்தான் அடிமைச் சின்னமாம் தாலியை அகற்றும் என் விருப்பத்தைத் தலைவரிடம் மேடையில் கூறினேன்.
நாகரம்பட்டி அத்தையம்மா (விடுதலை சம்பந்தம் அவர்களின் அக்கா )
தன்னிடம் இருந்த 6 இன்ச் கத்தியை என்னிடம் கொடுத்தார். அடிமைச் சின்னமாம் தாலி அகற்றப்பட்டது. மாநாட்டுத் தோழர்களின் வாழ்த்தும் கிடைக்கப் பெற்றது. இந்நிகழ்ச்சியை ஒளிப்படக் கலைஞர் சுபா சுந்தரம் அவர்கள் படம் எடுத்தார். 05.12.77 நாளிட்ட உண்மை இதழில் இது அட்டைப் படமாக வந்தது. இது என் வாழ்வில் மறக்க முடியாத நிகழ்வு. அதேநேரம் உறவினர்கள் சிலரின் ஏச்சும், பேச்சும், வெறுப்பும், புறக்கணித்தலும் நடந்தது. பெரியார் கொள்கை முன் இவையெல்லாம் எம்மாத்திரம்? பின்னாளில் அதுவும் சரியானது.
தங்களின் சொந்த ஊர் எது?
வேலூர் மாவட்டம் குடியாத்தம் எனது ஊர். 1959 ஆம் ஆண்டு பிறந்தேன். 65 வயது ஆகிறது. எனது தந்தை பீடித் தொழில் செய்து வந்தார். ஏழ்மையான குடும்பம். பெற்றோர்கள் மிகுந்த கடவுள் நம்பிக்கையில் இருந்தவர்கள். நான் தொடக்கக் கல்வி முடித்திருக்கிறேன்.
இணையர் பெயர் வி.சடகோபன். அவர்கள் நெசவாளர் குடும்பம். பக்தியும், ஏழ்மையும் அங்கும் இருந்தது. எங்கள் திருமணம் 23.02.1975 அன்று நடைபெற்றது. இணையர் நூலகத்திற்குச் செல்லும் வகையில் “உண்மை” இதழை வாசித்து, பெரியாரை அறிந்தவர். அதன் மூலம் எனக்கும் கொள்கை வாய்ப்புக் கிடைத்தது. என் இணையர் பெட்டிக்கடை ஒன்றை நடத்தி வந்தார். அதில் விடுதலை, உண்மை இதழ்களை விற்பனை செய்து வந்தார்.
தற்சமயம் வேலூர் மாவட்டக் காப்பாளராக இருந்து வருகிறார்.
பெரும்பாலான கூட்டங்களுக்கு இருவரும் சென்று விடுவோம். இயக்க மூத்தோர்கள் ஆம்பூர் பெருமாள் அய்யா, திருப்பத்தூர் ஏ.டி.ஜி அய்யா. சோலையார்பேட்டை கே.கே.சி.அய்யா, வடச்சேரி ஜெகதீசன், மீரா அக்கா, கே.கே.சி.அம்மணி அம்மாள், கே.கே.சி.கமலம்மாள், அற்புதம் அம்மாள் ஆகியோர் எனக்குக் கொள்கை வழிகாட்டியாக இருந்தனர். 1976ஆம் ஆண்டு இயக்கத்தில் உறுப்பினராக இணைந்தேன்.
இயக்கப் பொறுப்புகள் ஏற்று பணி செய்த அனுபவங்கள் உண்டா?
வட ஆற்காடு மாவட்டத்தில், முதன்முதலில் குடியாத்தத்தில் தான் மகளிரணி உருவாக்கப்பட்டது. அதில் நான் நகர மகளிரணி தலைவராக நியமிக்கப்பட்டேன். பின்னர் மாவட்ட மகளிரணி செயலாளர், தலைவர் பொறுப்புகளிலும் இருந்தேன். வேலூர் சத்துவாச்சாரி கனகம்மாள், அம்மா கலைமணி ஆகியோருடன் இணைந்து பணியாற்றிய அனுபவமும் உண்டு. பிறகு மண்டல மகளிரணி தலைவராக இருந்து, தற்சமயம் மாவட்டக் காப்பாளராகப் பணியாற்றி வருகிறேன்.
30.10.1977 அன்று அன்னை மணியம்மையார் தலைமை யில், பிரதமர் இந்திராகாந்தி அவர்களுக்குக் கருப்புக் கொடி காட்டும் நிகழ்வு சென்னை, சைதாப்பேட்பையில் நடைபெற்றது. போராட்டத்தில் பங்கேற்க முதன்முதலாக நான் சென்னை சென்றேன். அன்னை மணியம்மையார், ஆசிரியர் அய்யா இருவரையும் அங்கு பார்த்தேன். 1979 ஆம் ஆண்டு தஞ்சையில் நடைபெற்ற தந்தை பெரியார் நூற்றாண்டு நிறைவு விழாவில் 2 வயது மகளுடன் கலந்து கொண்டேன். பொதுவாகப் பெரும்பாலான ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள், மாநாடுகளில் கலந்து கொண்டுள்ளேன். அதன் மூலம் இயக்க மகளிரின் துணிவு கண்டு, நானும் துணிவு பெற்றேன்.
மற்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்ற நினைவுகள்?
1986இல் தஞ்சை திலகர் திடலில், தமிழர் தலைவருக்கு எடைக்கு எடை தங்கம் வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்றது என்றும் நினைவில் இருக்கும். அப்போது நாங்கள் இருவரும் எங்களின் மோதிரத்தை வழங்கினோம். 1987 இல் ஹிந்தி திணிப்பைக் கண்டித்து, குடியாத்தம் ரயில் நிலையத்தில் பெயர் அழிப்பு போராட்டத்தில் 60 பேர் கைதானோம். அதில் நான் ஒருவர் மட்டுமே பெண். வேலூர் மத்திய மகளிர் சிறையில் 15 நாட்கள் சிறைவாசம். சிறையில் மூச்சிரைப்பு நோய் (ஆஸ்துமா) ஏற்பட்டது. சிறைக் கண்காணிப்பாளர் உடனே இன்ஹேலர தந்து உதவினார். கைதான ஏனைய மாவட்ட மகளிரும் சிறப்பாகக் கவனித்துக் கொண்டனர்.
சிறையில் இருந்து வந்த பிறகு, ஒன்றரை ஆண்டுகள் வழக்கு நடந்தது. தனி ஆளாக நீதிமன்றம் சென்று வருமளவு என்னை உருவாக்கிக் கொண்டேன்.
அதேபோல வேலூர் மாவட்ட மகளிரணி தலைவராக நான் இருந்த காலத்தில், புத்துலகப் பெண்கள் எழுச்சி மாநாடு 2012 இல் நடைபெற்றது. அப்போதைய மாநில மகளிரணி தலைவர் க.பார்வதி அம்மா, செயலாளர் டெய்சி மணியம்மை, அம்மா மனோரஞ்சிதம் ஆகியோர் குடியாத்தம் வந்து ஒரு வாரம் தங்கி இருந்தார்கள். தோழர்கள் ந.தேன்மொழி, பெ.இந்திராகாந்தி உள்ளிட்டோர் வசூல் பணி செய்தோம். அம்மாநாட்டில் என் தலைமையில் பிரமாண்ட மூடநம்பிக்கை ஒழிப்பு ஊர்வலமும், பெரியார் மகளிர் சமூக காப்பணி வகுப்பும் நடைபெற்றது. மகளிர் காப்பணிக்கு ஊத்தங்கரை ஆசிரியர் அழகுமணி தலைமை வகித்தார். மாநாட்டில் செலவுகள் போக ரூ.2 இலட்சம் மீதம் வழங்கினோம்!
பள்ளிக்கூடம் ஒன்று நடத்தி வருவதாக அறிந்தோமே?
ஆமாம்! லிட்டில் பிளவர் மெட்ரிக்குலேசன் எனும் பெயரில் பள்ளி ஒன்று நடத்தி வருகிறோம். எங்களின் ஒரே மகள் இரம்யா தான் செயலாளராக இருந்து, அதனை நிர்வகித்து வருகிறார். 1990ஆம் ஆண்டு ஆசிரியர் கி.வீரமணி அய்யா தான் இந்தப் பள்ளியைத் தொடங்கி வைத்தார். பள்ளியை எப்படி திறம்பட நடத்த வேண்டும் என எங்களுக்கு ஆலோசனை வழங்கினார்கள். மகள் இரம்யா என்கிற சிந்தனை செல்விக்கு 1998இல் சுயமரியாதைத் திருமணம் நடைபெற்றது. அவரின் வாழ்விணையர் கண்ணன். தற்போது இளைஞரணி பொறுப்பில் இருந்து வருகிறார். எங்கள் மகள் வேலூர் மாவட்ட மகளிர் பாசறைத் தலைவராக இருக்கிறார். இவர்களின் திருமணம் அமைச்சர் துரைமுருகன் தலைமையில், அப்போதைய பொதுச் செயலாளர் துரை.சக்ரவர்த்தி நடத்தி வைத்தார்.
கழக மருத்துவர் அணியில் இருக்கும் எங்கள் பெயர்த்தி இரா.க.அறிவுச்சுடர், திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பயிற்சி மருத்துவராக இருக்கிறார். பெயரன் இனியன் தஞ்சை பெரியார் மணியம்மை பல்கலைக் கழகத்தில் எம்.பி.ஏ., முதலாமாண்டு படித்து வருகிறார். வேலூர் மாவட்ட மாணவர் கழகத் தலைவராகவும் இருக்கிறார். குடும்பத்தில் அனைவருமே இயக்கச் செயல்பாட்டில் தான் இருக்கிறோம். எங்களின் லிட்டில் பிளவர் மெட்ரிக்குலேசன் பள்ளியில் ஆசிரியர் அவர்களின் நிகழ்ச்சிகள், துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், அ.இறையன், புலவர் இராமநாதன், வழக்குரைஞர் அ.அருள்மொழி ஆகியோரின் பயிற்சி வகுப்புகளும் நடந்துள்ளது.
அன்னை மணியம்மையார் நூற்றாண்டு விழா
வேலூரில் நடைபெற்றதே?
ஆமாம்! 2017 ஆம் ஆண்டு அன்னை மணியம்மையார் நூற்றாண்டு தொடக்க விழாவை, அம்மா பிறந்த வேலூரில் நடத்த வேண்டும் என ஆசிரியர் முடிவு செய்தார்கள்.
அதன்படியே மாநில மகளிரணி தோழர்களுடன் இணைந்து, வேலூர் மாவட் டப் பொறுப்பாளர்கள் சிறப்பாக நடத்தினோம். மணியம்மையார் அவர் களின் இயக்க அர்ப் பணிப்பு மற்றும் வாழ்க்கை வரலாற்றை விளக்கும் நாடக, நாட்டிய நிகழ்ச்சிகளை, திருச்சி பெரியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர் களுடன், எங்கள் லிட்டில் பிளவர் மெட்ரிகுலேசன் பள்ளி மாணவர்களும் இணைந்து சிறப்பாக நடத்தினார்கள்.
குறிப்பிட்டுச் சொல்லும் வகையில் மறக்க முடியாத
பெரு நிகழ்வுகள் ஏதாவது உள்ளதா?
நிறைய இருக்கிறது. எனினும் 1997இல் உத்திரப்பிரதேசம் லக்னோவிற்கு பெரியார் மேளா நிகழ்ச்சிக்குச் சென்றது, 1990ஆம் ஆண்டில் குடியாத்தத்தில், ஆசிரியர் அவர்களால் தந்தை பெரியார் முழுஉருவச் சிலையைத் திறந்து நிகழ்வு, 2000ஆம் ஆண்டில் டில்லியில் நடைபெற்ற பெரியார் மய்யம் திறப்பு விழா, 2012ஆம் ஆண்டில் எங்கள் பள்ளியில் ஆசிரியர் மூலம் திறக்கப்பட்ட திராவிடர் இயக்க நூற்றாண்டு நினைவுக் கட்டடம், அதன் பின்னர் தந்தை பெரியார் கலையரங்கம், அன்னை மணியம்மையார் அரங்கம், பெரியார், புத்தர், திருவள்ளுவர் சிலைகளைத் திறந்து வைத்த நிகழ்வுகளை மறக்க முடியாது.
அதேபோல 2019 ஆம் ஆண்டு அமெரிக்கா கிரீன் லேண்ட்டில் நடைபெற்ற உலக நாத்திகர்கள் மாநாடு மற்றும் மனிதநேய மாநாடுகளில் பங்கேற்றது, 2024 பிப்ரவரி மாதம் 25 ஆம் தேதி, எங்களின் 50 ஆம் ஆண்டு பொன்விழாவில் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் தலைமையில் கொள்கை விழாவாக நடத்தியது வரை நினைத்துப் பார்க்க ஏராளமான நிகழ்வுகள் உள்ளன.
கழகத் தலைவர் ஆசிரியர் அவர்களின்
சாதனைகளாக எதைச் சொல்வீர்கள்?
ஒவ்வொன்றுமே சாதனைதான்! ஆசிரியரின் கண்ண யராத உழைப்பால் இயக்கம் வீறுநடை போடுகிறது. 9 ஆயிரம் வருமான வரம்பை நீக்கியது, 69 விழுக்காடு வரை இடஒதுக்கீட்டைக் கொண்டு வந்தது, அதற்கான பாதுகாப்புச் சட்டத்தை ஏற்படுத்தியது, இந்திய அளவில் மண்டல் ஆணையத்தைக் கொண்டு வர முன்னணியில் உழைத்தது, பெரியார் மணியம்மை பல்கலைக் கழகம் தொடங்கி அய்ம்பதிற்கும் மேற்பட்ட நிறுவனங்களை வழிநடத்துவது என ஒவ்வொன்றுமே சாதனைதான்!
பகுத்தறிவாளர் கழகம், மாணவர் கழகம், இளைஞரணி, மகளிரணி, மகளிர் பாசறை, மருத்துவரணி, எழுத்தாளர் அணி எனப் பல அமைப்புகளை உருவாக்கி, கடந்த 80 ஆண்டுகளாக ஓயாத பணிகள்தான்! தவிர உலகமே வியந்து பார்க்கும் வண்ணம் திருச்சி சிறுகனூரில் பெரியார் உலகம் அமையவிருக்கிறது.
இதுதவிர பெரியார் கருத்துகளை உலகம் முழுவதும் கொண்டு சேர்த்த சாதனை எனச் சுற்றிச் சுழன்று வருகிறார். விடுதலை ஆசிரியர், பொதுச் செயலாளர், திராவிடர் கழகத் தலைவர் என ஆசிரியரின் வரலாறு நீண்ட நெடியது.
“நம்மால் முடியாதது யாராலும் முடியாது யாராலும் முடியாதது நம்மால் மட்டுமே முடியும்’ என்கிற நம்பிக்கை முழக்கத்தை நமக்குக் கொடுத்தவர். உலகளவில் பல விருதுகளும், திராவிட மாடல் அரசால் தகைசால் தமிழர் விருதும் பெற்றவர். அய்யாவின் தலைமையில் இயக்கத்தில் இருக்கிறோம் என்பதே எங்களைப் போன்றோருக்குப் பெருமை”, எனக் குடியாத்தம் ஈஸ்வரி நெகிழ்ந்து கூறினார்.