நாமக்கல், செப்.13- ‘சான் றிதழ் சரிபார்க்கும் பணி நிறை வடைந்ததால் 19 ஆயிரம் ஆசிரியர்களை நியமிக்க தமிழ்நாடு அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது’ என அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறினார்.
32 ஆயிரம் ஆசிரியர்கள்
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரில் நேற்று (12.9.2024) பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
தமிழ்நாட்டில் கல்வி திட்டம் சிறப்பாக உள்ளது என ஒன்றிய அரசு பாராட்டி உள்ளது. ஆனால் ஒன்றிய அரசு கல்விக்கான நிதியை ஒதுக்கீடு செய்யவில்லை. இதனால் 32 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்க முடியவில்லை. கல்விக்கான 60 சதவீதம் நிதியை ஒன்றிய அரசு தான் வழங்க வேண்டும்.
இந்த திட்டத்தை செயல்படுத் துவதில் கேரளா முதல் இடமும், தமிழ்நாடு 2ஆவது இடத்திலும் இருக்கும் நிலையில் ஒன்றிய அரசின் முடிவால் ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. தேசிய கல்விக் கொள்கையை தமிழ்நாட்டில் அமல்படுத்தினால்தான் நிதி வழங்கமுடியும் என ஒன்றிய அரசு கூறுவதை ஏற் றுக்கொள்ள முடியாது. தமிழ்நாட்டில் அண்ணா, கலைஞர் ஆகியோர் ஏற்கெனவே இருமொழிக் கொள்கையை கொண்டு சமச்சீர் கல்வி கொள்கையை ஏற்படுத்திவிட்டனர்.
கடும் நடவடிக்கை
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமெரிக்காவில் இருந்து வந்தவுடன் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முடிவெடுப்பார். ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான சான்றிதழ் சரிபார்க்கும் பணி முடிவடைந்தது. அதற்கான அறிவிப்பு வருகிற 2026-இல் வெளியிடப்படும். அதில் 19 ஆயிரம் பேரை பணியில் நியமிக்க இலக்கு நிர்ணயம் செய்து இருக்கிறோம்.
தமிழ்நாடு அரசு பள்ளி வளாகத்திற்குள் தேவை இல்லாதவர்கள் நுழைவதை தடுக்கும் வகையில் விதி முறைகள் வகுக்கப்பட்டு வருகிறது. பள்ளி வளாகத்தில் புகுந்து சேதப்படுத்துபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். கல்வியில் பின் தங்கியுள்ள மாவட்டங்களில் நீதி போதனை வகுப்புகள் நடத்தப்பட்டுள்ளதால் இதுவரை 1½லட்சம் மாணவர்கள் பயன் பெற்றுள்ளனர். மேலும் இத்திட்டம் விரிவுபடுத்தப்படும்.
-இவ்வாறு அவர் கூறினார்.