சென்னை, செப்.12 சென்னையில் 11,931 மாநகராட்சி பணியாளர்களுக்கு முழு உடல் பரிசோதனை முகாமை மேயர் ஆர்.பிரியா தொடங்கி வைத்தார். சென்னை மாநகராட்சியின் 2024-2025-ஆம் நிதிநிலை அறிவிப்பில், மாநகராட்சிக்கு உட்பட்ட தூய்மைப் பணியாளர்கள் மற்றும் அனைத்து நிலை பணியாளர்களுக்கும் முழு உடல் பரிசோதனை மாநகராட்சி சார்பாக வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதையொட்டி சென்னை மாநகராட்சி பணியாளர்களுக்கான முழு உடல் பரிசோதனைமுகாம், ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் நடைபெற்றது.
மாநகராட்சி மேயர் பிரியா தொடங்கிவைத்து முகாமை பார்வையிட்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: மாநகராட்சியின் 4,571 நிரந்தரப் பணியாளர்கள், 7,360 தற்காலிகப் பணியாளர்கள் என மொத்தம் 11,931 பேருக்கு முதல்கட்டமாக முழு உடல் பரிசோதனை முகாம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
இதில் மொத்தமாக 16 வகையான பரிசோதனைகள் மேற்கொள்ளப்படவுள்ளன. அதன்படி முழு சிறுநீர் பகுப்பாய்வு, ரத்த பரிசோதனை, ரத்த சர்க்கரை, கொழுப்பு பரிசோதனை, கல்லீரல் செயல்பாடு, இசிஜி, டிஜிட்டல் எக்ஸ்ரே, கண் காது பிரச்சினைகள் குறித்த பரிசோதனைகள், பெண்களுக்கு கர்ப்பப்பை புற்றுநோய் பரிசோதனைகள் ஆகியவை மேற்கொள்ளப்படுகின்றன.
சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட அனைத்து பணியாளர்களுக்கும் அடுத்த 3 மாதங்களுக்கு இந்த பரிசோதனைகள் ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை, ஓமந்தூரார் அரசு மருத்துவக் கல்லூரிமருத்துவமனை, கலைஞர் நூற்றாண்டு பல்நோக்கு மருத்துவமனை, அரசு ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ஆகியவற்றில் நடைபெறும். மேலும் மாநகராட்சி பணியாளர்களில் உயர் ரத்தஅழுத்தம், சர்க்கரை நோய்க்கு மக்களைத் தேடி மருத்துவம் மூலம்தொடர்ந்து மருந்துகள் வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்.
மாநகராட்சியில் பணிபுரியும் அனைத்து பணியாளர்களுக்கும் முழு உடல் பரிசோதனை மேற்கொள்ள கட்டணமாக ஒரு நபருக்குரூ.1000 என நிர்ணயிக்கப்பட்டு, முதல்கட்டமாக 11,931 பணியாளர்களுக்கு ரூ.1.19 கோடி மாநகராட்சி மூலம் மருத்துவமனைகளுக்கு செலுத்தப்பட்டுள்ளது. பணியாளர்களுக்கு கூடுதல் சிகிச்சைகள் தேவைப் பட்டால், அரசு திட்டத்துடன் இணைந்து சிகிச்சை வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
சாவிலும் 5 பேருக்கு வாழ்க்கை..
உடல் உறுப்புக் கொடை செய்த
ஈரோடு மனிதநேய விவசாயி..!
கோவை, செப்.12 ஈரோட்டில் மூளைச் சாவடைந்த விவசாயியின் உடல் உறுப்புகள் கொடை செய்யப்பட்டதையடுத்து 5 பேர் மறுவாழ்வு பெற்றுள்ளனர். உடல் உறுப்புக் கொடை அளிக்க முன்வந்த அவரது குடும்பத்தினருக்கு மருத்துவர்கள் நன்றி தெரிவித்துள்ளனர். அதேபோல, உடல் உறுப்புக் கொடை குறித்து பொதுமக்களிடையே அதிக விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றும் மருத்துவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
உடல் உறுப்புக் கொடை செய்பவர்களை ஊக்குவிக்கும் வகையில், தமிழ்நாட்டில் உடல் உறுப்புகள் கொடை செய்வோருக்கு அரசு மரியாதை செலுத்தப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் தற்போதைய நிலவரத்தின்படி சிறுநீரகம், கல்லீரல், இதயம் என பல்வேறு உடல் உறுப்புகள் தேவைப்படுவதாக 7,815 பேர் பதிவு செய்து காத்திருக்கின்றனர்.
உடல் உறுப்புகள் கொடை திட்டம் தொடங்கப்பட்ட நாளில் இருந்து இதுவரை மூளைச் சாவடைந்த 250 பேரிடம் இருந்து 1,330 உடல் உறுப்புகள் கொடையாகப் பெறப்பட்டு நோயாளிகளுக்கு மறுவாழ்வு அளிக்கப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் ஈரோடு மாவட்டம், நம்பியூர், பொலவபாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் பழனிசாமி, ஜேஸ்வரி இணையர். இவர்களது மகன் அய்ங்கரன் வயது 47. இவருக்கு கடந்த ஆகஸ்ட் 31 ஆம் தேதி ரத்த அழுத்தம் அதிகமாகி மூளையில் இரத்த கசிவு ஏற்பட்டு சுயநினைவை இழந்தார். இதையடுத்து, கோவை கே.எம்.சி.எச் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு, அங்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலை யில், கடந்த செப்டம்பர் 7 ஆம் தேதி அய்ங்கரனுக்கு மூளைச்சாவு ஏற்பட்டது . அதனைத் தொடர்ந்து, அவரது பெற்றோர் தங்களது மகன் அய்ங்கரனின் உடல் உறுப்புகளை கொடையளிக்க முன்வந்தனர்.
இதைத்தொடர்ந்து, தமிழ்நாடு உறுப்பு கொடை ஆணையத்தின் அனுமதியுடன் அவரது சிறுநீரகங்கள், கண்கள் மற்றும் தோல் ஆகியவை கொடையாக பெறப்பட்டன. அய்ங்கரனின் சிறுநீரகங்கள் கே.எம்.சி.எச். மருத்துவமனைக்கும், கண்கள் மற்றும் தோல் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கும் வழங்கப்பட்டன. கே.எம்.சி.எச் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை நிபுணர்கள் அய்ங்கரனின் உறுப்புகளை மற்ற நோயாளிகளுக்குப் பொருத்தும் வகையில் உரிய நேரத்தில் திறம்பட செயல்பட்டு உடல் உறுப்புகளை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.