சென்னை, செப்.13- தமிழ்நாட்டு மாணவர்கள் இரு மொழி கொள்கை யைத்தான் விரும்புகிறார்கள் என்று அமைச்சர் முனைவர் க. பொன்முடி தெரிவித்துள்ளார்.
சென்னை லேடி வெலிங்டன் கல்லூரி வளாகத்தில் உள்ள தமிழ்நாடு மாநில உயர்கல்வி மன்றக் கூட்ட அரங்கத்தில், உயர்கல்வித்துறையில் 2021-2022ஆம் நிதியாண்டு முதல் 2024-2025ஆம் ஆண்டு வரையிலான மானியக்கோரிக்கை அறிவிப்புகளின் தற்போதைய நிலை குறித்த ஆய்வு கூட்டம் நேற்று (12.9.2024) நடைபெற்றது. உயர்கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், உயர்கல்வித்துறை செயலாளர் பிரதீப் இணை செயலாளர் ரவிச்சந்திரன், தொழில்நுட்ப கல்வி இயக்ககத்தின் ஆணையர் ஆபிரகாம், கல்லூரி கல்வி இயக்ககத்தின் இணை இயக்குநர் இராவணன் உள்பட பல்வேறு உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
இந்த கூட்டத்தில், உயர்கல்வித்துறை மானியக்கோரிக்கையில் அறிவிக்கப் பட்ட திட்டங்களின் தற்போதைய நிலை குறித்து அதிகாரிகளிடம் அமைச் சர் க.பொன்முடி கேட்டறிந்தார். மற்றும் கல்வியின் தரத்தை மேலும் உயர்த்துவதற்கான நடவடிக்கைளை மேற்கொள்ளவும், உயர்கல்வியில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்கவும் அறிவுறுத்தி உள்ளார்.
இதைத்தொடர்ந்து, அவர் செய்தி யாளர்களிடம் கூறியதாவது:- பிளஸ்-2 படிப்பை நிறைவு செய்து கல்லூரியில் சேராத மாணவர்களை உயர்கல்விக்கு கொண்டு வரும் நோக்கத் திலும், பிளஸ்-2 தேர்ச்சி பெறாத மாண வர்களை 10ஆம் வகுப்பு தரத்துடன் டிப்ளமோ மற்றும் அய்.டி.அய் படிப்புகளுக்கு கொண்டு வரவும் ‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் ‘உயர்வுக்கு படி’ முகாம் வாயிலாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதனால், அனைத்து கல்லூரிகளிலும் வருகிற 23ஆம் தேதி வரை மாணவர் சேர்க்கை நடத்த அறிவுறுத்தி உள்ளோம்.
அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் பொறியியல் கல்லூரிகளில் ஒரு லட்சத்து 31 ஆயிரத்து 706 மாணவர்கள் சேர்ந்துள்ளார்கள். இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. பொறியியல் படிப்பில் கடந்த ஆண்டை காட்டிலும் 15 ஆயிரம் இடங்கள் கூடுதலாக நிரம்பி உள்ளன.
இருமொழிக் கொள்கை
தமிழ்நாட்டில் 1967ஆம் ஆண்டில் இருந்து இருமொழிக் கொள்கைதான் நடைமுறையில் உள்ளது. சென்னை மாநில கல்லூரியில் ஹிந்தியை விருப்பப்பாடமாக 3 மாணவர்களும், மலையாள மொழியை 4 மாணவர்களும் படிக்கிறார்கள். உருது மொழியை விருப்பப்பாடமாக யாரும் தேர்வு செய்யவில்லை. இது, தேவையா? இதை எல்லாம் காணும்போது மாணவர்கள் இருமொழிக் கொள்கையைத்தான் விரும்புகிறார்கள் என்பது தெரிகிறது.
தமிழ்நாட்டில் இருமொழிக் கொள்கை தான் கட்டாயம். 3ஆவது மொழியை விருப்பப்பாடமாக மாண வர்கள் கற்கலாம். அதில் எங்களுக்கு வேறுபட்ட கருத்து கிடையாது.
தமிழ்நாடு மும்மொழி கொள்கையை ஏற்கவில்லை என்பதற்காக பள்ளிக் கல்வித்துறைக்கான நிதியை ஒன்றிய அரசு நிறுத்தி வைத்துள்ளது அரசிய லுக்கானது. தமிழ்நாடு கல்வியில் தலைசிறந்த மாநிலமாக திகழ்கிறது. எனவே, நிதியை நிறுத்தி வைக்காமல் தமிழ்நாட்டின் கல்வி வளர்ச்சிக்கு ஒன்றிய அரசு உதவ வேண்டும்.
-இவ்வாறு அவர் கூறினார்.