ஈழத் தமிழர்கள் கொஞ்சம் அயர்ந்தால், சோர்வடைந்தால், அந்தச் சோர்வை நீக்கி, வேகமாகச் செல்லவேண்டும் என்கின்ற
ஒருங்கிணைப்பு செய்யக்கூடிய பணியை திராவிடர் கழகம் செய்கின்றது; காரணம், திராவிடர் கழகம் ஓர் அரசியல் கட்சியல்ல; இது ஓர் இயக்கம்!
யாழ்ப்பாணம், செப்.12 எங்கள் நாட்டுக்குள் இருக்கின்ற பிரச்சினைகளுக்காக, எங்கள் நாட்டு அரசுகளோடு போராடவேண்டிய நேரத்தில்கூட, ஈழத் தமிழர் வாழ்வுரிமை பாதிப்பு என்று வந்தால், அதற்காகப் போராடுவதற்கு, எங்கள் நாட்டிற்குள்ளேயே தேவைப்படுகின்ற செயல்களில் ஈடுபடுவதற்கு நாங்கள் என்றைக்கும் தயாராக இருக்கின்றவர்கள்.ஈழத் தமிழர்கள் கொஞ்சம் அயர்ந்தால், சோர்வடைந்தால், அந்தச் சோர்வை நீக்கி, வேகமாகச் செல்லவேண்டும் என்கின்ற ஒருங்கிணைப்பு செய்யக்கூடிய பணியை திராவிடர் கழகம் செய்கின்றது. காரணம், திராவிடர் கழகம் ஓர் அரசியல் கட்சியல்ல; இது ஓர் இயக்கம் என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.
‘டேன்’ தொலைக்காட்சியில், ‘ஸ்பாட் லைட்’ :
தமிழர் தலைவர் ஆசிரியர் பேட்டி
கடந்த 24.8.2024 அன்று யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மேனாள் தலைவர் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் அவர்களின் 97 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழாவில் பங்கேற்கச் சென்ற திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் ‘டேன்’ தொலைக்காட்சியில், ‘ஸ்பாட் லைட்’ நிகழ்ச்சிக்காகப் பேட்டியளித்தார்.
அப்பேட்டியின் நேற்றையத் தொடர்ச்சி வருமாறு:
நெறியாளர்: தலைவர் அமிர்தலிங்கம் அவர்களுக்குப் பிறகு, ஈழத்தில், தமிழ் அரசியல் தலைவர்கள் யார் யாரோடு உங்களுக்கு ஈடுபாடு இப்பொழுது இருக்கிறது?
ஈழத் தமிழர்கள் வாழ்வுரிமை மாநாடு
தமிழர் தலைவர்: அரசியல் தலைவர்கள் என்று எடுத்துக்கொண்டால், பெரும்பாலும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், தலைவராக இருந்த அய்யா சிவ சிதம்பரம் அவர்கள், அதற்குப் பிறகு நாடாளுமன்ற உறுப்பினர்கள், பல தலைவர்கள் தமிழ்நாட்டிற்கு வரும்பொழுது எங்களை சந்திப்பார்கள்.
ஈழத் தமிழர்கள் வாழ்வுரிமை மாநாட்டினை நடத்துகின்ற நேரத்தில், கலைஞர் அவர்களோடு நாங்கள் எல்லாம் கலந்து பேசும்பொழுது, யார் யாரை அந்த மாநாட்டில் பங்கேற்க அழைப்பது என்று முடிவெடுத்து, அந்த மாநாட்டினை நடத்தினோம்.
ஆகவே, இங்கே இருக்க முடியாத நிலையில், சென்னையிலேயே இருக்கக்கூடிய சூழல் இருந்தது. அப்பொழுதெல்லாம் கூட அவர்களோடு தொடர்பில் இருந்தோம்.
நாடாளுமன்ற உறுப்பினர்கள், மற்றவர்கள் எல்லோரும் வந்து சந்தித்திருக்கிறார்கள்; அதற்கென ஒரு நீண்ட பட்டியலே உண்டு.
ஈழத் தமிழர்களுக்கு,
நீங்கள் சொல்ல விரும்பும் செய்தி என்ன?
நெறியாளர்: 45 ஆண்டுகளுக்குப் பிறகு யாழ்ப்பா ணத்தில் கால் வைத்திருக்கிறீர்கள். அன்றிருந்த நிலைமைக்கும், இன்று இருக்கும் நிலைமைக்கும் நிறைய வேறுபாடுகள் இருக்கின்றன என்றும் ஏற்றுக்கொண்டிருக்கிறீர்கள். இந்த நேரத்தில், இங்குள்ள ஈழத் தமிழர்களுக்கு, தமிழக உறவுகளின் சார்பில், நீங்கள் சொல்ல விரும்பும் செய்தி என்ன?
தமிழர் தலைவர்: தமிழ்நாடு என்றைக்கும் தொப்புள் கொடி உறவு என்பதை மறக்காத ஒன்று.
தமிழ்நாட்டில், அங்கே இருக்கின்ற அரசியல் கார ணமாக, சில நேரங்களில் ஒருவரை ஒருவர் விமர்சித்துக் கொண்டிருப்பார்கள். சில காலத்திற்கு முன்பாக, இப்பொழுது அல்ல; அரசியலுக்கு அதை ஆயுதமாகப் பயன்படுத்தி இருக்கலாம். அதை நான் மறுக்கவில்லை.
ஈழத் தமிழர்களுடைய வாழ்வுரிமை பாதுகாக்கப்படவேண்டும்!
ஆனால், எந்தக் கட்சியினராக இருந்தாலும், தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில், அது பெரியார் மண் என்று சொல்லக்கூடிய வகையில், திராவிடம் என்கிற உணர்வு இருக்கின்ற காரணத்தினால், நிச்சய மாக ஈழத் தமிழர்களுடைய வாழ்வுரிமை என்பது பாதுகாக்கப்படவேண்டும்; அதற்காக நம்மால் என்ன செய்ய முடியுமோ, அதை நாம் செய்யத் தவறக்கூடாது. அதற்கான சூழல்கள் இருக்கவேண்டும்.
இன்னமும் ஈழத் தமிழர்கள் வேறு; தமிழ்நாட்டுத் தமிழர்கள் வேறு என்று பிரிக்க முடியாது; பிரிக்கக் கூடாது. தொப்புள் கொடி உறவுகள் என்பதற்காகத்தான், அவர்களைச் சேர்க்கின்ற உணர்வுகள் இருக்கின்றன. எங்களுக்குள் அரசியல் மாறுபடலாம்; ஆனால், இன உணர்வுகளில் பெரும்பாலும் மாறுபாடுகள் கிடையாது.
இதில், யாருக்கு? எப்பொழுது? என்பதில் வேண்டு மானால் போட்டி இருந்திருக்கலாமே தவிர, இன உணர்வு இன்னமும் தொடருகிறது.
அதில் சில நேரங்களில் அரசியல் வியூகங்கள் வரும். அந்த அரசியல் வியூகங்கள் பல நேரங்களில், இவர் எப்படி இருக்கிறார் என்று யோசிக்கக் கூடும்.
மொழி நம்மை இணைக்கிறது;
பண்பாடு நம்மை இணைக்கிறது!
தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில், இந்த உணர்வு என்பதற்குக் காரணம் என்னவென்றால், தொப்புள் கொடி உறவு. பண்பாட்டு உறவு இருக்கிறதே, மொழி நம்மை இணைக்கிறது; பண்பாடு நம்மை இணைக்கிறது.
அந்தப் பண்பாடோடு நயத்தக்க நாகரிகத்தோடு பழகக்கூடிய அளவிற்கு, காலங்காலமாக அந்த உணர்வுகள் நமக்கு இருக்கின்றன.
எனவேதான், இன்றைக்கும் அகதிகளாக வந்த வர்களைக்கூட, அவர்கள் புலம்பெயர்ந்து வந்திருக்கி றார்கள் – அவர்கள் குடியுரிமை பெற்றவர்களாக ஆக வேண்டும். அவர்கள் தனித்தன்மையாக இருக்கக்கூடாது. இன்றைக்குத் தமிழ்நாட்டில் ‘திராவிட மாடல்’ ஆட்சி நடைபெறுகிறது. ஆட்சி செய்கின்ற கட்சிகள் மாறும்; அதுகூட திராவிட எல்லைக்குள்தான் மாறி மாறிவரும்.
ஏதிலிகள் தங்கள் நாடுகளுக்குப் போக முடிய வில்லையா, அவர்களுக்கு வீடு முதற்கொண்டு கட்டிக்கொடுக்கவேண்டும்; அவர்களுக்கும், மற்ற வர்களுக்கும் எந்த வேறுபாடுகளும் இருக்க முடியாது.
எப்பொழுது அவர்கள் விரும்புகிறார்களோ, அப்பொழுது அவர்கள் தாராளமாக செல்லலாம். அவர்கள் சுதந்திரமாக இருக்கவேண்டும் என்று (சொந்த நாட்டுக்கு) போனால், அந்த உரிமைகள் அவர்களுக்கு அங்கே இருக்கவேண்டும் என்று அந்த வாழ்வுரிமையில் எந்த மாறுபாடும் இன்றைக்குக் கிடையாது.
அரசியல் உங்களுக்குத் தெரியும்; அணுகுமுறையில், அவரவர்கள் யார் யார் போட்டி போட்டார்கள் என்பது வேண்டுமானால், அரசியலில் வாக்கு வங்கிக்குக்கூட அது பயன்படுமா? என்று அரசியல்வாதிகள் பார்ப்பார்கள். அது எல்லா நாட்டிலும் இயல்புதான்.
ராமன் ஆட்சியா? ராவணன் ஆட்சியா? என்று பார்த்து, அந்த ஆட்சியை ஆதரிக்கக் கூடியவர்கள் நாங்கள்!
நல்ல வாய்ப்பாக, நாங்கள் அரசியலுக்கு அப்பாற்பட்டவர்கள். அதனால், ராமன் ஆண்டால் என்ன? ராவணன் ஆண்டால் என்ன? என்று பழமொழி சொல்வார்களே, அதுபோன்று நாங்கள் சும்மா இருக்கமாட்டோம். ராமன் ஆட்சியா? ராவணன் ஆட்சியா? என்று பார்த்து, அந்த ஆட்சியை நாங்கள் ஆதரிக்கக் கூடியவர்கள்.
இப்படிப்பட்ட சூழ்நிலையில், நம்முடைய ஈழத் தமிழர்களுக்கு நம்பிக்கையூட்டக்கூடிய ஒரு செய்தி என்னவென்றால், எவ்வளவுதான் எங்களுக்குள் வேறுபாடுகள் இருந்தாலும், அவர்களுடைய வாழ்வுரிமைக்காக, தொப்புள்கொடி உறவோடு நம்முடைய சகோதரர்கள் இருக்கிறார்கள்; சில கல் தொலைவில்தான் இருக்கிறார்கள்.
மொழியால், இன உணர்வால் நாம் ஒன்றுபட்ட
ஒரு குடும்பத்தைச் சார்ந்தவர்கள்!
நாட்டால் வேறுபட்டிருந்தாலும், மொழியால், இன உணர்வால் நாம் ஒன்றுபட்ட ஒரு குடும்பத்தைச் சார்ந்த வர்கள். ஒரு பேரியக்கம் – பெரிய குடும்பம் என்ற உணர்வுகள் இருக்கின்றன.
ஈழ மக்கள், உறவுகளுடைய விடுதலைக்கான செயற்பாடு திராவிடர் கழகம் சார்பிலே எவ்வாறு இருக்கிறது?
நெறியாளர்: நீங்கள் குறிப்பிட்டதுபோல, தொப்புள் கொடி உறவாக, ஈழத் தமிழர்களுடைய வாழ்வு ரிமை தொடர்பாக தொடர்ச்சியாக உங்களுடைய உறவுகள் அங்கே இருப்பதாகக் குறிப்பிட்டீர்கள். எங்களுடைய விடுதலைப் போராட்டக் காலத்தை எடுத்துக்கொள்ளும்பொழுது, எம்.ஜி.ஆர். அவர்கள் பக்கபலமாக இருந்ததாக நாங்கள் படித்து அறிந்து கொண்டோம். அதற்குப் பிறகு இப்பொழுது வந்து பேசுகிறவர்களில் திருமாவளவன், வைகோ, சீமான் போன்றவர்கள் தொடர்ச்சியாகக் குரல் கொடுக்கிறார்கள். விடுதலைப் புலிகளுடைய தலைவர் பிரபாகரனை முதன்மையாக அவர்கள் பேசுகிறார்கள். ஆனால், 2009 ஆம் ஆண்டு யுத்தம் நிறைவடைந்ததற்குப் பிறகு, அந்த செயற்பாடு என்பது, எங்களுடைய ஈழ மக்கள், உங்களுடைய தொப்புள் கொடி உறவுகளுடைய விடுதலைக்கான செயற்பாடு என்பது திராவிடர் கழகம் சார்பிலே எவ்வாறு இருக்கிறது?
தமிழர் தலைவர்: திராவிடர் கழகத்திற்குப் பல அஜெண்டாக்கள் என்று சொல்லக்கூடிய வேலைப் பட்டியல் இருக்கிறது.
எப்பொழுதெல்லாம் அவர்களுக்குப்
பாதிப்பு ஏற்படுகிறதோ….
திராவிடர் கழகம் வெறும் அரசியலுக்காக மட்டுமல்ல; அது சமூகப் பணிகளைச் செய்யக்கூடியது. எங்களுக்கு சமூகநீதிப் போராட்டம்தான் முதன்மையானது. எங்கள் நாட்டிலே நாங்கள் நடத்தவேண்டிய போராட்டங்கள், எங்கள் கொள்கைகளுக்காக நடத்தவேண்டிய போராட்டங்கள் இருக்கும்பொழுது, இந்தப் பிரச்சி னையில், எப்பொழுதெல்லாம் அவர்களுக்குப் பாதிப்பு ஏற்படுகிறதோ, அப்பொழுதெல்லாம் முன்னால் நின்று என்ன செய்ய முடியுமோ அதை செய்யவேண்டும் என்பதிலும், அதில் ஒத்தக் கருத்துள்ளவர்கள் யார் யாரை இணைக்க முடியுமோ, அப்படி இணைக்கின்ற பணியையும் திராவிடர் கழகம் செய்யும்.
திராவிடர் கழக மேடையில்தான், எல்லா அரசியல் கட்சிக்காரர்களும் ஒன்றாக அமரக்கூடிய வாய்ப்பு!
காரணம், திராவிடர் கழக மேடையில்தான், எல்லா அரசியல் கட்சிக்காரர்களும் ஒன்றாக அமரக்கூடிய வாய்ப்பு. தனியே ஓர் அரசியல் கட்சியினர் அழைத்தால், அதற்கு யார் தலைமை தாங்குவது என்ற கேள்விக்குறி!
ஆனால், திராவிடர் கழகத்தைப் பொறுத்தவரையில், தந்தை பெரியார் அவர்களை அதனால்தான் தந்தை செல்வா அவர்கள் முதலில் போய்ப் பார்த்தார்.
அண்ணா அவர்கள் காலமாக இருந்தாலும், கலைஞர் அவர்களுடைய காலமாக இருந்தாலும், எல்லா காலகட்டங்களிலும் இந்த உறவுகள் என்பது நிலைத்து வரவேண்டும் என்பதுதான்.
எங்கள் நாட்டுக்குள் இருக்கின்ற பிரச்சினைகளுக்காக, எங்கள் நாட்டு அரசுகளோடு போராடவேண்டிய நேரத்தில்கூட, ஈழத் தமிழர் வாழ்வுரிமை பாதிப்பு என்று வந்தால், அதற்காகப் போராடுவதற்கு, எங்கள் நாட்டிற்குள்ளேயே தேவைப்படுகின்ற செயல்களில் ஈடுபடுவதற்கு நாங்கள் என்றைக்கும் தயாராக இருக்கின்றவர்கள்.
ஒருங்கிணைப்பு செய்யக்கூடிய பணியை
திராவிடர் கழகம் செய்கின்றது!
அவர்கள் கொஞ்சம் அயர்ந்தால், சோர்வடைந்தால், அந்தச் சோர்வை நீக்கி, வேகமாகச் செல்லவேண்டும் என்கின்ற ஒருங்கிணைப்பு செய்யக்கூடிய பணியை திராவிடர் கழகம் செய்கின்றது.
காரணம், திராவிடர் கழகம் ஓர் அரசியல் கட்சியல்ல; இது ஓர் இயக்கம்.
கட்சி என்பது வேறு; இயக்கம் என்பது வேறு.
இயக்கம் எப்பொழுதும் வரும். எங்களைப் பொறுத்த வரையில், தந்தை பெரியார் ஒன்றைச் சொல்லுவார், ‘‘நான் எப்பொழுதும் கட்சிக்காரனாக இருந்ததில்லை; கொள்கைக்காரனாக இருந்திருக்கின்றேன்” என்று சொல்வார்.
ஒரு மாநிலம் மட்டுமே செய்யக்கூடிய விஷயம் அல்ல; ஒன்றிய அரசு அதனைச் செய்யவேண்டும்!
இது மிக முக்கியமான அறிவுரையாகும். ஆகவே, கட்சிக்காரர்களாக இருந்தால், வெவ்வேறு கோணங்கள், பார்வைகள் இருக்கும். ஆனால், நாங்கள் கொள்கைக்காரர்களாக இருக்கின்ற காரணத்தினால், எங்களுக்கு எந்தக் கொள்கை முக்கியமோ அந்தக் கொள்கை, அந்த வாழ்வுரிமை, அதற்குத் தொய்வு ஏற்படும்பொழுது, போராடுவோம். இந்தியா ஒரு பரந்த நாடு. இது ஒரு மாநிலம் மட்டுமே செய்யக்கூடிய விஷயம் அல்ல; ஒன்றிய அரசு அதனைச் செய்ய வேண்டும் என்பதற்காக ஒன்றிய அரசை, உரிமை யோடும், உறவோடும் கேட்டு – ‘‘உறவுக்குக் கைகொடுப்போம்; உரிமைக்குக் குரல் கொடுப்போம்” என்று சொல்லக்கூடிய வகையில், அதனை சிறப்பாக திராவிடர் கழகம் செய்கிறது.
எங்கள் மக்கள் இன்றுவரை உங்களைத்தான்
நம்பி இருக்கிறார்கள்?
நெறியாளர்: உங்கள் இயக்கத்தினுடைய செயற்பாடுகள், அதனுடைய விஷயம் என்னவென்று சொன்னதனால், இந்தக் கேள்வியை உங்களிடம் உரிமையாக நான் கேட்கிறேன் என்று நம்புகிறேன்.
குறிப்பாக எங்களுடைய மக்கள், அதாவது ஈழத் தமிழ் மக்கள் – அதிகமாக நம்புவது – எங்களுடைய அருகில் இருக்கின்ற தமிழ்நாட்டு மக்களைத்தான். எங்களுடைய தொப்புள்கொடி உறவைத்தான் நம்புகிறார்கள். இலங்கை – இந்தியா ஒப்பந்தத்தில் இருந்து, இன்றுவரை ஏதாவது ஒரு விஷயத்தில், எங்களுடைய உறவுகள் எங்களுக்கான தீர்வை பெற்றுத் தருவார்கள் என்று பல வழிகளிலும் அவர்கள் நம்பிக் கொண்டிருக்கின்றார்கள்.
ஆனால், இந்திய அரசாக இருக்கலாம்; இல்லா விட்டால், தமிழ்நாட்டில் இருக்கின்ற அரசியல் செயற்பாட்டாளர்களாக இருக்கலாம்; அல்லது உங்களைப் போன்ற இயக்கங்களுடைய செயற்பாட்டாளராக இருக்கலாம். இன்றுவரை எங்களுடைய மக்களுக்கு ஒரு தீர்வை நோக்கிய ஒரு வழியை அவர்கள் காண்பிக்க வில்லை. ஆனால், மக்கள் உங்களைத்தான் நம்பியிருக்கிறார்கள். இந்த இடத்தில் இந்தக் கேள்வியைக் கேட்பது மிகச் சிறப்பாக இருக்கலாம் என்று நினைக்கிறேன்.
என்ன செய்யலாம்? எங்கள் மக்கள் இன்றுவரை உங்களைத்தான் நம்பி இருக்கிறார்கள்?
தமிழர் தலைவர்: அருமையான கேள்வியைக் கேட்டீர்கள். இதில் மிகத் தேவையான பிரச்சினையை மய்யப்படுத்திக் கொண்டு வந்திருக்கிறீர்கள். அதற்காக உங்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கின்றேன்.
இது நாங்கள் மட்டும் எடுக்கின்ற முடிவைப் பொறுத்ததல்ல. நாங்கள் பக்கத்தில் நிற்கின்றவர்கள். தீயை அணைப்பதற்காகவே தீயணைப்புத் துறை இருக்கின்றது. தீயை அணைக்கின்ற துறையினர்தான், அதற்குரிய கருவிகளைப் பயன்படுத்தி, தீயை வேகமாக அணைக்கவேண்டும். ஓரிடத்தில் தீப்பிடித்தால், அக்கம் பக்கத்தில் இருக்கின்றவர்கள், தீயணைப்புப் படையினர் வருகின்றவரை காத்திருக்காமல், எப்படி உடனடியாக அந்தத் தீயை அணைப்பதற்கான முயற்சி களில் ஈடுபடுவார்களோ, அதுபோன்ற பணிகள்தான் எங்களுடைய பணி என்பது.
நாங்கள் எல்லாவற்றையும் செய்துவிட முடியும் என்று சொல்ல முடியாது!
அதேநேரத்தில், தமிழர்கள் பல அணிகளாக –
‘‘பல்குழுவும் பாழ்செய்யும் உட்பகையும்” அப்படி வரக்கூடிய சூழல் ஏற்பட்டதால், நல்ல சூழல்களை யெல்லாம் இழந்திருக்கிறோம். யார் முன்னாலே என்று சொல்லக்கூடிய தன்முனைப்பு இருக்கின்றதே, அந்தத் தன்முனைப்பு இங்கே வரக்கூடாது. நமக்கு வேண்டியது நம்முடைய மக்களின் வாழ்வுரிமைதான். அதுபோன்ற ஒற்றுமை இல்லாத காரணத்தினால்தான், பல நேரங்க ளில் நெருங்கி வரக்கூடிய சூழலில், நீரடித்தால் நீர் விலகாது என்ற பழமொழி இருந்தாலும்கூட, நீர் அடித்ததைவிட, வேறு யாரோ அடித்ததுபோன்று, அது விலகி விலகிச் செல்லுகின்ற நேரத்தில், எங்களால் ஓரளவிற்குத்தான் அதை சரிப்படுத்த முடியுமே தவிர, நாங்கள் எல்லாவற்றையும் செய்துவிட முடியும் என்று சொல்ல முடியாது.
ஏனென்றால், நாங்கள் உதவி செய்யக்கூடிய இடத்தில் இருக்கின்றோமே தவிர, நாங்கள் அதில் கதாநாயகர் அல்ல; ஆனால், கதாநாயகராக இருந்து யார் செய்யவேண்டுமோ, அந்த மக்கள் பல குழுக்களாக இருந்து, யார் பெரியவர்? யாருக்கு என்னவேண்டும்? என்று அன்றைக்குத் தொடங்கி, இன்றுவரையில் அது தொடர்ந்து கொண்டிருக்கின்றதே, அது தமிழர்களுக்கு இருக்கின்ற மிகப்பெரிய பிரச்சினை. என்ன சொல்லுவது?
வெற்றிகள் நெருங்கி வரக்கூடிய நேரத்தில்…
தமிழர்கள் ஜாதிகளால் பிரிந்திருக்கிறார்கள்; மதங்க ளால் அவர்கள் தவிர்க்க முடியாமல் பிரிந்திருக்கலாம். ஆனால், இந்தப் பிரச்சினையில் நாம் ஒன்றுபட வேண்டும் என்று சொல்லக்கூடிய அந்த உணர்வுகள் – வெற்றிகள் நெருங்கி வரக்கூடிய நேரத்தில், பல நேரங்களில், பல காரணங்களைக் காட்டிக் காட்டி, அவர்கள் விலகிப் போகிறார்கள் -எதிரிகள் அதனைப் பயன்படுத்துகிறார்கள்.
ஆகவேதான், அந்த சூழல், இங்கே இருந்து மாறவேண்டும். முதலில். யாரால் கொடுக்க முடியும் என்று சொன்னால், ‘‘எனக்குத் தலைமைத்துவம் முக்கி யமல்ல – என்னுடைய மக்களின் வாழ்வுரிமையும், சுதந்தி ரமும், அவர்களுடைய சிந்தனையும் அடிப்படையாக வரவேண்டும்’’ என்கிற எண்ணம் வரவேண்டும். அதற்கு ஒரு புதிய சிந்தனையோடு வரவேண்டும்.
புதிய பார்வை இப்பொழுது தேவை –
புதிய உணர்வுகள் தேவை!
நடந்தவை, நடந்தவைகளாக இருக்கட்டும்; ஆனால், புதிய பார்வை இப்பொழுது தேவை. புதிய உணர்வுகள் தேவை. அந்தப் புதிய உணர்வுகள் இருக்கின்றனவே, அவை விசாரணை போல போய்க் கொண்டிருக்கக் கூடாது – ‘‘இப்படி நடந்திருந்தால், அவர் அப்படி நடந்தி ருந்தால்” என்று.
ஆங்கிலத்தில் ஒரு பழமொழி உண்டு.
‘Buts’ and ‘ifs’ have no meaning in history
‘‘ஆனால், இப்படி நடந்திருந்தால்” என்றெல்லாம் சொன்னால், – அது விவாதத்திற்குப் பயன்படுமே தவிர, விவகாரத்தை முடிப்பதற்குப் பயன்படாது.
ஆகவேதான், அப்படிப்பட்ட ஒரு சூழ்நிலை, வர வேண்டும் – அது எங்கிருந்து வரவேண்டும் என்றால், இந்த மண்ணிலிருந்து வரவேண்டும்.
(தொடரும்)