ஜாதி முறை நம் நாட்டில் இருந்து ஒழிக்கப்பட்டாக வேண்டும். ஜாதி முறை ஒழிக்கப்பட்டாலன்றி நாம் முன்னேற முடியாது. சோசலிசம் மலர ஜாதி முறை பெரிய தடையாக உள்ளது. ஜாதியும் சமுதாய முன்னேற்றமும் இணைந்து வாழ வழியே கிடையாது. ஜாதி இந்த நாட்டில் தொடர்ந்து இருந்தால் இங்கே எதுவும் நடக்காது. ஜாதி நம் சமுதாயத்தை அரித்துத் தின்று கொண்டே இருக்கிறது. அத்தகைய ஜாதி முறையை ஒழிக்கவோ, கட்டுப்படுத்தவோ எங்களால் எதுவும் முடியவில்லை.
ஆனால் தமிழ்நாட்டில் ஜாதி ஒழிப்புப் பணிக்காக தங்களை அர்ப்பணித்துக் கொண்ட வீரர்கள் உள்ளனர். தந்தை பெரியார் அவர்களும், அறிஞர் அண்ணா அவர்களும் ஜாதி ஒழிப்புப் போரில் நல்ல சாதனையைப் புரிந்த வீரர்கள். ஜாதியை ஒழிப்பதற்கும் ஜாதியை ஒழிக்க வேண்டும் என்பதற்கான சூழ்நிலையை ஏற்படுத்தவும் குறிப்பிடத்தக்க முறையில் இந்த இரு பெருந் தலைவர்களும் கூறிய வழியில் இன்றைய தமிழ்நாட்டு முதலமைச்சர் கலைஞர் தளபதியாக இருந்து செயல்படுகிறார்.
ஜாதி ஒழிக்கப்பட்ட ஓர் இந்து சமுதாயம் மலர வேண்டும் என்பது அல்ல எனது விருப்பம். ஜாதி ஒழிக்கப்பட்ட ஓர் இந்திய சமுதாயம் உருவாக்கப் பட வேண்டும் என்பதே என் விருப்பம். ஏனென்றால், ஜாதிக் கொடுமை என்பது இந்து மதத்தில் மட்டுமே உள்ள ஒரு கேடு அல்ல. இந்து மதத்தில் அது ஆழாமாக வேரூன்றி தனது நிலையைப் பலமாக்கிக் கொண்ட பின் பிற சமுதாயங்களையும் அது பிடித்துக் கொண்டிருக்கிறது. இந்தியாவில் உள்ள முஸ்லீம்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள் போன்ற இந்துவல்லாத பிற சமூகத்தினரையும் கூட ஜாதி முறை கெடுத்து விட்டது. எனவே, இந்தியாவில் ஜாதி ஒழிக்கப்படவில்லையென்றால், ஜனநாயகம் இங்கே நிலவாது; சோசலிசம் மலர முடியாது.
(ஜெகஜீவன்ராம் 15-8-1972,
கடற்கரை கூட்டத்தில்)