வெளிநாடுவாழ் தமிழ் இந்தியர்கள் சங்கம் சார்பில் வெளி யிடப்பட்டுள்ள கூட்டறிக்கை பின்வருமாறு:
தந்தை பெரியாரின் 146 ஆவது பிறந்தநாள் விழா, செப்டம்பர் 15 ஆம் தேதி ஜப்பானில் நடைபெற இருக்கிறது. இதுதொடர்பாக விழா ஒருங்கிணைப்பாளர்கள் வி.குன்றாளன், ச.கமலக்கண்ணன், இரா.செந்தில்குமார், அ.கோவிந்த பாசம் ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:
தந்தை பெரியார் பிறந்த நாள் விழா, அறிஞர் அண்ணாவின் 116 ஆவது பிறந்த நாள் விழாக்கள் ஜப்பானில் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.
ஜப்பான் வாழ் தமிழர்கள் நிகழ்வினை ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டி ருக்கிறார்கள். ஆண்டுதோறும் வரும் பார்வையாளர்களை விட, மிக அதிக மக்கள் இந்த ஆண்டு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
காரணம் திராவிடர் இயக்கத்தின் மூத்த தலைவராக இருக்கும் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் இந்நிகழ்ச்சியில் பங்கேற்பது பெரும் எதிர்பார்ப்பிற்கும், மகிழ்ச்சிக்கும் உரிய ஒன்றாக இருக்கிறது.
தமது 91 ஆண்டு கால வாழ்வில், 80 ஆண்டுகளைப் பொது வாழ்க்கை யில் செலவழித்துள்ள ஒப்பற்ற தலைவராக அவர் இருக்கிறார்.
இந்நிலையில் செப்டம்பர் 15, டோக்கியோ, ஃபுனாபொரி எனும் இடத்தில், மாலை 5 மணிக்குக் கலை நிகழ்ச்சிகளுடன் விழா தொடங்க இருக்கிறது. அதில் பங்கேற்க நாளை (13.09.2024) காலை ஜப்பான் வருகை தரும் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களையும், மாநிலங்களவை உறுப்பினர் எம்.எம்.அப்துல்லா அவர்களையும் ஜப்பான் வாழ் தமிழர்கள் சார்பில் வரவேற்கிறோம் என்று அக்கூட்டறிக்கையில் கூறப்பட்டுள்ளது.