மதுரை, செப்.13 கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில், கடந்த 5 மாதங்களில் தமிழ்நாடு வணிக வரி வருவாய் அதிகரித்துள்ளதாக வணிக வரித் துறை அமைச்சா் பி.மூா்த்தி தெரிவித்தார்.
வணிகவரித் துறையின் இணை ஆணையர்களு டனான ஆலோசனைக்கூட்டம், அமைச்ர் பி.மூர்த்தி தலைமையில் சென்னையில் நேற்று (12.9.2024) நடைபெற்றது. கூட்டத்தில் அமைச்சர் பேசியதாவது:
கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் தொடங்கி ஆகஸ்ட் மாதம் வரையிலான 5 மாத காலத்தில் வணிகவரி மூலமாக ரூ.49,716 கோடி வசூலிக்கப்பட்டது. நிகழாண்டில் அதே 5 மாத காலகட்டத்தில் ரூ.55, 807 கோடி வசூலிக்கப்பட்டுள்ளது. அதாவது கடந்த நிதியாண்டுடன் ஒப்பிடுகையில், கூடுதலாக ரூ.6 ஆயிரத்து 91 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளது.
சரக்கு மற்றும் சேவை வரி வசூலை பொருத்தவரை, கடந்த ஆண்டு ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரையிலான கால கட்டத்தில் ரூ.26,767 கோடி வருவாய் ஈட்டப்பட்டது. நிகழாண்டில் இதே கால கட்டத்தில் ரூ.31 ஆயிரத்து,336 கோடி வருவாய் ஈட்டப்பட்டது. கடந்த ஆண்டை விட, வரி வருவாய் 17 சதவீதம் வளா்ச்சி அடைந்துள்ளது.
இந்தக் கூட்டத்தில், அதிகளவு வருவாய் ஈட்டித் தந்த கூடுதல் ஆணையா் எஸ்.ஞானக்குமார் மற்றும் அவரது குழுவினருக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டது. கூட்டத்தில், வணிகவரித் துறை ஆணையர் டி.ெஜகந்நாதன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.
மனிதநேயம் பூத்து மலர்கிறது
கடந்த 6 ஆண்டுகளில் இல்லாத அளவாக
தமிழ்நாட்டில் உடல் உறுப்பு கொடை எண்ணிக்கை அதிகரிப்பு!
சென்னை, செப். 13 கடந்த 6 ஆண்டுகளில் இல்லாத அளவாக தமிழ்நாட்டில் உடல் உறுப்பு கொடை வழங்குபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. உடல் உறுப்பு கொடை வழங்குபவர்களின் உடலுக்கு அரசு மரியாதை வழங்கப்படும் என்ற அறிவிப்பு வெளியான 11 மாதத்தில் 192 பேரின் உடல்களிலிருந்து 1086 உறுப்புகள் கொடையாகப் பெறப்பட்டுள்ளன.
தமிழ்நாட்டில் பலரும் உடல் உறுப்பு கொடை செய்து வருகின்றனர். இதனை மேலும் ஊக்குவிக்கும் விதமாக உடல் உறுப்பு கொடை செய்வோரின் உடலுக்கு அரசு மரியாதையை செலுத்தப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். இதைத்தொடர்ந்து மக்கள் மத்தியில் இதற்கான ஆர்வம் அதிகரித்தே வருகிறது. அதன்படி உடல் உறுப்பு கொடை செய்பவரின் உடலுக்கு, அரசு சார்பில் அமைச்சர்களோ, சட்டமன்ற உறுப்பினர்களோ சென்று மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தி வருகின்றனர்.
2023-ஆம் ஆண்டு 178 நபர்களும், 2022-ஆம் ஆண்டு 156 நபர்களும், 2021-ஆம் ஆண்டு 60 நபர்களும், 2020-ஆம் ஆண்டு 55 நபர்களும், 2019-ஆம் ஆண்டு 127 நபர்களும் உடல் உறுப்பு நன்கொடை செய்துள்ளனர்.