சென்னை, செப்.11- 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஆதார் கார்டை புதுப்பிக்க வேண்டும் என்று ஒன்றிய அரசு உத்தரவிட்டுள்ளது. தற்போது ஆதார் கார்டை இலவசமாக புதுப்பிக்க வருகிற 14ஆம் தேதி வரை காலஅவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. அதன் காரணமாக கோவை உள்பட தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஆதார் மய்யங்களில் மக்கள் அலைகிறார்கள். ஆனால் சர்வர் பிரச்சினை காரணமாக பொதுமக்கள் அலைக்கழிக்கப்படுகிறார்கள்.
10 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஆதார் கார்டை புதுப்பிக்க வேண்டும் என்று ஒன்றிய அரசு உத்தரவிட்டுள்ளது. தற்போது ஆதார் கார்டை இலவசமாக புதுப்பிக்க வருகிற 14ஆம் தேதி வரை காலஅவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. அப்படி ஆதார் கார்டுகளை புதுப்பிக்க இ-சேவை மய்யங்களில் இரட்டிப்பு கட்டணங்கள் செலுத்த வேண்டும் என ஒன்றிய அரசு அறிவித்துள்ளது.
10 ஆண்டுகளுக்கு முன் ஆதார் கார்டு எடுக்கப்பட்டவர்களின் தற்போதைய உண்மை நிலை என்ன என்பதை அறிந்து கொள்வதற்காகவும், 10 ஆண்டுகளுக்கு முன் ஆதார் கார்டு எடுப்பதற்காக வழங்கப்பட்ட ஆவணமும் தற்போது வைத்திருக்கக்கூடிய அய்டி ப்ரூப், அட்ரஸ் ப்ரூப் மற்றும் உருவத்தின் உண்மைத் தன்மையை அறியவும், 10 ஆண்டுகளுக்கு முன் வழங்கப்பட்ட ஆதார் பயோமெட்ரிக் உடன் தற்போது எடுக்கப்படும் பயோமெட்ரிக்கை உறுதிப்படுத்திக் கொள்வதற்காகவும் இந்த உத்தரவை ஒன்றிய அரசு பிறப்பித்துள்ளது.
இதனால் தமிழ்நாட்டில் பலரும் இ-சேவை மய்யங்களுக்கு படையெடுத்து வருகிறார்கள். ஆனால் ஆதார் புதுப்பிக்க, திருத்தம் செய்ய புதிய இணைய தள வடிவம் வழங்கப்பட்டு இருப்பதாகவும், சர்வர் சரியாக இயங்காததாலும் இந்த பணிகள் சரியாக மேற்கொள்ள முடியவில்லை. இதனால் பலரும் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்லும் நிலையே நீடிக்கிறது.
முன்பு ஒரு நாளைக்கு 50-க்கும் மேலான ஆதார் திருத்தங்களை செய்து கொடுத்த ஊழியர்கள், தற்போது ஒரு நாளைக்கு 20-க்கு மேல் செய்து கொடுக்க முடியவில்லை என்கிறார்கள். சில நேரம் திருத்தம் செய்யும்போது தள்ளுபடி என்று வருகிறதாம். அவ்வாறு வரும்போது தனியார் ஆதார் திருத்தம் செய்பவர்கள் ஒரு தள்ளுபடி விண்ணப்பத்துக்கு ரூ.1,000 அபராதம் செலுத்த வேண்டிய நிலையும் ஏற்படுகிறது. ஒரு நாளைக்கு 4 தள்ளுபடி ஆனாலே ரூ.4 ஆயிரம் செலுத்த வேண்டியது ஏற்படும் என்பதால் இந்த பணியை செய்து கொடுக்க தனியார் இசேவை மய்ய அதிகாரிகள் தயக்கம் காட்டி வருகிறார்கள்.
இது ஒருபுறம் எனில், ஆதார் சர்வர் சீரமைப்புப் பணிகள் நடைபெற்று வருவதால், முன்பு போல் வேகமாக ஆதார் கார்டு பணிகள் மேற்கொள்ள முடியவில்லை.. கடவுச் சீட்டு உள்பட அத்தியாவசிய பணிகளுக்கு ஆதாரில் திருத்தம் செய்ய செல்லும்போது, முன்பு உடனடியாக கிடைத்து வந்தது. ஆனால் தற்போது 45 நாட்கள் வரை ஆகிறதாம். மேலும் 10 ஆண்டு ஆனவர்கள் , ஆதாரை புதுப்பிக்க செல்பவர்களும் அலைந்து திரியும் நிலையில், பல மய்யங்கள் ஆதார் சேவை செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.