ராயபுரம், செப்-13– சென்னை காசிமேடு சிங்காரவேலன் நகர் 1ஆவது தெருவைச் சேர்ந்தவர் பிரேம்குமார் (வயது 30), மீனவர். கடந்த 9.9.2024 அன்று அந்தப் பகுதியில் வழிபாட்டுக்கு வைத்திருந்த விநாயகர் சிலையை காசிமேடு கடலில் கரைப்பதற்காக சரக்கு வாகனத்தில் ஏற்றிச் சென்றனர். அந்த வாகனத்தில் மீனவர் பிரேம்குமாரும் சென்றார்.
ராயபுரத்தில் இருந்து காசிமேடு வழியாக சென்றபோது, எஸ்.ஓ. பேருந்து நிலையம் அருகே சரக்கு வாகனத்தின் ஓட்டுநர் திடீரென வண்டியை நிறுத்தியபோது நிலைதடுமாறிய பிரேம்குமார், சரக்கு வாகனத்தில் இருந்து தவறி கீழே விழுந்தார். இதில் தலையில் படுகாயம் அடைந்த அவரை மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி 11.9.2024 அன்று இரவு பிரேம்குமார் மூளைச்சாவு அடைந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். அவரது உடல் உறுப்புகளை கொடையாக வழங்குவதாக உறவினர்கள் தெரிவித்தனர். அதன்படி அவரது உடல் உறுப்புகள் கொடையாக பெறப்பட்டது. பிரேம்குமார் உடலுக்கு ராயபுரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அய்ட்ரீம் மூர்த்தி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்த சம்பவம் தொடர்பாக ராயபுரம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.