‘டேன்’ தொலைக்காட்சியில் “ஸ்பாட் லைட்” நிகழ்ச்சிக்காக தமிழர் தலைவர் ஆசிரியர் பேட்டி
யாழ்ப்பாணம், செப்.13 மீனவத் தொழில் என்பது உலகம் முழுவதும் இருக்கக்கூடியதாகும்! மீனவர்கள் பிரச்சினையில் ஒன்றிய அரசின் பங்களிப்பு நாங்கள் எதிர்பார்த்த அளவிற்கு இல்லை என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.
‘டேன்’ தொலைக்காட்சியில், ‘ஸ்பாட் லைட்’ : தமிழர் தலைவர் ஆசிரியர் பேட்டி
கடந்த 24.8.2024 அன்று யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மேனாள் தலைவர் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் அவர்களின் 97 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழாவில் பங்கேற்கச் சென்ற திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் ‘டேன்’ தொலைக்காட்சியில், ‘ஸ்பாட் லைட்’ நிகழ்ச்சிக்காகப் பேட்டியளித்தார்.
அப்பேட்டியின் நேற்றையத் தொடர்ச்சி வருமாறு:
இலங்கை – இந்தியா ஒப்பந்தம்!
நெறியாளர்: நீங்கள் குறிப்பிட்டதுபோல, மதங்களால் பிளவுபட்டு இருக்கின்றோம்; ஜாதிகளால் பிளவுபட்டு இருக்கின்றோம். திராவிடர் கழகத்தினுடைய கொள்கை அதையெல்லாம் இல்லாமல் செய்யவேண்டும் என்ற சிந்தனையின் அடிப்படையில் உங்களுடைய பதில் இருந்தது. ஆனால், நாங்கள் இங்கு இனமாகப் பிரிந்திருக்கின்றோம். இலங்கையைப் பொறுத்த வரையில் இனமாகப் பிரிக்கப்பட்டு இருக்கின்றோம்.
ஆங்கிலேயர்கள் உங்களுக்குச் சுதந்திரம் கொடுத்த அடுத்த சில ஆண்டுகளில் எங்களுக்குத் தானாக சுதந்திரம் கிடைத்தது. அதற்குப் பிறகு, தரப்படுத்தல் என்ற முறையில் நாங்கள் நெருக்கடிக்கு உட்படுத்தப்பட்டு இருந்தோம். நீங்கள் கதாநாயகராக இல்லை என்று ஓரிடத்தில் சொல்லியிருந்தீர்கள். ஆனால், நீங்கள் கதாநாயகராக இருந்த ஒரு காலம் இருக்கிறது. இலங்கை – இந்தியா ஒப்பந்தம் கொண்டு வரப்பட்ட காலம்.
அதை இன்று சரியாக நடைமுறைப்படுத்தவில்லை என்ற ஒரு விஷயத்தை இன்றும் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். அந்தக் காலத்தில் அதைக் கொண்டு வந்த நீங்கள், 35 ஆண்டுகளுக்கு மேலாக அதனை நடைமுறைப்படுத்துவதற்கான அழுத்தத்தைக் கொடுத்திருக்கலாமே?
நாங்கள் அரசியல்வாதிகள் அல்ல!
தமிழர் தலைவர்: அதைத்தான் நான் இப்பொழுது சொன்னேன். மறுபடியும் நாம் அந்தப் பிரச்சினையை ஆரம்பித்தால், நாம் எங்கேயோ போய்க் கொண்டிருப்போமே தவிர – இப்பொழுது அந்தப் பிரச்சினையை ஆதரித்து, அதற்கு யார் எதிராக இருந்தார்கள்? யார் ஆதரவாக இருந்தார்கள்? என்று பேசத் தொடங்கினால், நமக்குள்ளேயே நாம் ஓர் அய்க்கியப்படுத்துகின்ற அந்த உணர்வுக்கு முட்டுக்கட்டைப் போடுகின்றோம் என்று அர்த்தம்.
ஆகவேதான், அதை நாம் சொல்லி, இப்போது வருவதற்கு ஒன்றும் இல்லை. ஏனென்றால், அன்றைக்குப் பல காரணங்கள் அரசியலில் இருந்தன.
பல நேரங்களில், அரசியல்வாதிகள் சொல்வது வித்தியாசமாக இருக்கும்; அவர்களுடைய ஹிட்டன் அஜெண்டா (Hidden Agenda) என்று சொல்லக்கூடிய மறைத்து வைத்திருக்கின்ற திட்டம் வேறு விதமாக இருக்கும்.
நாங்கள் அரசியல்வாதிகள் அல்ல. அதனால்தான், இதனைத் தாராளமாகப் பேசுகின்றோம். மற்றவர்கள் அப்படியல்ல.
கதாநாயகர் என்று நான் சொன்னதை, அருள்கூர்ந்து நீங்கள் சரியாகப் புரிந்துகொள்ளவேண்டும் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.
இங்கே இருக்கின்ற தமிழர்களுடைய அய்க்கியம் – தமிழர்களுடைய ஒற்றுமை மிகவும் முக்கியம்!
இங்கே இருக்கின்றவர்களுடைய முக்கிய பங்க ளிப்பு வேண்டும். இங்கே இருக்கின்றவர்கள் என்று சொல்லும்பொழுது, நான் நபர்களைச் சொல்லவில்லை. இங்கே இருக்கின்ற தமிழர்களுடைய அய்க்கியம் – தமிழர்களுடைய ஒற்றுமை மிகவும் முக்கியம்.
ஹோமோஜெனஸ், ஹெட்ரோ ஜெனஸ் என்ற இரண்டு வார்த்தைகள் இருக்கின்றன.
சிறுபான்மை சமுதாயத்தினருக்கு வாழ்வுரிமை வேண்டும். ஜனநாயகத்தில், ஒரு குடியரசு நாட்டில் பெரும்பான்மையினர் ‘‘ஆளுகின்ற உரிமை எங்களுக்கு இருக்கின்றது” என்று சொன்னாலும்கூட, எல்லா மக்களும் குடிமக்கள். அந்த குடிமக்கள் பெரும்பான்மையா? சிறுபான்மையா? என்பதல்ல.
அதுமட்டுமல்ல, வேற்றுமையில் ஒற்றுமை என்று சொல்லக்கூடிய அளவிற்கு, மொழியால், மற்ற மற்ற பண்பால் அவர்கள் மாறுபட்டவர்களாக இருப்பார்கள். அவர்களையெல்லாம் ஒருங்கிணைத்து அணைத்துச் செல்லவேண்டும் என்ற உணர்வை அரசுக்கு ஏற்படுத்தவேண்டும்.
சிறுபான்மை ஹோமோஜெனஸ் இனம் இருக்கிறதே, அது ஒன்று சேரவேண்டும்.
முழு உறுதுணையாக – தூண்டுதலாகத்தான் எங்களுடைய பணி இருக்க முடியும்!
அப்படி ஒன்று சேரக்கூடிய உணர்வை, இவ்வ ளவு பெரிய கசப்பான அனுபவங்களுக்குப் பிறகும், பெற்றாகவேண்டும். அதற்கு நாங்கள் முழு உறு துணையாக இருப்போம். துணையாகத்தான் எங்களால் இருக்க முடியும்; தூண்டுதலாகத்தான் எங்களுடைய பணி இருக்க முடியுமே தவிர, நாங்களே முன்னால் நின்று இந்த நாட்டுப் பிரச்சினையைத் தீர்ப்போம் என்று சொல்வது நடைமுறைக்கு ஒவ்வாத ஒன்று; எதார்த்தத்திற்கு அப்பாற்பட்டது.
எல்லோரையும் பிரித்தாண்டு விட்டார்கள்,
எல்லா தலைவர்களையுமே!
நெறியாளர்: நீங்கள் குறிப்பிட்டதைப்போல, ஒற்றுமையாக, ஒன்றாகத் திரண்டு வரவேண்டும் என்பதைத்தான், இந்திய பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் வரும்பொழுதும், எங்களுடைய தலை வருக்குச் சொல்கிறார் அழுத்தந்திருத்தமாக. நீங்கள் ஒற்றுமையாக வாருங்கள், நாங்கள் இலங்கை அரசிடம் பேசுகிறோம் என்று.
ஆயுதப் போராட்டத்திற்கு முன்பு, அரசியல் ரீதியான போராட்டத்தை மேற்கொண்டபொழுது, நாங்கள் எல்லோரும் ஒற்றுமையாகத்தான் செயல்பட்டோம். அதற்குப் பின்பு, 30 ஆண்டுகால ஆயுதப் போராட்டம் – ஒற்றுமையாக சேர்ந்து, மக்கள் எல்லாம் ஆதரவு கொடுத்திருந்தோம்.
2009 ஆம் ஆண்டு யுத்தம் நிறுத்தப்பட்ட பிறகு, அந்தக் காலகட்டத்தில், அடுத்த அந்த ஒற்றுமை என்பது அங்கேதான் கேள்விக்குறியானது. எல்லோரையும் பிரித்தாண்டு விட்டார்கள், எல்லா தலைவர்களையுமே!
இதை எங்களுடைய மண்ணிலே, எப்படி சரிப்படுத்தலாம் என்று நீங்கள் நம்புகிறீர்கள்?
தமிழர் தலைவர்: என்னுடைய சிற்றறிவுக்கு ஏற்பட்ட ஒரு வகையில் சொல்கிறேன். இதை ஒரு பெரிய அறிவுரையாக நான் சொல்கிறேன் என்று யாரும் எடுத்துக்கொள்ளக் கூடாது.
ஏனென்றால், உங்கள் மூலமாக, இந்த ஊடகத்தின் மூலமாக உலகெங்கும் வாழக்கூடிய ஈழத் தமிழர்கள் பார்க்கிறார்கள். அவர்கள் எல்லோருக்கும் சேர்த்துச் சொல்கிறேன்.
நம்முடைய மண், நம்முடைய மக்கள் – இந்த மக்கள் இதுவரையில் அனுபவித்த கொடுமைகளும், சிந்திய ரத்தமும், இழந்த உயிர்களும் மிக அதிகமானது. அந்த உணர்வை நினைத்து, ‘இன்றைக்கு நாம் புலம்பெயர்ந்துவிட்டோம், வசதியாக இருக்கிறோம் – நம்முடைய மண்ணை எப்பொழுதும் போய் பார்த்து விட்டு வரலாம்’ என்று இருக்கக் கூடாது.
வரலாற்றில், கருப்புப் பக்கங்கள்
ஒவ்வொரு நாட்டு வரலாற்றிலும் உண்டு!
முழுக்க முழுக்க நடந்தவற்றைப்பற்றி ஆராய்ந்து, கிண்டி, கிளறி விவாதம் செய்து கொண்டிருப்பதைவிட, அவையெல்லாம் கெட்ட கனவுகளாக, விரும்பத்தகாத நிகழ்வுகளாக நடந்துவிட்டன – வரலாற்றில், கருப்புப் பக்கங்கள் ஒவ்வொரு நாட்டு வரலாற்றிலும் உண்டு.
அப்படிப்பட்டவற்றை மறந்துவிட்டு, இப்பொழுது, இனியாவது இளைஞர்கள், முன்வரு கிறவர்கள், ஒத்தக் கருத்துள்ளவர்கள் ஒன்றிணைந்து வரவேண்டும். ஒத்தக் கருத்துள்ளவர்களை ஒன்று சேர்க்கவேண்டும். அந்த உணர்வைத்தான் நாங்கள் முன்வைக்கிறோம்.
ஒன்று சேர்ப்பது எப்படி முடியும் என்பது ஒரு கேள்வி. ஏனென்றால், ஒன்று சேர்ப்பது என்பது ஒரு பொதுவான தத்துவம். அதைச் சொல்வது மிகவும் சுலபம். ஆனால், அதை நடைமுறையில் கொண்டு வருவது என்பது அவ்வளவு எளிதல்ல.
தந்தை பெரியாருடைய தொண்டன் நான். அய்யா அவர்கள் ஒரு முழுப் பகுத்தறிவுவாதி – சுதந்திரச் சிந்தனையாளர் அவர். அவருக்குச் சரியென்றுபட்டதை எடுத்துச் சொல்வார். நீங்கள் எடுத்துக் கொள்ளலாம்; எடுத்துக் கொள்ளாமல் போகலாம் என்று சொல்லக்கூடிய தலைவர் அவர்.
அதேபோன்று, ‘‘என்னுடைய கருத்தை நீங்கள் நம்பவேண்டாம்; சிந்தித்து, ஏற்க முடியாவிட்டால், தள்ளி விடுங்கள்” என்று முழு சுதந்திரத்தை மற்றவர்களுக்கு அளிக்கின்ற ஒரு தலைவர் தந்தை பெரியார்.
எது நம்மை இணைக்கிறதோ,
அதை அகலப்படுத்தவேண்டும்!
அவர் ஒரு கருத்தைச் சொல்வார், ஒத்துப்போவதற்கு என்ன தத்துவம் என்றால், நமக்கு ஒரு பொதுக் குறிக்கோள் இருக்கிறது – அந்தப் பொதுக் குறிக்கோளை வைத்துப் பார்க்கின்றபொழுது, ‘‘எது நம்மை இணைக்கிறதோ, அதை அகலப்படுத்தவேண்டும்; எது நம்மைப் பிரிக்கிறதோ, அதை புதைக்குழிக்குக் கொண்டு போகவேண்டும்; அல்லது குறைக்கவேண்டும்.” இப்படிப்பட்ட ஒரு விதியைப் பின்பற்றினால், மிகச் சுலபமாக செய்ய முடியும்.
நாம் இங்கே மூன்று பேர் அமர்ந்து விவாதம் செய்யும்பொழுது, நாம் ஒரு பொது முடிவுக்கு வர வேண்டும் என்று வரும்பொழுது, என்னுடைய கருத்தி லேயே நான் நிற்கவேண்டும் என்று நான் பிடிவாதமாக இருந்தால் அது நடக்காது. இல்லை இல்லை, அவர் சொல்வது தவறு என்று சொன்னாலும் முடியாது. அதற்குப் பதிலாக, ஒருவருக்கொருவர் தன்முனைப்பு இல்லாமல், தங்களை முன்னிலைப்படுத்தாமல், தங்களுடைய லட்சியத்தை முன்னிலைப்படுத்தி, தங்களைப் பின்னாலே கொண்டு போய், விட்டுக் கொடுத்து வாழ்வோம் என்று வந்தால், ‘‘விட்டுக் கொடுப்பவர்கள் ஒருபோதும் கெட்டுப் போகமாட்டார்கள்; கெட்டுப் போகின்றவர்கள் ஒருபோதும் விட்டுக் கொடுக்கமாட்டார்கள்” இதுதான் அந்தத் தத்துவம்.
ரத்தக் கறைகளை வெறும் கண்ணீர்த் துளிகளால், கலைத்துவிட முடியாது!
இந்தத் தத்துவத்தை அடிப்படையாகக் கொண்டு, நடந்தவற்றை விட்டுவிடவேண்டும். பழைய சங்கதிகளையே மீண்டும் மீண்டும் பேசி, நீங்கள் அப்படி நடந்துகொண்டீர்கள், நாங்கள் இப்படி நடந்துகொண்டோம் என்றெல்லாம் பேசாமல், நடந்தவை விரும்பத்தகாவை, வேதனைக்குரியவை, நம்முடைய வரலாற்றில் மிகப்பெரிய ரத்தக் கறைகள்.
அந்த ரத்தக் கறைகளை வெறும் கண்ணீர்த் துளிகளால், கண்ணீர் சிந்துவதால், கலைத்துவிட முடியாது.
உழைப்பைச் சிந்தவேண்டும்; வியர்வை சிந்தவேண்டும், ரத்தம் அல்ல; அந்த வியர்வை எதிலிருந்து வரவேண்டும் என்றால், ஒத்தக் கருத்துள்ளவர்களை ஒருங்கிணைத்த சூழல் இருக்கவேண்டும்.
‘‘அவருடைய கருத்தா? நான் விட்டுக் கொடுத்து பின்னால் நிற்கிறேன். எங்களுக்கு வேண்டியது பொதுநலன்; எங்களுக்கு வேண்டியது எங்களுடைய வாழ்வுரிமை. தனிப்பட்ட தலைமைத்துவம் அல்ல.
கொள்கை முக்கியம், இலக்கு முக்கியம், தலை மைத்துவம் முக்கியமல்ல. நாம் ஒரு கூட்டுச் சிந்தனை யாக ஆரம்பித்தாலும்கூட, அது கூட்டுச் சிந்தனையாக வளரவேண்டுமே தவிர, அது பூட்டுச் சிந்தனையாக ஆகக்கூடாது” என்னும் உணர்வைப் பெறவேண்டும்.
ஒரு கசப்புணர்வை ஏற்படுத்துகின்றது
மீனவர் விவகாரம்!
நெறியாளர்: ஈழத் தமிழர்களும் – தமிழ்நாட்டுத் தமிழர்களும் தொப்புள்கொடி உறவுகள். ஆனால், நமக்கிடையே இடையிடையே ஒரு கசப்புணர்வை ஏற்படுத்துகின்றது மீனவர் விவகாரம்.
இந்த மீனவர் விவகாரத்தில், தமிழ்நாட்டினுடைய ஒரு மூத்த பெரும் தலைவர் என்ற அடிப்படையில், இந்தப் பிரச்சினைக்கு எப்படி ஒரு தீர்வை முன்வைக்கலாம் என்று நீங்கள் கருதுகிறீர்கள்.
மீனவர்கள் பிரச்சினையில்
ஒன்றிய அரசின் பங்களிப்பு
நாங்கள் எதிர்பார்த்த அளவிற்கு இல்லை!
தமிழர் தலைவர்: மறுபடியும் சிக்கல் என்னவென்றால் இதில், ஒன்றிய அரசின் பங்களிப்பு நாங்கள் எதிர்பார்த்த அளவிற்கு இல்லை என்பது தமிழ்நாட்டு மக்கள் சார்பாக, தமிழ்நாட்டு மீனவர்களுக்கு இருக்கின்ற மிகப்பெரிய குறைபாடாகும்.
அதேநேரத்தில், இதற்கு ஒரு தீர்வு கொண்டு வரவேண்டும். ஏனென்றால், இந்தப் பிரச்சினையின் தன்மையே மிகவும் வித்தியாசமானதாகும்.
எல்லை தாண்டி மீன் பிடித்தார்கள் என்பதற்காக அவர்கள் கைது செய்யப்படுகிறார்கள். தமிழ்நாட்டு மீனவர்களில் இலங்கைச் சிறையைப் பார்க்காத மீனவர்களே இருக்கமாட்டார்கள்.
தமிழ்நாட்டு மீனவர்களைக் கைது செய்வது – முதலமைச்சர் ஒன்றிய அரசுக்குக் கடிதம் எழுதுவது – ஒன்றிய அரசு கேட்டுக்கொண்டவுடன், மீனவர்களை சிறைச்சாலையிலிருந்து வெளியே விடுவது என்று இந்த வட்டம் ஓடிக்கொண்டே இருக்கிறது.
இதற்கெல்லாம் தீர்வை இந்திய அரசும், இலங்கை அரசும்தான் மேற்கொள்ளவேண்டும். இலங்கை அரசுக்கு, இந்திய அரசு உதவி செய்கிறது.
மீனவத் தொழில் என்பது
உலகம் முழுவதும் இருக்கக்கூடியதாகும்!
இரண்டு நாட்டில் உள்ள மீனவ சமுதாயத் தலைவர்களிடையே பகை வரக்கூடாது. மீனவத் தொழில் என்பது உலகம் முழுவதும் இருக்கக்கூடி யதாகும். அந்தத் தொழிலில் யாரையும் யாரும் பகைவர்களாக நினைக்கக் கூடாது.
இந்த நாட்டு மீனவர்கள், கடலில் மீன் பிடித்துக் கொண்டிருக்கும்பொழுது, வேகமாகக் காற்றடித்து ஒதுங்கினால், அவர்களைக் கைது செய்தாலும், உடனே அவர்களை சிறையிலேயே வைக்கவேண்டும் என்று விரும்பக் கூடாது.
அதேபோன்று பாகிஸ்தான் நாட்டு மீனவர்க ளைக் கைது செய்தாலும், உடனே வழக்குப் போட்டு, அவர்களை விடுவித்துவிடுகிறார்கள்.
மனிதநேயத்தோடு பார்க்கவேண்டிய பிரச்சினையாகும் இது.
நிலத்திற்கு எல்லையாக கம்பியைப் போடலாம்; நீருக்கு? கடல் எல்லையில் காற்றடித்தால் தள்ளிக்கொண்டு போகும் என்பது இயல்புதான்.
எங்கள் நாட்டுப் பிரச்சினை – உள்நாட்டுப் பிரச்சினை என்பதால், அதனை விரிவாக விளக்கக்கூடிய வாய்ப்பில்லை.
அந்த நாட்டு மீனவர்களுக்குப் பிரச்சினை ஏற்பட்டால், அங்கே இருக்கின்ற கடற்படை போன்றவை இருக்கின்றன. அந்த எண்ணத்தில் தான் நாங்கள் போராடிக் கொண்டி ருக்கின்றோம்.
இன்னொரு நாட்டில் வந்து, எங்கள் நாட்டு அரசை நான் விமர்சனம் செய்வதற்குத் தயாராக இல்லை.
மீனவ சமுதாயத் தலைவர்களையும் அழைத்து
ஒரு தெளிவான முடிவை எடுக்கவேண்டும்!
அதேநேரத்தில், மீனவர்கள் பிரச்சினையில் மனம் திறந்து உண்மையிலேயே தீர்வு காணவேண்டும் என்று நினைத்தால், இரண்டு சாராரையும் அழைத்து, இரண்டு அரசுகளையும், அதேபோன்ற மீனவ சமுதாயத் தலைவர்களையும் அழைத்து ஒரு தெளிவான முடிவை எடுக்கவேண்டும்.
ஏனென்றால், மற்றவற்றிற்காக உதவி செய்கிறோம். இப்பொழுது கூட பொருளாதாரத் துறையில், இங்கே சிக்கல் ஏற்பட்டபொழுது, இந்திய அரசு உதவி செய்தது.
எங்களுடைய முதலமைச்சர் அவர்கள்கூட கப்பல் நிறைய நிவாரணப் பொருள்களை அனுப்பினார்.
ஆகவே, இதற்குத் தீர்வு என்பது இருக்கிறதே, அடிப்படையிலே வெறும் சட்டத்தினால் மட்டும் இல்லை; சமூக மாற்றத்தினால், சிந்தனையினால், ஒத்துழைப்பினால், ஒருங்கிணைப்பினால்தான் வர வேண்டும்.
(தொடரும்)