கலைஞர் பெருமிதம்
பெரியாருக்குப் பிறகு அவர் ஆரம்ப காலந் தொட்டு சேர்த்து வைத்த ஆஸ்தி – பாஸ்தி, கட்டி வைத்த கட்டடங்கள், அறிவுக் கூடங்கள் – விட்டுச் சென்றுள்ள கொள்கைகள், வீரமிக்க அறை கூவல்கள் இத்தனையையும் கட்டிக் காக்க யாருளர் என்று நமக்கெல்லாம் எழுந்த அய்யப்பாட்டை இதோ, நானிருக்கிறேன் என்று எடுத்துக் காட்டி, ஏறு போல் நம்மை நிமிர்ந்து பார்க்கின்ற என்னரும் இளவல் பெரியாரின் பெருந்தொண்டர்.
சுயமரியாதைச் சுடர், தன்மான முரசு, வீரமணியார் – என் கண்ணிலும், அவர் கண்ணிலும் நீர் துளிர்க்க – அது ஆனந்தப் பன்னீராக இருக்க – ஒருவரையொருவர் தழுவிக் கொண்டோம்.
அறிவுப்பணி, அதற்குத் தேவையான அமைப்புப் பணி, அதிலும் ஓர் கட்டுப்பாட்டுப் பணி என இப்படி கடமைப் பணியாற்றுகிற சுயமரியாதை இயக்கக் கண்மணியாம் வீரமணியாரின் நிர்வாகப் பணியை நேரிலே காணும் வாய்ப்பு இனியும் பல முறை இந்த வாய்ப்பு எனக்கு கிட்ட வேண்டும் என பேராவலுடன் விடை பெற்றுக் கொண்டேன். ஆங்கொரு நூலகத்திற்கு விழா மேடையில் இறுதிக் கட்டமாக ஓர் அறிவிப்பு கலைஞர் கருணாநிதி நூலகம் என்று அது அழைக்கப்படும் என்று!
திணறிப்போனேன்; தேன் குடத்தில் தூக்கிப் போட்டு விட்டார்களேயென்று! பெரியாருக்கு காலணியாய் இருப்பது போல் பெரியார் பெயரில் அமைந்துள்ள அந்தப் பூங்காவில் நூலகம் என்ற ஒரு நுண்ணிய கொடியாக இருந்து விட்டுப் போகிறேன், அது எனக்குப் பிறவிப் பெரும் பயன்தான்.
– திருச்சி பெரியார் மருந்தியல் கல்லூரி நூலகம் திறப்பு விழாவில் கலைஞர் பேச்சு, ” 15.11.2006
****
தாய் வீட்டைப் பார்த்து கற்றுக் கொண்டேன்!
நாங்கள் பெரியார் கட்சிக்குக் காரண கர்த்தாக்கள் என்றால், பெரியாருடைய மாட்சிக்குக் காரண கர்த்தாவாக இன்றைக்கு விளங்குபவர் என்னுடைய ஆருயிர் இளவல் வீரமணி என்று சொன்னால் அதை யாரும் மறுக்க முடியாது.
நானும் தொடர்ந்து பார்த்துக் கொண்டு வருகிறேன். திராவிடர் கழகத்திற்கும். திராவிட முன்னேற்றக் கழகத்திற்கும் இடையிலே ஊடல் ஏற்பட்டு, ஏன் பேச்சுவார்த்தை இல்லாத சூழ்நிலை ஏற்பட்டபோதெல்லாம்கூட. அடுத்த வீட்டில் என்ன நடக்கிறது? என்பதை எட்டிப் பார்த்துக் கொண்டே இருந்தவன்.
ஏனென்றால், அப்படி எட்டிப் பார்த்தது, சதிக்குணத்தால் அல்ல. துர்க்குணம் என்பார்களே அந்தக் குணத்தால் அல்ல – எட்டிப் பார்த்தது. நாம் அந்த வீட்டை தாய் வீடாகக் கொண்டவர்களாயிற்றே. அந்தத் தாய் வீட்டில் நடக்கின்ற காரியங்களையொட்டித்தானே நம்முடைய வீட்டிலும் செயல்பாடுகள் நடைபெற வேண்டும் என்பதற்காக, சுருக்கமாகச் சொன்னால், புரியும்படி சொன்னால் அதைப் பார்த்து நாம் என்னென்ன செய்ய வேண்டும் என்பதைக் கற்றுக் கொள்வதற்காக எட்டிப் பார்த்ததுண்டு. அது ஒன்றும் குற்றமல்ல.
– 29.09.2007 பெரியார் மணியம்மை பல்கலைக் கழகம் தொடக்கவிழா உரையில் முதலமைச்சர் கலைஞர்