1921 முதல் 1946 வரை நீதிக்கட்சி ஆட்சி ஆட்சிக் கட்டிலில் இருந்தது
இந்நாளில்தான் எஸ்.முத்தையா முதலியாரால் முதன் முதலாக வகுப்புவாரி உரிமை ஆணை பிறப்பிக்கப்பட்ட நாள் இன்று. இதற்காக தந்தை பெரியார் குடிஅரசு இதழில் (11-11-1928) மந்திரி
எஸ்.முத்தையா முதலியார் வாழ்க, வாழ்கவே! என்று எழுதினார்.
வகுப்புவாரி உரிமை உத்தரவைக் கொண்டு வந்த முத்தையா முதலியார் வாழ்க்கை வரலாற்றை நீங்கள் ஒவ்வொருவரும் படிக்க வேண்டும். அதன் விளைவாக ஒவ்வொரு குழந்தைக்கும் முத்தையா என்று பெயரிடுங்கள்
நமது மந்திரி திரு. எஸ். முத்தய்யா முதலியார் அவர்கள் தமது ஆதிக்கத்தில் உள்ள முக்கிய இலாகாவில் வகுப்புவாரி பிரதிநிதித்துவ கொள்கையை நிலைநாட்டி விட்டார். அதாவது, பத்திரப்பதிவு இலாக்கா உத்தியோகத்திற்கு நபர்களை நியமிப்பதில் அடியில் கண்ட வகுப்பு வாரிப்படி தெரிந்தெடுத்து நியமிக்க வேண்டும் என்பதாக ஒரு விதி ஏற்படுத்தி, அதை கவர்னர் பிரபுவாலும், மற்ற மந்திரிகள் நிர்வாக சபை அங்கத்தினர்கள் முதலியவர்களாலும் சம்மதம் பெற்று, அமலுக்கு கொண்டு வர வேண்டியதான சட்டமாக்கி விட்டார். அதாவது, பத்திரப்பதிவு இலாகா உத்தியோகத்திற்கு நியமிக்க வேண்டிய ஸ்தானங்கள் 12 இருக்குமானால், அவைகளில்
பார்ப்பனரல்லாத இந்துக்கள் என்பவர்களிலிருந்து 5
பார்ப்பனர்களிலிருந்து 2
மகம்மதியர்களிலிருந்து 2
அய்ரோப்பிய ஆங்கிலோ இந்தியர்கள் அடங்கிய கிறிஸ்தவர்களிலிருந்து 2
தாழ்த்தப்பட்டவர்களிலிருந்து 1
ஆக, 12 நபர்களை வகுப்புவாரி முறையில் தெரிந்தெடுத்து நியமிக்க வேண்டும் என்கின்ற சட்டம் செய்திருக்கிறார்.
அந்த வகுப்புவாரி உரிமையிலேயே 12 இடங்கள் என்று சொன்னால் அந்த 12 இடங்களிலே பார்ப்பனர்களுக்கும் தனியே இடங்களைக் கொடுத்தார்கள். எனவே யாருக்கும் வாய்ப்புகள் மறுக்கப்படவில்லை.
இந்த திட்டத்தின் விகிதங்களில் 100-க்கு 3 வீதம் ஜனத்தொகை உள்ள பார்ப்பனருக்கு 100-க்கு 16 உத்தியோகம் வீதமும், 100-க்கு 20 வீதத்திற்கு மேல்பட்ட மகம்மதியர்களுக்கு 100-க்கு 16 வீதமும், 100-க்கு 20 வீதம் உள்ள தாழ்த்தப்பட்டவர்கள் என்கின்ற வகுப்பாருக்கு 100-க்கு 8 வீதமும் உத்தியோகங்கள் பங்கு பிரித்துக் கொடுத்திருப்பதானது மிகவும் அநியாயமானதென்றே சொல்லுவோம். ஒரு சமயம் உத்தியோகத்திற்கு ஏற்ற நபர்கள் குறைவான பங்கு கொடுக்கப்பட்டிருக்கும் வகுப்புகளில் கிடைக்கவில்லை என்று யாராவது சமாதானம் சொல்ல வருவார்களானால், அது அந்த வகுப்பார்களுக்கு உத்தியோகங்கள் கொடுப்பதில் அவர்களுக்கு செய்திருக்கும் கொடுமையை விட பல மடங்கு மேல்பட்ட கொடுமையாகும். என்னவெனில், உத்தியோகப் பங்கில் மண்ணைப் போட்டதல்லாமல் அந்த வகுப்புகளை உத்தியோகத்திற்கு லாயக்கில்லை என்று அவமானப் படுத்தியதாகும். யார் யாருக்கு எவ்வளவு பங்கு என்பதை தீர்மானித்துக் கொள்ளும் விஷயத்தில் சற்று கஷ்டமோ அதிருப்தியோ இருந்தாலும் சர்க்கார் உத்தியோகம் என்பவைகள் பொது சொத்தென்பதையும் அதில் எல்லோருக்கும் பங்குண்டு என்பதையும் ஒப்புக் கொண்டு பங்கு பிரித்துக் கொடுக்கவும், பங்கு பிரித்துக் கொள்ளவும் ஒரு ஆதாரம் ஏற்படுத்திக் கொள்ள இடம் கிடைத்ததே இது சமயம் நமக்கு ஒரு பெரும் வெற்றியாகும்.